முஸ்லிம் அரசியல் பிரதிநிதிகள் இன்று (03) அலரி மாளிகையில் நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த ரவூப் ஹக்கீம் மேலும் கூறியாவது;
நாங்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் சமூகம் மாத்திரமல்ல, இந்த நாடும் பெரிய அனர்த்தத்துக்குள் தள்ளப்படுகின்ற ஒரு அபாய நிலை உருவாக்கியிருக்கின்றது. இது சம்பந்தமாக நாங்கள் அரசாங்கத்தின் பல்வேறு மட்டங்களிலும் தொடந்து அழுத்தம் கொடுத்து வருகின்ற நிலையில், நாங்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் மக்களுக்கு உரிய பாதுகாப்பு இல்லாத அச்ச சூழல் இருப்பதை மிகத் தெளிவாக உணர்த்திருக்கிறோம்.
உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலின் பின்னர், அதில் சம்பந்தப்பட்ட அனைவரையும் கண்டுபிடித்து தண்டிப்பதற்கான சகல உதவிகளையும் ஒத்துழைப்புகளையும் நாங்கள் பூரணமாக வழங்கினோம். அப்படியிருந்தும் மிக மோசமான இனவாத கருத்துக்களை பரப்பிவருகின்ற சில சக்திகள் தலையெடுத்து, அவர்களுடைய வெறுப்பு பேச்சுக்களில் எவ்வித தடையும் இல்லாமல் அவர்கள் சுதந்திரமாக செயற்படுகின்ற ஒரு சூழலைப் பார்த்து நாங்கள் எல்லோரும் அச்சப்படுகிறோம். இந்த அச்ச சூழலிலிருந்து இந்த நாடு மீளவேண்டும்.
நாட்டில் இருக்கின்ற சகல மக்களுக்கிடையே நல்லிணக்கம் வரவேண்டும். இந்த நாட்டுக்கு சர்வதேச ரீதியாக இருக்கின்ற நன்மதிப்பு பாதிப்படையக்கூடாது என்பதில் நாங்கள் எல்லோரும் உறுதியாக இருக்கிறோம். இவற்றையெல்லாம் பாதுகாக்கின்ற அதேவேளை, எங்களுக்கு மத்தியில் ஒருசிலருக்கு எதிராக சொல்லப்படும் குற்றச்சாட்டுக்களில் இருக்கின்ற உண்மைத்தன்மை முழுமையாக கண்டறியப்பட வேண்டும். அதற்கான அவகாசத்தை வழங்குவது எங்களுடைய பாரிய தார்மீகப் பொறுப்பாகும்.
அதேநேரம் கூட்டாக நாங்கள் இராஜினாமா செய்வதன்மூலம் நாங்கள் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற சமூகம் படுகின்ற இன்னல்கள், அவலங்கள் சம்பந்தமாக இந்த நாட்டின் சகல பாதுகாப்புத் தரப்பினரும், அரசியல் தலைமைகளும் சரியானதொரு புரிந்துணர்வை அடையவேண்டும்.
இன்று பயங்கரவாதத்தோடு சம்பந்தமில்லாத பலர் சிறு சிறு விடயங்களுக்காக தடுப்புக்காவலில் தவித்துக்கொண்டிருக்கின்றனர். நோன்பு காலத்தில் உச்ச கட்டப் பொறுமையோடும் இதனை சகித்துக் கொண்டிருக்கும் அதேநேரம், அவர்களுக்கான நீதி கிடைக்க வேண்டும்.
அரசாங்கம் இயன்றவரை விரைவாக நடவடிக்கைகளை மேற்கொண்டு, விசாரணைகளை முடிவுக்கு கொண்டுவந்து பயங்கரவாத செயல்களுடன் சம்பந்தப்படாத அப்பாவிகளை விடுதலை செய்வதற்காகவும் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
மக்களுக்கு மத்தியில் பிளவையும் அச்சத்தையும் உருவாக்கும் சக்திகள் அடையாளம் காணப்பட்டு, அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது சம்பந்தமாகவும் அரசு கவனம் செலுத்த வேண்டும்.
பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினால் மாத்திரம் தீவிரவாதம் இருக்கிறது என்று சொல்லிவிட முடியாது. இன்று அந்த பயங்கரவாதத்துக்கு எதிராக பேசுகின்றவர்களும் தீவிரவாதத்தை தூண்டும் மிக மோசமான நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்பது குறித்து நாங்கள் கவலைப்படுகின்ற அதேநேரம், அதுகுறித்து அரசாங்கம் உரிய நடவடிக்கை அவசரமாக எடுக்க வேண்டும் என்றும் எதிர்பார்க்கிறோம்.
எங்களில் ஒரு சிலருக்கு எதிராக ஏதாவது குற்றச்சாட்டுக்கள் இருந்தால், அது சம்பந்தமாக உடனடியாக குற்றப்புலனாய்வு துறை உரிய விசாரணைகளை நடத்தி அதனை முடிவுக்கு கொண்டுவரவேண்டும். அந்த முடிவுகளின் பின்னால், யாரவது குற்றவாளிகளாக குறிப்பாக பயங்கரவாதத்துக்கு துணைபோகின்ற குற்றத்தைப் புரிந்தவர்களாக அடையாளம் காணப்பட்டால், அவர்கள் தண்டிக்கப்படுவதில் எந்த தடையும் இருக்க முடியாது.
இந்த நாட்டிலே நிரந்தர சமாதானம் வரவேண்டும். முஸ்லிம் மக்கள் வெறும் பலிக்கடாக்களாக ஆக்கப்படுகின்ற நிலைமை மாறவேண்டும். தொடர்ந்தும் எங்களை சந்தேகப் பார்வையோடு பார்த்தால், எங்களுக்கு எதிரான நெருக்கடிகளை இனிமேலும் சகித்துக் கொண்டிருக்க முடியாது. இதனால்தான் இது சம்பந்தமாக சரியானதொரு அழுத்தத்தை கொடுப்பதற்காக நாங்கள் இந்த முடிவுக்கு வந்திருக்கின்றோம்.
ஒரு மாத காலத்துக்குள் இந்த விசாரணைகள் முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டும். தொடர்ந்தும் இந்த சந்தேக நிலைமையை வைத்துக்கொண்டிருந்தால், குழப்பம் விளைவிக்கின்ற சக்திகளுக்கு நாட்டிலே மிகப்பெரிய இரத்தக்களரியை உருவாக்குவதற்கு இச்சூழல் பின்புலமாக அமைந்துவிடும். எனவே, இந்த அச்சத்தைக் களைவது அரசாங்கத்தின் தலையாய கடைமையாகும். அதை அவர்கள் செய்ய வேண்டும். இது விடயத்தில் நாங்கள் அவதானத்தோடு பின்வரிசை உறுப்பினர்களாக இருந்துகொண்டு, அரசாங்கத்தின் ஸ்திரத்தன்மைக்கு பாதகமில்லாமல் எங்களது கடமையை அரசாங்க உறுப்பினர்களாக செய்வதற்கு தயாராக இருக்கிறோம்.
நாங்கள் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற மக்களுடைய பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும். நாட்டின் நன்மதிப்புக்கு களங்கமில்லாமல் பாதுக்காப்பு துறையினரும் அனைத்து அதிகாரிகளும் செயற்பட வேண்டும் என்றும் நாங்கள் வினயமாக எதிர்பார்க்கின்றோம்.
அரச மேலிடம் இது சம்பந்தமாக அசமந்தமாக இருக்காமல் அல்லல்படுகின்ற எங்களுடைய மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்காகவும், இந்த பீதி நிலமையை இல்லாமல் செய்வதற்காகவும் முழு நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் என்று நாங்கள் எதிர்பார்க்கின்றோம்.