ஜனாதிபதியின் ஆலோசனைக்கமைய முன்னெடுக்கப்படும் தேசிய போதைப் பொருள் ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு சம்மாந்துறை பிரதேச செயலகப் பிரிவிலுள்ள சென்னல் கிராமத்தில் போதை ஒழிப்பு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதற்கமைவாக சம்மாந்துறை பிரதேச செயலகம், சம்மாந்துறை பிரதேச சபை, சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம், சமூகப் பணி மாணவர்கள் இணைந்து ஏற்பாடு செய்த போதைப்பொருள் விழிப்புணர்விற்கமைய வாகனங்கள், கடைகள், வீடுகள், தெருக்கள் போன்றவற்றில் போதைப் பொருள் விழிப்புணர்வு ஸ்டிகர்கள் ஒட்டப்பட்டதுடன் பிரதேச மக்களுக்கு விழிப்புணர்வு துண்டுப்பிரசுரங்களும் வினியோகிக்கப்பட்டன.
சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம்.ஹனீபா தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எஸ்.ரீ.எம்.கபீர், சம்மாந்துறை பிரதேச சபை செயலாளர் எம்.ஏ.கே.முஹம்மட், சம்மாந்துறை பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் எம்.எம்.ஆசீக், தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டு சபையின் அம்பாரை மாவட்ட உத்தியோகத்தர் எம்.எம்.ஜீ.வீ.எம்.றஸாட், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், சமூகப் பணி மாணவர்கள், பொது சுகாதார உத்தியோகத்தர்கள், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.