வடக்குமாகாண முன்னாள் முதலமைச்சர் சிவி. விக்னேஸ்வரன் அவர்கள் கிழக்குமாகாணத்தில் அரசியல் காய் நகர்த்தல் செய்து காலூன்றுவதற்காக கிழக்குமாகாண முஸ்லிம் சமூகத்தினைக் கொச்சைப்படுத்தும் வகையில் வெளியிட்டுள்ள கருத்துக்களை வன்மையாககண்டிப்பதாக ஏறாவூர் நகரசபையின் முதல்வர் ஐ. அப்துல் வாஸித் தெரிவித்துள்ளார்.
கிழக்கில் முந்நூறு தமிழ்க்கிராமங்கள் முஸ்லிம் பிரதேசங்களாகவும் ஒன்பதாயிரம் தமிழ்ப் பெண்கள் இஸ்லாமிய மார்க்கத்திற்கும் மாற்றப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளமை அப்பட்டமான பொய், முடிந்தால் பெயர்ப்பட்டிலை வெளியிடுமாறும் சவால் விட்டுள்ளார்.
இதுதொடர்பில் நகர முதல்வர் விசேட அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது– கடந்த 30 வருடகாலமாக நடைபெற்ற தமிழ் மக்களின் உரிமைக்கான போராட்டத்தில் சிக்குண்ட முஸ்லிம் சமூகம் ஆறாயிரத்திற்கு மேற்பட்ட அப்பாவி உயிர்களை இழந்து பல்லாயிரக்கணக்கான ஏக்கர் காணிகளையும் கோடிக்கணக்கான ரூபாய் பெறுமதியான சொத்துக்களையும் இழந்துள்ளது. இலட்சக்கணக்கானமக்கள் இருப்பிடங்களைக்கைவிட்டு வெளியேற்றப்பட்டனர்.
அவர்கள் இற்றைவரை முழுமையாக தமது சொந்த இடங்களில் மீளகுடியமர்ந்து வாழ்வாதாரத்தையும் மீளக் கட்டியெழுப்ப முடியாதநிலையில் இருப்பதை வடமாகாண முதலமைச்சர் அவர்கள் மறந்தநிலையில் பேசியிருப்பது வேதனையளிக்கிறது.
குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் வாகரை, கிரான், ஏறாவூர்ப் பற்று மற்றும் வவுணதீவு போன்ற பிரதேச செயலகப் பிரிவுகளில் அமைந்துள்ள முஸ்லிம்களுக்குச் சொந்தமான வாழ்வாதார தொழிற்செய்கை;ககான நிலங்கள் மற்றும் குடியிருப்புக்களுக்குக்கூட இன்றும் செல்லமுடியாத துர்ப்பாக்கிய நிலையில் இருப்பதை வடமாகாண முதலமைச்சர் அவர்கள் அறிந்துகொள்ளவேண்டும்
இதேபோன்றநிலை திருகோணமலைமற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் காணப்படுவதை சுட்டிக்ககாட்ட விரும்புகின்றேன்.
கிழக்குமாகாணத்தில் முன்னூறு தழிழ் கிராமங்கள் முஸ்லிம் கிராமங்களாக மாற்றப்பட்டுள்ளதாக வடமாகாண முதலமைச்சர் அப்பட்டமான பொய்யைக் கூறியுள்ளார்.
அத்தோடு ஒன்பதாயிரம் தமிழ் பெண்கள் இஸ்லாமிய மார்க்கத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாக அத்துரலியரத்னதேரர் கூறியபொய்யான கூற்றை வடமாகாணமுதலமைச்சர் அவர்கள் உண்மைப்படுத்தும் வகையில் வலியுறுத்தியிருக்கிறார். இது சகோதர தழிழ் முஸ்லிம் சமூகங்களைச் சீண்டிவிடும் செயலாகவே பார்க்கின்றோம். முடியுமென்றால் அவ்வாறான கிராமங்களின் பெயர் பட்டியலை வெளியிடுமாறு சவால் விடுகின்றேன்.
வடமாகாணத்தில் ஏற்பட்டுள்ளஅரசியல் வங்குரோத்து நிலையைசீர்செய்யும் நினைப்பில் கிழக்குமாகாணத்தில் சகோதர சமூகங்களை மோதவிடும் செயலை முன்னெடுக்கவேண்டாம் என விக்னேஸ்வரன் ஐயா அவர்களிடம் தயவாய் கேட்டுக்கொள்கின்றோம்
இந்த நாட்டிலே தனியான கலாசார விழுமியம் மற்றும் பண்பாட்டுடனும் முஸ்லிம் சமூகம் வாழ்கின்றது
இலங்கை நாட்டில் தென் பகுதியிலே வாழ்கின்ற முஸ்லிம்கள் சிங்களமொழியைப் பேசுகின்றார்கள் என்பதற்காக சிங்களவர்கள் என்றோ வடக்கு கிழக்கில் வாழுகின்ற முஸ்லிம்கள் தமிழ் மொழியைத் தாய் மொழியாகக் கொண்டுள்ளார்கள் என்பதற்காக தமிழர்கள் என்றோ அடையாளப்படுத்தமுற்படக்கூடாது.
இலங்கை நாட்டில் முஸ்லிம் சமூகத்தின் உரிமைகளையும் சலுகைகளையும் பெற்றுக்கொள்ளும் நோக்குடனேயே முஸ்லிம் காங்கிரஸ் ஆரம்பிக்கப்பட்டதேதவிர தமிழ் மக்களுக்கு எதிராகஉருவாக்கப்பட்ட கட்சி அல்ல. குறிப்பாக தமிழர் போராட்டம் நடைபெற்ற காலப்பகுதியில் முஸ்லிம் இளைஞர்கள் தமிழ் ஆயுதக் குழுக்களினால் பிழையாக வழிநடத்தப்படக்கூடாது என்ற எண்ணத்தைக் கொண்டு முஸ்லிம் இளைஞர்களை
ஜனநாயகவழிக்குள் சங்கமிக்கச் செய்யும் அடிப்படை நோக்கத்துடன் மாமனிதர் அஷ்ரப் முஸ்லிம் காங்கிரஸை ஸ்தாபகம் செய்தார்.
உயிர்த்த ஞாயிறுதினத்தன்று முஸ்லிம் பெயர்களை தாங்கிய ஒரு குழுவினரால் நடாத்தப்பட்ட மிலேச்சத்தனமான தாக்குதலை முழு முஸ்லிம் சமூகமும் கண்டிக்கிறது. இந்தநிலையில் ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்தையும் முன்னாள் முதலமைச்சர் அவர்கள் கோர்த்துவிட முனைவது அவரது அரசியல் தந்திரோபாயமாகவே கருதுகின்றோம்.
ஐயா முதலமைச்சர் அவர்களே! உங்களுக்கு கிழக்கிலும் அரசியல் செய்யவேண்டியநிலை ஏற்பட்டால் தமிழ் மக்களின் தேவைகளை நிறைவேற்றி அடிப்படைஉரிமைகளைப் பெற்றுக்கொடுக்கும் வழிவகைகளைத் தேடுங்கள் அவ்வாறின்றி சகோதர சமூகங்களை மூட்டிவிடுவதையோ முஸ்லிம் சமூகத்தின் மீதுசேறு பூசுவதையோ இத்தோடு நிறுத்திக்கொள்ளுங்கள்.
வடமாகாகணத்திலிருந்து இனச் சுத்திகரிப்புச்செய்யும் நோக்குடன் பலவந்தமாக வெளியேற்றப்பட்ட இலட்சத்துக்கும் அதிகமான முஸ்லிம்களைசொந்த இடங்களில் மீளக் குடியமர்த்துவதற்கு உங்களது அதிகாரகாலத்திலேயே நடவடிக்கை மேற்கொள்ள வக்கற்றநிலையில் நிருவாகம்செய்த நீங்கள், இப்போது கிழக்குத் தமிழர்களை பகடைக்காய்களாகப் பயன்படுத்தி முஸ்லிம் சமூகத்திற்கெதிரான சிந்தனைகளை விதைக்க முனைவது உங்களது வயதுக் கோளாறின் சிறுபிள்ளைத்தனம் என்றே கருதுகின்றோம்.
எமது நாட்டிலுள்ள ஒன்பது மாகாணங்களும் தனித்தனியான நிருவாக அலகுகளாக சுதந்திரமாக இயங்கிவரும் நிலையில் கிழக்குமாகாணத்தை வடக்குமாகாணத்துடன் இணைத்து முஸ்லிம் சமூகத்தை சிறுபான்மையாக, இரண்டாந்தர பிரஜைகளாக மாற்றிக்கொள்வதை முஸ்லிம் சமூகம் ஒருபோதும் அனுமதிக்கமாட்டாது. தமிழ் அரசியல்வாதிகளின் கடந்தாகல மற்றும் அன்மைக்கால நடவடிக்கைகளைக் கொண்டு முஸ்லிம் சமூகம் முறையான பாடத்தைக் கற்றுக்கொண்டுள்ளது. இந்தநிலையில் முஸ்லிம் சமூகத்திற்கெதிராக இனத்துவேசக் கருத்துக்களை வெளியிட்டுவரும் ஐயா விக்னேஸ்வரன் போன்ற அரசியல்வாதிகள் வடக்கும் கிழக்கும் இணைவதற்கு முஸ்லிம் சமூகம் இணக்கம் தெரிவிக்கவேண்டும் என எதிர்பார்ப்பது வெட்கக்கேடானது.
கடந்தகாலங்களில் தமிழ் சமூகத்தின் உரிமைக்காக நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகளின்போது முஸ்லிம் சமூகம் தனித்தரப்பாகபேசுவதற்குக்கூட அங்கீகரிக்க மறுத்த நீங்கள் எதிர்காலத்தில் முஸ்லிம் சமூகத்தின் உரிமைகளை உரியமுறையில் வழங்குவீர்கள் என்பதற்கு எவ்விதமானஉத்தரவாதமும் கிடையாது. ஆகவே கிழக்குத் தமிழர்களை உங்களது அரசியலுக்காக பகடைக்காய்களாக பயன்படுத்தி உசுப்பேற்றுவதற்கு முஸ்லிம் சமூகத்தின்மீது வீண்பழி சுமத்துவதை நிறுத்திக் கொள்ளவேண்டும் என வினயமாய் வேண்டிக் கொள்கின்றோம் என்று குறிப்பிட்டுள்ளார்.