முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீமின் வாழ்த்துச் செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
தீவிரவாத சிந்தனைப் போக்கின் விளைவாக முஸ்லிம்களில் சிலர் மேற்கொண்ட தற்கொலைத் தாக்குதல்களைத் தொடர்ந்து, அண்மைக்கால வரலாற்றில் முன்னொரு போதும் இல்லாதவாறு இந்நாட்டின் முஸ்லிம் சமூகம் பாரிய சோதனைகளுக்கும், வேதனைகளுக்கும் உள்ளாகியிருக்கும் வேளையில் இவ்வாண்டு “ஈதுல்பித்ர்” ஈகைத்திருநாளை நாம் சந்திக்கின்றோம்.
ஒரு மாதகாலம் பசித்திருந்து, விழித்திருந்து இறைவணக்கத்தில் அயராது ஈடுபட்டு நோன்பு நோற்று மிகவும் இக்கட்டான சூழ்நிலையில் இந்த பெருநாளை சந்திக்க நேர்திருப்பது கவலைக்குரியது.
மூன்று தசாப்தகால கோர யுத்தம் ஓய்ந்து, நாட்டில் சமாதான முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டு வந்த சூழ்நிலையில், நீண்ட இடைவெளியின் பின்னர் ஓரளவு நிம்மதிப் பெருமூச்சு விட்டுக் கொண்டிருந்த மக்கள் மத்தியில் கட்டியெழுப்பப்பட்டு வந்த நல்லிணக்கச் செயல்பாடுகள் ஸ்தம்பித்துப் போய் சந்தேகமும், அச்சமும் ஆழமாக குடிகொள்ள ஆரம்பித்திருப்பது மட்;டுமல்ல, இவ்வளவு காலமாக சமய, சமூக தனித்துவத்தைப் பேணி சிறுபான்மை முஸ்லிம் சமூகம் அனுபவித்து வந்த உரிமைகளைக்கூட பறிகொடுக்கின்ற நிலைமை ஏற்பட்டிருக்கின்றது.
யுத்தம் நடைபெற்று வரும் முஸ்லிம் நாடுகள் சிலவற்றிலும் ஏனைய சில நாடுகளிலும், இலங்கையிலும் பல்வேறு இன்னல்களுக்கு மத்தியில் வாழும் முஸ்லிம்களின் வாழ்வில் மலர்ச்சி ஏற்படவும், சகல இன மக்களும் புரிந்துணர்வுடன் நடந்து கொள்ளவும் அருள்புரியுமாறு எல்லாம் வல்ல அல்லாஹ்வை இறைஞ்சுவோமாக.