இந்து சமய விவகார அமைச்சின் ‘தெய்வீக சேவை’ தொடர்பில் மக்களுக்கு தெளிவுப்படுத்தும் விசேடக் கூட்டம் இன்று காலை (31.07.2019) ஜனநாயக மக்கள் முன்னணியின் கண்டி அலுவலகத்தில் நடைபெற்றது.
இதன்போது உரையாற்றுகையிலேயே வேலுகுமார் எம்.பி. மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
“இந்து ஆலயங்கள் உரிய வகையில் பதிவு செய்யப்பட்டாலும் அவற்றின் பரிபாலன சபையை இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களத்தின்கீழ் பதிவுசெய்வதற்கு கோவில் நிர்வாகம் நடவடிக்கை எடுப்பதில்லை.
இதனால் ஆலய அபிவிருத்திக்காக நிதி ஒதுக்கீடு செய்யும்போது சர்ச்சைகள் எழுகின்றன. குறிப்பாக நிதி ஒதுக்கீடுகளை ஆலய பரிபாலன சபையால் நேரடியாக பெற்றுக்கொள்ளமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஆலய பரிபாலன சபை பதிவு செய்யப்படாமையே இதற்கு பிரதான காரணமாகும்.
எனவே, கிராமிய அபிவிருத்தி சங்கம் உட்பட பதிவு செய்யப்பட்ட அமைப்புகள் ஊடாகவே அமைச்சின் நிதி வழங்கப்படுகின்றது. அதன்பின்னர் ஒப்பந்தக்காரர்கள் ஊடாக ஆலய அபிவிருத்திக்கான திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுகின்றன.
இருந்தாலும் சிற்பக்கலையில் தேர்ச்சி பெற்றவர்களே ஆலய அபிவிருத்தி பணிக்கு பொருத்தமானவர்களாக இருக்கும். ஆலய பரிபாலன சபைக்கு நேரடியாக நிதி சென்றால் அவர்கள் ஆகம முறைப்படி திட்டங்களை முன்னெடுக்ககூடியதாக இருக்கும். எனவேதான், கோவில் பரிபாலன சபைகளை உரிய வகையில் பதிவு செய்யுமாறு மீண்டும், மீண்டும் கோரிக்கை விடுத்துவருகின்றோம்.
அதுபோலவே சில கோவில்களும் இன்னும் இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களத்தின்கீழ் பதிவுசெய்யப்படவில்லை. இதனால் நிதி ஒதுக்கீடுகளை வழங்குவதில் சிக்கல் நிலை உருவாகியுள்ளது. இவற்றுக்கு நிரந்தர தீர்வுகாணும் வகையில் கிராமம், தோட்டங்கள்தோறும் நடமாடும் சேவைகளை எதிர்காலத்தில் நடத்த உத்தேசித்துள்ளோம்.” என்றார்.
