கடந்த 20ஆம் தேதி மட்டக்களப்பு கண்ணகிபுரம் கிராமத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் முன்னாள் வட மாகாண முதலமைச்சர் திரு விக்னேஸ்வரன் ஐயா மட்டக்களப்பு மாவட்டத்தில் சுமார் 300 தமிழ் கிராமங்கள் முஸ்லிம் கிராமங்களாக மாற்றப்பட்டு இருப்பதாகவும் 09 ஆயிரத்துக்கு அதிகமான தமிழ் பெண்கள் முஸ்லிம் மதத்திற்கு மாற்றப்பட்டிருப்பதாக இவ்விடயத்தை தன்னிடம் ரத்ன தேரர் கூறியதாகவும் மேற்படி சந்திப்பில் தெரிவித்திருக்கிறார். உண்மையில் இப்படி அப்பட்டமான பொய்களையும் இன நல்லுறவை பாதிக்கின்ற கருத்துகளையும் பொறுப்பு வாய்ந்த முன்னாள் முதலமைச்சர் தெரிவித்திருப்பதை காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம் மிக வன்மையாக கண்டிப்பதாக ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 21 ஆம் திகதி இடம்பெற்ற மிலேச்சத்தனமான குண்டுத் தாக்குதல்களை சிலர் தங்களுடைய வங்குரோத்து அரசியலை வளர்ப்பதற்காக பயன்படுத்துவதை நாம் மிக வன்மையாக கண்டிக்கிறோம். இவ்வாறான கருத்துகளின் ஊடாக பாதிக்கப்படுவது இந்த நாட்டு மக்களின் இன ஒற்றுமையும் சகவாழ்வும் என்பதை முன்னாள் முதலமைச்சர் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும் என்பதை நாம் இந்த இடத்தில் கூறிக்கொள்ள விரும்புகிறோம். எனவே தனக்கு கிடைக்கின்ற இதுபோன்ற கருத்துக்களை ஆராயாமல், தீர விசாரிக்காமல் பொதுத் தளத்தில் கருத்து சொல்வதை இனிமேலாவது இது போன்ற அரசியல் தலைவர்கள் தவிர்ந்து கொள்ள வேண்டும் என்பது எமது நிலைப்பாடாகும். இந்த நாடு கடந்த 30 வருடகால யுத்தத்தினால் மிக மோசமாக பாதிக்கப்பட்டு தற்போது தான் ஓரளவு மக்கள் நிம்மதியாக வாழத் தொடங்கி இருக்கின்ற இச்சந்தர்ப்பத்தில் இவ்வாறான கருத்துக்கள் இந்நாட்டு மக்களை மோசமான கட்டத்தை நோக்கி நகர்த்தும் என்பதை மிகத் தெளிவாகச் சொல்லி வைக்க விரும்புகின்றோம். எனவே முன்னாள் முதலமைச்சர் திரு விக்னேஸ்வரன் அவர்கள் இந்நாட்டு மக்களின் சகவாழ்வுக்கும் இன நல்லுறவுக்கும் தன்னுடைய அரசியலை பயன்படுத்த வேண்டும் என நாம் வினயமாக கேட்டுக் கொள்கின்றோம்.
