ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதன் காரணமாக எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாவை முஸ்லிம் தலைமைகள் வரிந்து கட்டிக் கொண்டு விமர்சிப்பது கிழக்கில் ஒரு தலைமைத்துவம் உருவாகி விடக் கூடாது என்பதனால் ஆகும் என்று உலமா கட்சித் தலைவர் மெளலவி முபாறக் அப்துல் மஜீட் தெரிவித்தார்.
இது தொடர்பாக மெளலவி முபாறக் அப்துல் மஜீட் மேலும் குறிப்பிடும் போது,
ஜனாதிபதி தேர்தலில் பலரும் போட்டியிடுகின்றனர். மூன்று முஸ்லிம்களும் போட்டியிடுகின்றனர். முஸ்லிம் ஒருவரை தலைவராக கொண்ட கட்சியில் நாமல் ராஜபக்ஷ என்ற ஒருவரும் போட்டியிடுகின்றார்.
ஆனாலும் முஸ்லிம் அரசியல்வாதிகளை பார்க்கும் போது இவர்கள் அனைவரும் கடுமையாக விமர்சிப்பது ஹிஸ்புல்லாவை மட்டும்தான்.
அவர் போட்டியிடுவதன் காரணமாக சமூகத்தை காட்டிக்கொடுத்து விட்டார் என்றும், அவரால் வெல்ல முடியுமா? அவரது வாக்குகள் தீர்மானிக்குமா? என்றெல்லாம் மடித்து கட்டிக்கொண்டு கேள்விக்கு மேல் கேள்வி கேட்கிறார்கள்.
பெரும் பொருட் செலவில் மேடை போட்டு தாம் ஏன் சஜித் பிரேமதாசவை ஆதரிக்கிறோம், அவரால் இந்த முஸ்லிம் சமூகம் பெற்ற நன்மை என்ன என்றெல்லாம் மக்களுக்கு சொல்லாமல் ஹிஸ்புல்லாவை கிண்டலடிப்பது ஏன்?
தேர்தலில் டொக்டர் இல்யாஸ் என்ற ஐக்கிய தேசிய கட்சி ஆதரவாளரும் போட்டியிடுகிறார். இவரால் சஜித்துக்கு கிடைக்கும் வாக்குகளும் இல்லாமல் போகலாம். அவரும் சஜித்துக்கு வாக்களிக்கும்படி நேரடியாக சொல்ல முடியாது. அவர் மீது பாசம் கொண்டவன் அவருக்கு மட்டும் புள்ளடி போட்டால் அந்த ஒரு வாக்காலும் சஜித் தோற்கலாம் அல்லவா என யாரும் பேசுவதை, எழுதுவதை காணவில்லை. ஆனால் ஹிஸ்புல்லா என்றதும் தலையில் அடித்துக்கொள்வது ஏன்? ஹிஸ்புல்லாவை பார்த்து சிங்கள அரசியல்வாதிகளை விட முஸ்லிம் அரசியல்வாதிகள் அச்சப்படுவது ஏன்?
விடை மிக சுலபமானது, இன்னொரு பெரும் தலைவன் கிழக்கில் உருவாகி விடக்கூடாது என்பதுதான். இது தவிர வேறு முக்கிய காரணம் இல்லை என்பதே உண்மையாகும்.