கல்முனை வடக்கு பிரதேச செயலக உருவாக்கம் முஸ்லிம்கள் எதிரானவர்களல்லர்.


எம்.எம்.எம்.நூறுல்ஹக்
சாய்ந்தமருது -05- 

ல்முனை வடக்கு பிரதேச செயலக தரமுயர்த்துவது தொடர்பிலான சர்ச்சை கடந்த வாரம் பாரிய பிரச்சினையாக மாற்றப்பட்டு அதுவே பேசுபொருளாக்கப்பட்டு இருந்தது. இது ஒரு பெரிய அனர்த்தத்தை ஏற்படுத்தி விட்டுத்தான் முடிவுக்கு வருமோ என்று பலரும் அஞ்சும் வகையில் மும்முரப்பட்டிருந்தது. கல்முனைப் பிரதேசத்திற்கு வெளியே வாழ்கின்ற பெரும்பாலான தமிழ் மக்களும் முஸ்லிம் மக்களும் இங்குள்ள யதார்த்த நிலைகளை சரியாக விளங்கிக்கொள்ள முடியாதவர்களாக இருந்ததினால், தமிழ் மக்கள், தமது கல்முனை சமூகத்திற்கு பாரியதொரு அநியாயத்தை முஸ்லிம் மக்கள் செய்துகொண்டிருப்பதினால் ஏற்பட்ட பிணக்கு என்ற ஒரு கற்பிதம் கட்டமைக்கப்பட்டது.
முஸ்லிம் மக்களைப் பொறுத்தவரை குறிப்பாக வடக்கு ,கிழக்குக்கு மாகாணங்களுக்கு வெளியே வாழ்கின்ற முஸ்லிம்கள் பௌத்த பேரினவாத ஆதிக்க சக்திகளினாலும் அதன் ஊக்கிகளாக செயற்படுகின்ற மதத்தலைவர்கள், அரசியல்வாதிகள் போன்றோர்களினால் மிகுந்த அச்சுறுத்தல்களுக்குள் உள்ளாக்கப்பட்டு மனோ உளைச்சளுக்கும், பொருளாதார இழப்புக்களுக்கும் உள்வாங்கப்பட்டு சற்று ஆறுதல் அடைந்திருந்த நிலையில், மீண்டும் ஒரு கலவர சூழல் பௌத்த துறவிகளினால் கல்முனையில் ஏற்படுத்தப்பட்டு அது நாடு தழுவிய முஸ்லிம்களுக்கு அச்சுறுத்தலாக அமைந்துவிடுமோ என்கின்ற பீதியும் காணப்பட்டது.
இலங்கையின் இனப்பிரச்சினை வரலாற்றில் பௌத்த பேரினவாத ஆதிக்க சக்திகளினாலும் , அதன் மத குருமார்களாலும் பெரிதும் துவம்சம் செய்யப்பட்டு பகையாளிகளாக தமிழ் மக்களினால் கருதப்பட்டு வந்த அணியினரைத் தமது பாதுகாவலர்களாகவும், நேசத்திற்குரிய தோழர்களாகவும் நம்பி, கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரமுயர்த்தி கோருவதற்கு சாகும்வரையான உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கியதன் பின்னணியில் முஸ்லிம்களுக்குப் பாரிய சந்தேகமிருக்கின்றது.
இதன் மறு கருத்தாக சிங்களவர்களும் , தமிழர்களும் ஒன்றுபடக்கூடாதென முஸ்லிம் சமூகம் கருதுவதாக அர்த்தப்படுத்திவிடக்கூடாது. ஏனெனில், இதுவொரு சந்தர்ப்பவாதத்தினதும், சதியினதும் இணைவாகவுமே முஸ்லிம்களினால் பார்க்க வேண்டியிருக்கின்றது. உண்மையில், தமிழ் மக்களுடைய இனப்பிரச்சினையில் உச்சபட்ச கோரிக்கைகளில் முன்னுரிமைப்படுத்தப்பட்ட ஒன்றான “வடக்கு , கிழக்கு இணைந்த சுயநிர்ணய கோட்பாட்டை” இலங்கை அரசாங்கம் அங்கீகரிக்க வேண்டுமென்று தமிழ் மக்களோடு கைகோர்த்து கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கு உரமூட்டிய பௌத்த பிக்குகளின் தலமையில் ஓர் ஆர்ப்பாட்டம் அல்லது உண்ணாவிரதம் செய்வதற்கு தமிழர்களால்தான் முடியுமா அல்லது சிங்கள மதகுருமார்கள்தான் முன்வருவார்களா? என்றொரு கேள்வியை எழுப்பினால் இரண்டும் சாத்தியம் அற்றது என்ற விடை துல்லியமாகக் கிடைத்துவிடும்.
இன்றைய இலங்கையின் அரசியல் சூழலில் முஸ்லிம் மக்கள் வெகுவாக பாதிக்ககப்பட்டுக்கொண்டிருக்கின்றனர். இதற்கு முன்னர் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களும், ஓரணியில் குறிப்பாக வடக்கு கிழக்கு மாகாணங்களில் இவ்விரு சமூகங்களும் ஒன்றுபட்டுவிடக்கூடாது என்பதன் தீவிர எண்ணத்தின் பின்புலத்தில்தான் பௌத்த பிக்குகளின் கல்முனை விடயத்தில் முன்வருகையை அடையாளப்படுத்திக்கொள்வதற்கு அதிக தேடல் தேவையில்லை.
கல்முனை வடக்கு உப பிரதேச செயலகம் என்று மிக அண்மையில் பெயர் சூட்டி அழைக்கப்பட்டாலும், 1989களில் தோற்றுவிக்கப்படுகின்றபோது கல்முனை உதவி அரசாங்க அதிபர் பிரிவு அலுவலகத்தின் ஒரு உப அலுவலகமாகவே இது ஆரம்பிக்கப்பட்டது. இதனை தனியான ஒரு பிரதேச செயலகமாக தரமுயர்த்தப்பட வேண்டுமென்கின்ற அமைச்சரவை அங்கீகாரம் கடந்த 1993களில் வழங்கப்பட்டிருந்தும், அது இன்றுவரை நடைமுறைக்கு வராது இருக்கிறது. இதற்கு காரணம், இங்குள்ள முஸ்லிம் அரசியல் தலைமைகளின் தலையீடு என்று சொல்லப்படுவதின் ஊடாக இங்குள்ள தமிழ் மக்களை முஸ்லிம் மக்கள் நெருக்குவாரங்களுக்குட்படுத்தி வருகின்றனர் என்கின்ற ஒரு விம்பக்கட்டுமானத்தை பெரிதாக காண்பித்து எல்லோருடைய கவனக் குவிப்பையும் தங்கள் பக்கம் சேர்த்துக் கொள்வதற்கு தமிழர் ஆதிக்க சக்திகள் அன்றிலிருந்து இன்றுவரை ஒரு முனைப்புடன் செயற்பட்டு, அதில் தற்காலிக வெற்றியையும் அவர்கள் பெற்றிருக்கின்றார்கள்.
கல்முனை உப பிரதேச செயலகத்தை தரமுயர்த்துவதை முஸ்லிம்கள் ஏன் தடுக்கின்றார்கள்? அதன் நியாயம் என்ன? என்பதை அவதானத்திற்கு எடுத்துக்கொள்ளாமல் ஒரு அத்துமீறலை முஸ்லிம் சமூகம் செய்வது போன்ற பிரமைதான் மேலோங்கிக்காணப்படுகின்றது. உண்மையில் ஒரு பிரதேச செயலகத்தின் ஊடாக மக்களுக்கு வழங்கப்படக்கூடிய நிர்வாக சேவையினை தடுத்து நிறுத்தவேண்டிய எந்தத் தேவையும் இங்குள்ள முஸ்லிம் மக்களுக்கு தேவையாக இருக்கின்ற ஒன்றல்ல. அப்படியிருந்தும், இப்படி தடுக்க முனைகின்றாகள் என்றால், அதற்குப்பின்னாலும் மறுக்க முடியாத நியாயங்கள் இருக்குமென்பது மிக எளிதாக புரியத்தக்கதாகும்.

கடந்த 1989 காலப்பகுதி, குறிப்பாக கல்முனை பிரதேசத்தில் தமிழ் முஸ்லிம் மக்களிடையேயான உறவில் பிணக்குகளும் கசப்புகளும் இருந்து வந்த ஒரு காலம். மற்றும் கட்டமைக்கப்பட்ட ஆயுதக்குழுக்கள் தமிழ் சமூகத்தின் மத்தியில் மேலோங்கி இருந்த ஒர் நிலை அன்று அப்பட்டமாக இருந்தது. மற்றும் கல்முனை உதவி அரசாங்க அதிபர் பிரிவின் உதவி அரசாங்க அதிபராக கடைமையாற்றிய ஜனாப் முயீனுத்தீன் அவர்கள் கிழக்கு மாகாணத்தைக் பூர்வீகமாக கொண்டவர் அல்ல. அதுமட்டுமன்றி அவர் ஒரு அரச நிர்வாகியாகவே எதையும் அணுக வேண்டிய நிர்பந்தமும் அவர் மீது இருதிருக்கும். அதேநேரம் வடகிழக்கு இணைந்த மாகாண சபை முறைமையும் நடைமுறையில் இருந்த காலமென்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்தப் பின்னணியில் கல்முனை பிரதேச செயலக ஆள்புல எல்லைக்குள் வாழ்கின்ற அனைத்து தமிழ் மக்களின் நிர்வாகங்களையும் கையாள்வதற்கேற்ப கிராமசேவகர் பிரிவுகளை வகுத்துக்கொண்டதும், முஸ்லிம் மக்கள் வாழக்கூடிய பிரதேசங்களிலும் அவர்களின் குடிபகுதிகளை அண்மித்துள்ள காணி நிலங்களும், வர்த்தக நிலையங்களும் உட்பட்ட பகுதிகள் தமிழர் நிர்வாக ஆள்புல எல்லைக்குள் வரும்வகையில் பிரித்துக்கொண்ட ஒரு சூழல் அங்கு நடைபெற்றிருக்கிறது. இது ஒரு வெளிப்படைத் தன்மையில்லாத பிரிப்புக்களையும், பங்கீடுகளையும் உள்ளடக்கியதினால் இங்கு வாழக்கூடிய முஸ்லிம்களுக்கு உரித்தான நிலபுலங்களிலும் , உரித்துவரக்கூடிய அரச காணிகளின் பெரும்பகுதிகளும் இன்று தரமுயர்த்தக் கோருகின்ற கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் எல்லைகள் என அவர்கள் இன்று குறிப்பிடுவதற்குள் அடக்கம் பெற்றிருக்கின்றது.
இதனுடைய பாரிய விளைவுகள், தாக்கங்கள் வெளிப்படாமல் இருப்பதற்கு காணி அதிகாரம் அவர்களிடம் இல்லாமலிருப்பபதுதான் காரணமாகும். நிதியை பொறுத்தவரை நேரடியாக முழு அதிகாரம் இல்லாமல் போன்று தோற்றமளித்தாலும், ஏதோவொரு வழியில் அவை அங்கு நிறைவுடையதாக பூர்த்திசெய்யப்படுவதைப் பார்க்கின்றோம். இப்போது தமிழர்களினால் நிர்வகிக்கப்படுகின்ற கிராம சேவகர் பிரிவுகள் அனைத்தையும் உள்ளடக்கியதாகச் சடுதியாக தரமுயர்த்தப்படுதல் என்பது நிரந்தரமாக இங்கு வாழும் முஸ்லிம் மக்களுக்கு செய்யப்படுகின்ற ஒரு அநீதியாகவே அமைய முடியும்.
இந்தப் பயம்தான் ஏட்டிக்குப் போட்டியான தோற்றப்பாட்டைக்கொண்ட போராட்டங்களை முன்னெடுப்பதற்கு முஸ்லிம் மக்களை உந்தித்தள்ளிய பின்னணியென புரிந்துகொள்ளப்படல் வேண்டும். அன்று எவ்வாறு முஸ்லிம் அரசியல் தலைவர்களோடும் அவர்களது குடிமைச் சமூகங்களோடும் வெளிப்படைத்தன்மையாக பேசி உருவாக்கப்படாத உப பிரதேச செயலகம் ஒன்று இன்றைய சமாதான சூழலிலும் அதை ஒத்ததாக செய்யப்படுவதற்கு எத்தனங்கள் ஏற்படுத்தப்படுதல் என்பது தமிழர்களின் ஆதிக்கத்தை மறைமுகமாக முஸ்லிம் மக்கள்மீது திணிப்பதாகவே அர்த்தப்படுத்துகின்றது.
கல்முனை பிரதேச செயலகத்திற்குள் வாழ்கின்ற தமிழ் மக்களை மையப்படுத்திய ஒரு முழுமையான அதிகாரமுடைய பிரதேச செயலகம் உருவாக்கப்படல் வேண்டும் என்றால், இன்றைய நமது நாட்டில் நடைமுறையில் இருக்கின்ற நிர்வாகக்கட்டமைப்பு குறித்தான சட்டதிட்டங்களுக்கு அமைவாகவும், வெளிப்படைத்தன்மையுடனும் அதனைப் பெறுவதற்கு எந்த வழிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என்கின்ற நியதி இருக்கின்றதோ அந்த நியதிகளின் வழி நின்று அடைந்துகொள்வதற்கான முயற்சிகளை தமிழ் அரசியல் தலைமைத்துவங்கள் அவர்களின் குடிமைச்சார் குழுக்கள் என்பன பெற்றுக்கொள்வதற்கு தேவையான அழுத்தங்களை அரசாங்கத்திற்கு முன்வைத்து அதன் வழிமுறையில்தான் கல்முனையில் புதிய பிரதேச செயலகங்கள் உருவாக்கப்பட வேண்டும்.
இந்த வெளிப்படைத்தன்மைக்கு தமிழ்த் தரப்பினர் ஆயத்தமில்லாது , சடுதியாக தரமுயர்த்துவதில் அக்கறை காட்டுவதென்பது நாம் மேலே சுட்டிக்காட்டிய முஸ்லிம்களுக்கு பாதகாமன நிலையில் ஒரு பிரதேச செயலகத்தை உடமையாக்கிக்கொள்வதன் தந்திரம் அன்றி வேறென்னவாக இருக்க முடியும் என்கின்ற ஒரு நியாயபூர்வமான கேள்வி இவ்விடத்தில் எழாமல் இருக்க முடியாது.
தமிழ் தரப்பினர்களிடம் இருக்கக்கூடிய பல்வீனங்களையும், முஸ்லிம்களுக்கு ஏற்படுத்தியிருக்கும் பாதிப்புக்களையும் மறைப்பதற்காகவேண்டி வேறு இரண்டு சொற்பதங்களை வெளிப்படையாக முன்வைப்பதில் கரிசணை காட்டுவதில் இருந்தே அவர்களின் உள்நோக்கத்தை வெளிப்படுத்த போதுமானதாகும். அவையாவன, “பிரதேச செயலகம் என்ன உள்ளூராட்சி அலகா?, நிலத்தொடர்பில்லாமல் நிர்வாகம் அமைந்தால் என்ன?“ என்கின்ற வாசகங்களுக்குள் மக்களை திசை திருப்பி யதார்த்தத்திற்கு முரணான ஒரு நிலைப்பாட்டை மக்களிடையே ஏற்படுத்தி ஏற்பட்டிருக்கும் கொதிநிலையையும், உசுப்பேற்றுதலையும் தொடராக வைத்திருப்பதற்குமான முனைப்பே இது என்பதில் சந்தேகம் இல்லை.

இலங்கையில் உள்ள பிரதேச செயலகங்களை பொறுத்தவரை பெரும்பாலும் அவை ஒவ்வொன்றும் குறித்ததொரு உள்ளூராட்சி மன்றக் கட்டமைப்பைக் கொண்டிருக்கின்றன. இந்நிலையில் கல்முனையில் புதிதாக உருவாக்கப்படும் ஒரு பிரதேச செயலகம் என்பது நாளை உருவாக்கப்பட வேண்டும் என முன்வைக்கக்கூடிய உள்ளூராட்சி மன்றத்தோடும் தொடர்புபடுகின்றது. ஏனெனில், பரவலாக பேசப்படாவிட்டாலும் கூட கல்முனையில் தமிழர்களை மையப்படுத்திய உள்ளூராட்சி மன்றம் ஒன்று தரப்பட வேண்டும் என்கின்ற கோரிக்கைகள் மெல்ல மெல்ல முன்வைக்கப்பட்டு வருவதும் நமது அவதானத்திற்கு அப்பாலானதல்ல.

அந்த வகையில் அதனையும் கருத்தில்கொண்டுதான் கல்முனையில் புதிதாக உருவாக்கப்பட வேண்டிய பிரதேச செயலகச் சிந்தனை உருப்பெற வேண்டுமேயன்றி வெறுமென பிறப்பு இறப்புச் சான்றிதழ் வழங்கும் ஒரு அலுவலம் போல காட்டவேண்டியதில்லை. அதுதான் பிரச்சினை என்றால் அது இன்று அந்த அலுவலகத்தின் ஊடாகவே நடைபெறுகின்றது. அப்படியென்றால், அதற்கு எதிராக தரமுயர்த்தப்பட வேண்டும் என்ற கோரிக்கைக்குப் பின்னால் உள்ளூராட்சி மன்றக் கோரிக்கையும் மறைந்திருக்கின்றது என்பது பரகசிய இரகசியமாகும்.

கல்முனைப் பிரதேச செயலகத்திலிருந்து ஏலவே சாய்ந்தமருது பிரதேச செயலகம் பிரித்து வழங்கப்பட்டிருக்கின்றது. அது வெளிப்படையாக நடைபெற்ற ஒன்று. அதற்கு எல்லைகளாக இனங்காணப்பட்டதற்கு அங்கு முன்பிருந்த கரைவாகுத் தெற்கு கிராம சபை எல்லைகளை அடையாளப்படுத்தியே வழங்கப்பட்டிருக்கின்றது. இந்த உதாரணத்தை கல்முனையில் இன்று புதிதாக உருவாக்கப்பட முனைகின்ற பிரதேச செயலகத்திற்கான எல்லையை அடையாளம் காண்பதற்கு கரைவாகு வடக்கு கிராமாட்சி மன்றத்தின் எல்லைகள் கவனம் பெறவேண்டியும் இருக்கின்றது.

ஏனெனில், அவர்களின் இன்றைய பெயரிடுதலான கல்முனை வடக்கு பிரதேச செயலகம் என்பது அன்றைய கரைவாகு வடக்கு கிராம சபை மன்றத்தை மையப்படுத்தியதாகத்தான் சொல்லப்படுகின்றது. வரலாற்று ரீதியாக செனிட்டரி சபையின் கீழ் கல்முனை இருந்தபோதும் அதன் பின்னர் உருவாக்கப்பட்ட கல்முனை பட்டின சபையாக இருந்த போதும் கல்முனையும் , கல்முனைக்குடியும் இணைந்துதான் இருந்திருக்கின்றது. ஊரின் பெயர்கள் இரண்டும் இரண்டு போல் அமைந்திருந்தாலும், நிலமும், அரசியல் அதிகாரமும் இங்கு ஒன்றாகவே இருந்துவந்திருக்கின்றது என்கின்ற வரலாற்றை யாரும் மறுத்துரைக்க முடியாது.

கல்முனை முஸ்லிம்களை பொறுத்தவரை கல்முனை தமிழ் மக்களை மையப்படுத்தி உருவாக்கப்படவேண்டும் என அவர்கள் கோருகின்ற பிரதேச செயலகத்தை எதிர்க்கின்றார்கள் என்கின்ற ஒரு கோசத்தை முன்னெழுப்பி அதற்குள் தமிழர்கள் தமது அரசியலை முன்னெடுப்பதற்கு வழியேற்படுத்திக் கொள்கின்றனர் என்கின்ற யதார்த்தங்களை முதலில் கல்முனைக்கு வெளியே வாழக்கூடிய தமிழ் அரசியல் சக்திகளும்,அவர்களின் குடிமைச் சமூகமும் உணர்ந்து தெளிந்து இதில் தமது கருத்தாடல்கலையும் , பதிவேற்றங்களையும், களச் செயற்பாடுகளையும் முன்னெடுப்பதற்கு தயாராக வேண்டும்.

உண்மையில் கல்முனையில் வாழகின்ற குடிமைச் சமூகத் தமிழர்களைப் பொறுத்தவரை நமக்கென்று உருவாகும் பிரதேச செயலகத்தை தடுக்கின்ற எதிரிகள் முஸ்லிம்கள் இல்லை என்பதை தெளிவாக உணர்ந்திருந்தாலும், இங்கு மேலெழுகின்ற தமிழ் அரசியல் ஆதிக்க சக்திகளின் கெடுபிடிகளுக்கு முன்னால் நின்றுகொள்ள முடியாது அல்லது எதிர்த்துக்கொள்ள முடியாத கையறு நிலையில் மௌனம் சாதிப்பதை முஸ்லிம் தரப்பு தெளிவாக விளங்கி வைத்துள்ளது.

கல்முனையின் வரலாற்றை பரிபூரணமாக விளங்காதவர்களும், இனவாத அரசியல் கோசங்களின் பின்னால் அள்ளுப்பட்டு செல்கின்ற சிலருடைய பிழையான வழிகாட்டுதல்களின் ஓரங்கமாகவே கல்முனை வடக்கு பிரதேச செயலக உருவாக்கத்திற்கு முஸ்லிம்கள் எதிரானவர்கள் என்று காட்டப்படுகின்றது. இவர்களை வழிநடத்தவேண்டிய தார்மீகப் பொறுப்புடைய தமிழர் தரப்பு மிதவாத அரசியல் சக்திகளும் குடிமைச் சமூகத்தினர்களும் நெறிப்படுத்த முன்வரவேண்டும்.

முறையாக கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை உருவாக்க எடுக்கின்ற நடவடிக்கைகளை முஸ்லிம் தரப்பின் அரசியல் ஆதிக்கம் தடை செய்கின்றது அல்லது தாமதிக்க வைக்கின்றது என்று அவர்கள் கருதுவார்களேயானால், அதற்கு செய்ய வேண்டிய கட்டமைப்பு மூன்றாம் சக்தியைக் கொண்டு வந்து வேண்டத்தகாத விளைவுகளைத் தரக்கூடிய உண்ணாவிரதத்தை மேற்கொள்ள வழிவகுப்பதல்ல. மாறாக இன்றைய அரசியலில் தமிழ் தரப்பிற்கு இருக்கின்ற அரசியல் ஆளுமையை பிரயோகித்து புதிய பிரதேச செயலகத்தை உருவாக்குவதற்கு தேவையான சட்ட நடவடிக்கைகளை வெளிப்படைத்தன்மையோடும் , நீதியோடும் நடைபெறுவதற்கான வழிகளை திறந்துவிடுவதற்கு தேவையான அழுத்தங்களை இன்றைய அரசாங்கத்தின் தலைமையிடமும், அதற்கு உரித்தான அமைச்சரிடமும் பிரயோகிக்க வேண்டும்.

துரித நடவடிக்கைக்கு யார் முட்டுக்கட்டையாக வந்தாலும் அதனை எதிர்ப்பதும், பகிரங்கப்படுத்துவதும் அவர்களுக்குள்ள உரிமையாகும். அந்த அடிப்படையில் நியாயமான எல்லை நிர்ணய குழுக்களை அமைப்பதற்கும் அதன் செயற்பாட்டை விரைவுபடுத்துவதற்கும் தமிழர் அரசியல் சக்திகளுக்கு மூன்றாம் சக்திகளின் உதவி தேவைப்பட்டால் அதனைப் பெற்றுக்கொண்டேனும் அரசாங்கத்திடமும் உரிய அமைச்சரிடமும் தமது முன்னெடுப்புக்களை முன்னெடுக்க வேண்டுமேயன்றி வேறுவழியிலல்ல.

பழையன மறந்து சுமார் 2009 மே தொட்டு இன்று வரை கல்முனையில் வாழக்கூடிய தமிழ் , முஸ்லிம் மக்களிடையே மிகுந்த அமைதியும் ,ஒற்றுமையும் ,சினேகத்தன்மைகளும் வளர்ந்து வரும் இன்றையச் சூழலை உடைத்தெறிந்து ஒரு கலவரச் சூழலுக்கு வித்திடுவது போன்று தமிழர் தரப்பினரின் எத்தனங்கள் அமைந்துவிடக்கூடாது. இந்த யதார்த்த நிலையினை முஸ்லிம் தரப்பினர்கள் வெளிப்படுத்துவதற்கு கையாண்ட ஒரு முறைதான் அண்மைய சத்தியக்கிரக போராட்டமாகும்.

உண்மையில் அது ஏட்டிக்குப் போட்டியாகச் செய்யப்பட்ட ஒன்று அல்ல. மாறாக நேர்மையாக அடைய வேண்டிய ஒன்றை , நேர்மையீனமாக அடைந்துகொள்வதற்கு தமிழ் தரப்பினால் எடுக்கப்பட்ட அடாவடி நடவடிக்கையை தணிப்பதும் நீதியான வழி முறையை உரக்கச் சொல்வதுமே முஸ்லிம் தரப்பினரின் சத்தியாக்கிரக போராட்டத்தின் பின்னணியாகும். அதற்கு வேறு அர்த்தங்கள் கற்பிப்பது முறையல்ல.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -