ஆறு இலட்சம் புதிய சமூர்த்தி பயனாளிகளுக்கு உரித்துப் பத்திரம் வழங்கும் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் அட்டாளைச்சேனை பிரதேசத்தில் புதிதாக 1733 பேர் விண்ணப்பித்திருந்தவர்களில் 1000 பேருக்கு மாத்திரமே புதிய முத்திரைகள் வழங்கப்பட்டுள்ளது. இதில் 733 பேருக்கு சமூர்த்தி நிவாரன உரித்துப் பத்திரங்கள் வழங்கப்படவில்லை. இந்த 733 பேரும் மிகவும் வறுமைக் கோட்டில் வாழும் குடும்பங்களாகும் இவர்களையும் உள்வாங்கவேண்டும் என்று பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.முஹம்மட் நஸீர் தெரிவித்தார்.
மேலதிகமாக 1000 புதிய சமூர்த்தி பயனாளிகளை தெரிவு செய்வது தொடர்பான விழிப்புணர்வுக் கூட்டமும்இ புதிய சமூர்த்தி பயனாளிகளை எவ்வாறு தெரிவு செய்வது தொடர்பாக சமூர்த்தி உத்தியோகத்தர்களுக்கு விழிப்பூட்டும் கலந்துரையாடல் பிரதேச செயலாளர் ஜே.லியாகத் அலி தலைமையில் நேற்று முன்தினம் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
அங்கு கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
மக்களுக்கு சரியான முறையில் சமூர்த்தி நிவாரண உரித்துப் பத்திரங்கள் சென்றடையவில்லை. பயனாளிகளை தெரிவு செய்யும் விடயங்களில் சமூர்த்தி உத்தியோகத்தர்கள் மிக அவதானமாக நடந்துகொள்ளவேண்டும். அவ்வாறு விடுபட்டவர்களின் சமூர்த்தி நிவாரண விண்ணப்ப படிவங்களை பூர்த்தி செய்து அவர்களின் விண்ணப்பங்களை இம்மாதம் 30 ஆம் திகதிக்குள் விண்ணப்பிப்பதற்கான சகல நடவடிக்கைகளையும் உடனடியாக மேற்கொள்ளவேண்டும். அதற்கான சகல நடவடிக்கைகளையும் நான் முன்னெடுத்துள்ளேன். என்றும் அவர் கூறினார்.
இக்கலந்துரையாடலில், சமூர்த்தி தலைமை முகாமையாளர், சமூர்த்தி உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.