ஜனாதிபதி முறைமை ஒழிப்பு முஸ்லிம்களுக்கு சாதகமா? பாதகமா? பதிவு-2


வை எல் எஸ் ஹமீட்-

அமைச்சரவையில் தவறுசெய்து விட்டோமா?
————————————————————-
முதலாவது பதிவில் 1988ம ஆண்டைய ஜனாதிபதித் தேர்தலில் சுமார் 2 1/2 லட்சம் வாக்குகளாலேயே திரு பிரேமதாச வெற்றிபெற்றமையும் மு கா ஆதரவு அவ்வெற்றிக்கு முக்கியமாக அமைந்ததையும் அவ்வாதரவுக்கு பகரமாக வெட்டுப்புள்ளிக் குறைப்பை மறைந்த தலைவர் சாதித்துக்கொண்டமையையும் அன்றிலிருந்து ஜனாதிபதி முறைமை முஸ்லிம்களுக்கு சாதகமானது; என்ற நம்பிக்கை முஸ்லிம்களிடம் வேரூன்றியதையும் சுட்டிக்காட்டியுருந்தோம்.
அதேநேரம் அத்தேர்தலில் மொத்த வாக்களிப்பு வீதம் 50.43 ஆக இருந்தது. அவ்வாக்களிப்பு வீதம் கூடியருந்தால் மு கா ஆதரவுக்கு மத்தியிலும் ஶ்ரீமா வெற்றிபெற்றிருக்கலாம். அவ்வாறு நிகழ்ந்திருந்தால் முஸ்லிம்களின் இன்றைய நிலைப்பாடு மாறியிருக்கலாம்; என்பதையும் குறிப்பிட்டிருந்தோம்.

1994- ஜனாதிபதித் தேர்தல்
————————————-
இத்தேர்தலில் வாக்களிப்பு வீதம் 70.47
சந்திரிக்கா- 4,709,205. (62.28%)
சிறிமா திசாநாயக்க- 2,715,283. (35.95%)

இத்தேர்தலில் மு கா, சந்திரிகாவை ஆதரித்தது. ஆனாலும் வட கிழக்கிற்கு வெளியேயுள்ள பரம்பரை ஐ தே க- முஸ்லிம்கள் ஐ தே கட்சிக்கே பெரும்பாலும் வாக்களித்தனர். அந்தவகையில் சுமார் பாதி முஸ்லிம்கள் சந்திரிக்காவுக்கு வாக்களித்தனர். தமிழர்கள் அத்தேர்லில் பெரிதாக வாக்களிக்கவில்லை. உதாரணமாக யாழ்மாவட்டத்தில் அளிக்கப்பட்ட மொத்தவாக்குகள் 17,716 ஆகும்.
இதிலிருந்து புரிந்துகொள்ளக்கூடியது 50 வீதத்தையும் தாண்டி பெருந்தூரம் தனி பெரும்பான்மை சமூக வாக்குகள் சந்திரிக்காவுக்கு அளிக்கப்பட்டன. அதாவது சிறுபான்மையின் ஆதரவு இல்லாமலே ஒருவர் ஜனாதிபதியாகலாம்; என நிறுவப்பட்ட ஒரு தேர்தல் அதுவாகும்.
இந்த நிலைமைக்கான காரணங்கள்:
எதிரணியில் போட்டியிட்டவர் மிகப்பலயீனமான வேட்பாளர். ( ஶ்ரீமா திசாநாயக்க- காமினி திசாநாயக்கவின் மனைவி)
17 வருட ஐ தே க ஆட்சியில் மக்களுக்கேற்பட்டிருந்த சலிப்பு.
சந்திரிக்கா என்ற புதுவரவின் கவர்ச்சி
சந்திரிக்கா சக்திவாய்ந்த பிரதமராக இருந்துகொண்டு தேர்தலில் போட்டியிட்டமை.
அதேநேரம் 17 வருட ஐ தே க யின் ஆட்சியை ஜனாதிபதித் தேர்தலினூடாக மக்கள் தூக்கிவீசவில்லை. மாறாக, ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னரே நடந்த பாராளுமன்றத் தேர்தலினூடாகவே அது தூக்கிவீசப்பட்டது.
இந்த ஆட்சிமாற்றத்திற்கு பிரதான காரணம் ஶ்ரீ மு காங்கிரசாகும்.
இத்தேர்தல் நிரூபித்த விடயங்கள்:
ஜனாதிபதித் தேர்தலை தீர்மானிக்கும் சக்தி எப்போதும் சிறுபான்மையின் கைகளில் இல்லை. பெரும்பான்மை ஏதோவொரு காரணத்திற்காக ஒற்றுமைப்பட்டால் சிறுபான்மையின் தயவின்றி ஒருவர் ஜனாதிபதியாக வரமுடியும்; என்பதாகும்.
பெரும்பான்மையை ஒற்றுமைப்படுத்துகின்ற உத்தியாகத்தான் கடந்த தேர்தலில் மஹிந்த இனவாதத்தை கையில் எடுத்தார். அதில் அவர் அண்ணளவாக வெற்றியும் பெற்றார்.
கடந்த தேர்தலில் சகல சிறுபான்மை சமூகங்களும் மஹிந்தவுக்கெதிராக 90% இற்குமேல் ஒன்றுபட்டது; ஒரு வரலாற்றுப் பதிவாகும். அதற்குக் காரணம், ஒரு புறம் யுத்த இழப்புக்களால் தமிழ் சமூகம் எதிராக இருந்தமை. மறுபுறம் சகல சிறுபான்மை சமூகங்கள் மீதும் மதவாதத் தாக்குதல் தொடுத்தமை. குறிப்பாக கிறிஸ்தவ தேவாலயங்களும் இனவாதிகளால் தாக்கப்பட்ட சூழலில் சிங்களக் கிறிஸ்தவர்களும் எதிராக வாக்களிக்கும் நிலை ஏற்பட்டது.

சுருங்கக்கூறின் சுமார் 30% வீத சிறுபான்மையும் மஹிந்தவுக்கெதிராக 90% வீதத்திற்குமேல் ஒன்றுபட்ட அபூர்வ சூழ்நிலையால்தான் மஹிந்த தோல்வியடையவேண்டி ஏற்பட்டது. அந்த சூழ்நிலையிலும் வாக்கு வித்தியாசம் 4,49,072 மட்டும்தான். அதேநேரம் வாக்களிப்பு விகிதம் முழு நாட்டிலும் 81.52 ஆகும். இது மிகவும் உச்சக்கட்ட வாக்களிப்பாகும். வாக்களிப்பு வீதம் இன்னுமொரு 5% அதிகரித்திருந்தால் சிறுபான்மையின் அதீத ஒற்றுமைக்கு மத்தியிலும் தனிச்சிங்கள வாக்குகளால் கடந்தமுறை மஹிந்த வெற்றிபெற்றிருக்கலாம்.
இந்நிலையில்தான் அந்த 4 1/2 லட்சத்தில் சுமார் 3 லட்சம் வாக்குகளையும் பெரும்பான்மை சமூகத்திற்கு மத்தியில் இருந்தே அதிகரித்துக்கொண்டால் மொத்த சிறுபான்மையும் ஒன்று சேர்ந்தாலும் தமது வெற்றியைத் தடுக்க முடியாது; என்ற நம்பிக்கையில் அவர்கள் தொடர்ந்தும் இனவாதத்தைக் கக்கிக்கொண்டிருந்தார்கள்.
அதேநேரம் தொடர்ந்தும் மொத்த சிறுபான்மையும் அதேவிதத்தில் ஒற்றுமைப்படும்; என்பது எதிர்பார்க்க முடியாது. ஏன், முஸ்லிம்களே இத்தேர்தலில் பலகோணங்களில் பிரிந்து நிற்கின்றார்கள்.
எனவே, இனவாதத்தை முழுமையாக கையில் எடுக்கின்ற ஒரு தரப்பு சிறுபான்மை ஆதரவின்றி ஜனாதிபதி ஆகுவதற்கான வாய்ப்பு நிறையவே இருக்கின்றது.
இவ்வாய்ப்பு இம்முறை மஹிந்த தரப்பிற்கு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் தற்போது ஏற்பட்டிருக்கின்ற பல்முனைப் போட்டி மண்விழச் செய்திருக்கிறது. குறிப்பாக முன்னாள் ராணுவத் தளபதி மகேஷ் சேனாநாயக்காவும் போட்டியிட இருப்பதாக கூறப்படுகிறது. முன்னாள் பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்காவும் போட்டியிடலாம்; எனப் பேசப்பட்டது. திட்டமாகத் தெரியவில்லை.
இந்நிலையில் பெரும்பான்மை சமூக வாக்குகள் ஆழமாக சிதற வாய்ப்பிருக்கிறது. இந்நிலையில் முஸ்லிம் சமூகம் தம் வாக்குகளை கவனமாக கையாளவேண்டும். அது தொடர்பாக எமது அடுத்த தொடர் கட்டுரையில் தொடர்ந்தும் ஆழமாக ஆராய்வோம்.
இங்கு சுட்டிக்காட்டப்படவேண்டிய முக்கிய அம்சம் என்னவென்றால் சிலவேளை சிறுபான்மையினது, குறிப்பாக முஸ்லிம்களது ஆதரவு இல்லாமல் ஒருவர் இத்தேர்தலில் வெற்றிபெற்றால் இரண்டு வகையான ஆபத்துக்கள் காத்திருக்கின்றன.
ஒன்று: அவ்வாறு வெற்றிபெறுகின்றவர் பேரினவாதம் ஆழமாக விரும்புகின்ற ஒருவராகத்தான் இருக்கமுடியும். அவர் தனது ஆட்சிக்காலத்தில் சிறுபான்மைகளை, குறிப்பாக முஸ்லிம்களை அதிஉச்ச நிலையில் வேட்டையாடுவார்; என்பதில் சந்தேகம் இல்லை.
இரண்டு: அதன்பின் முழு நாட்டிற்கும் சொல்லப்படும் செய்தி, பெரும்பான்மை ஒற்றுமைப்பட்டால் சிறுபான்மைகளின் தயவின்றி ஒருவரை ஜனாதிபதியாக்கலாம்; என்பதாகும். எனவே, ஜனாதிபதியாக வரவிரும்பும் பிரதான வேட்பாளர்கள், கட்சிகளெல்லாம் எதிர்காலத்தில் இனவாதத்தையே கையிலெடுப்பார்கள். சிறுபான்மைகளின், குறிப்பாக முஸ்லிம்களின் எதிர்காலம் எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் மிகவும் சவாலானதாக மாறும்.
சிறுபான்மைகளின் ஆதரவின்றி ஒருவர் ஜனாதிபதியாக வரமுடியாது; என்ற ஒரு பொதுவான பார்வை இன்று பரவலாக இருக்கின்றது. அண்மையில் ஞானசார தேரர் கூட, 70% நாம் இருந்தும் நாமாக ஒரு ஜனாதிபதியை உருவாக்க முடியாமல் இருக்கின்றதே! என அங்கலாய்த்திருக்கின்றார்.

இம்முறை பல்முனைப் போட்டிகாரணமாக பெரும்பான்மை சமூக வாக்குகள் பிரிக்கபடாவிட்டால் இவர்களது ஆதங்கம் இம்முறை நிறைவேறுவதற்கு நிறையவே வாய்ப்பு இருக்கிறது. இவ்வாறான பல்முனைப்போட்டி ஒவ்வொரு தேர்தலிலும் எதிர்பார்க்க முடியாது.
இந்தப் பின்னணியில்தான் ஜனாதிபதி முறைமை ஒழிப்பு முஸ்லிம்களுக்கு சாதகமா? பாதகமா? அமைச்சரவையில் ஜனாதிபதி முறைமை ஒழிப்புக்காக கொண்டுவரப்பட்ட பிரேரணை தூக்கி வீசப்படுவதற்கு நம்மவர்களே பிரதான பங்களிப்பு செய்தது சரியா? பிழையா? என்பது ஆராயப்பட வேண்டும்.

குறிப்பு: இம்முறை பேரினவாதம் சுயமாக ஜனாதிபதியைத் தெரிவுசெய்வதில் இருக்கின்ற ஆபத்திற்கு மத்தியிலும் நமக்கிருக்கின்ற ஆறுதல் பல்முனைப்போட்டி பெரும்பான்மை சமூக வாக்குகளைப் பிரிப்பதானால் பேரினவாதத்தின் இலக்கு தோல்வியடையும் வாய்ப்பாகும்.
அந்த வாய்ப்பை நாம் புத்திசாலித்தனமாக பாவிக்காமல் நாமும் பிரிந்து அந்த பேரினவாதத்தின் இலக்கிற்கு துணைபோக யோசிக்கின்றோமே! நம்மைவிட துரதிஷ்டவசமான சமூகம் இருக்கமுடியுமா?

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -