வவுணதீவு சோதனைச் சாவடியில் இரு பொலிஸார் கொல்லப்பட்ட சம்பவத்தின் பிரதான சந்தேகநபராக, ஹயாத்து மொஹம்மது அஹம்மட் மில்ஹான் என்பவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
புதிய காத்தான்குடி, FC வீதியைச் சேர்ந்த 30 வயதான மில்ஹான், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் மத்திய கிழக்கிலிருந்து இன்றையதினம் (14) குற்றப்புலனாய்வு பிரிவினரால் இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட சந்தேகநபர்களில் ஒருவராவார்.
மில்ஹான் உள்ளிட்ட 5 சந்தேகநபர்கள், ஏப்ரல் 21 ஆம் திகதி இடம்பெற்ற தாக்குதல் சம்பவம் தொடர்பில் மத்திய கிழக்கிற்கு சென்று ஒழிந்திருந்த நிலையில் கைதுசெய்யப்பட்டு, குற்றப் புலனாய்வு பிரிவினரால் இன்று (14) அதிகாலைஇலங்கைக்கு அழைத்து வரப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
குறித்த சம்பவம் தொடர்பில், ஸஹ்ரானின் சாரதியான 'கபூர்' என அழைக்கப்படும் மொஹம்மட் ஷரீப் ஆதம்லெப்பை (53) உள்ளிட்ட இருவர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இன்றையதினம் (14) இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட ஏனைய சந்தேகநபர்கள்:
34 வயதான, மொஹம்மட் மர்சூக் மொஹம்மட் ரிழா - சம்சம் வீதி, மருதமுனை 03
47 வயதான, மொஹம்மட் மொஹிதீன் மொஹம்மட் சன்வாஸ் சப்ரி - சாராஸ் கார்டன், வெல்லம்பிட்டி
29 வயதான, மொஹம்மட் இஸ்மாயில் மொஹம்மட் இல்ஹாம் - கபூரடி வீதி, காத்தான்குடி 01
37 வயதான, அபூசாலி அபூபக்கர் - எல்லவெவ, ஹிஜ்ராபுரம், கெபிதிகொல்லாவ
குறித்த ஐவரும் குற்றப் புலனாய்வு பிரிவின் உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஒருவரின் தலைமையின் கீழான குழுவினரால் கைது செய்யப்பட்டு, சவூதி அரேபியாவின் ஜித்தாவிலிருந்து இன்று (14) அதிகாலை UL282 எனும் விமானத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.
அவர்கள் தற்போது, கொழும்பு குற்றப் பிரிவில் (CCD) தடுத்து வைக்கப்பட்டு மேலதிக விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளனர்.
அதற்கமைய, குறித்த ஐவர் உள்ளிட்ட உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் கைதுசெய்யப்பட்டவர்களில் 102 பேர் தொடர்ந்து தடுத்து வைக்கப்பட்டு விசாரணை செய்யப்படுவதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார்.
அதில் 77 பேர் குற்றப் புலனாய்வு பிரிவிலும் (CID) 25 பேர் தீவிரவாத விசாரணை பிரிவிலும் (TID) தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்குட்படுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.தினகரன்