சிறுபான்மையினரை குறிவைக்கும் நம்பிக்கையில்லாப் பிரேரணை.




எம்.ஐ.சர்ஜுன்
சாய்ந்தமருது-

கில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் அமைச்சருமான றிஷாட் பதியுதீனுக்கு எதிரான அவநம்பிக்கை பிரேரணை 66 பாராளுமன்ற உறுப்பினர்களின் கைச்சாத்துடன் இன்று சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் கூறுகின்றன. இந்தப் பிரேரணை எந்த குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் கொண்டுவரப்படுகின்றது என்பதை ஆராய்வதை விடுத்து இந்த சந்தர்ப்பத்தில் எதை அடைந்து கொள்வதற்காக கொண்டுவரப்படுகின்றது என்பது குறித்து கட்சி அரசியலுக்கும் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கும் அப்பாற்பட்டு சிந்திக்க வேண்டிய கடப்பாடு சிறுபான்மையினராகிய தமிழ் முஸ்லிம் மக்கள் ஒவ்வொருவர் மீதும் காணப்படுகின்றது.
இலங்கையில் உள்ள சிறுபான்மையினரை குறிவைத்து இஸ்லாத்தின் பெயரால் சர்வதேச ரீதியில் திட்டமிடப்பட்ட பயங்கரவாத செயற்பாடுகள் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கையில் இந்தப் பயங்கரவாத செயற்பாடுகளுக்கு முற்றாக எதிர்ப்புத் தெரிவிக்கின்ற முஸ்லிம்கள் மீது இனவாத சக்திகளின் வெறியாட்டமும் அரங்கேற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றது.
இந்நிலையில் முஸ்லிம்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி இந்த அநியாயங்களுக்கெதிராக குரல் கொடுக்கும் ஒரு அரசியல் கட்சித் தலைமைகளுள் ஒருவரான றிஷாட் பதியுதீனுக்கு எதிராக கொண்டுவரப்படும் பிரேரணையானது முஸ்லிம் சமுதாயத்தை ஒடுக்க நினைக்கும் திட்டமிட்ட நிகழ்ச்சி நிரலின் ஒரு அங்கமா என சந்தேகத்துடன் நோக்கப்படுகின்றது.
கடந்த காலங்களில் அமைச்சர் றிஷாட் பதியுதீன் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் பல்வேறு தரப்பினரால் முன்வைக்கப்பட்டபோது அவற்றை தக்க ஆதாரங்களுடன் நிரூபித்துக் காட்டுமாறு அமைச்சர் பகிரங்கமாக கேட்டுக்கொண்டுள்ள நிலையில் அதை செய்ய யாரும் முன்வராது குற்றச்சாட்டுகள் வெறும் வாய்ப்பேச்சளவிலேயே உள்ளது.

தமிழ் முஸ்லிம் சமூகங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் கட்சி, இன, மத பேதங்களுக்கு அப்பால் சிந்தித்து இந்த நம்பிக்கை இல்லாப் பிரேரணைக்கு எதிராக வாக்களிக்க வேண்டியது காலத்தின் கட்டாயத் தேவையாகவுள்ளது. இதில் வடக்கு கிழக்கில் தமிழ் மக்களின் அமோக அங்கீகாரத்தை பெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உட்பட மலையக கட்சிகளின் பிரதிநிதிகளும் அத்துடன் பெரும்பான்மைக் கட்சிகளில் அங்கம் வகிக்கும் அனைத்து தமிழ் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும் எதிராக வாக்களிக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
தமிழ் முஸ்லிம் உறவு என்பது தொப்புள்கொடி உறவு என்றும் நாங்கள் தேங்காய்ப்பூவும் பிட்டும்போல் இணைந்து பேசுகின்ற மொழியால் இரண்டறக் கலந்து வாழ்கின்றோம் என்று கூறிக்கொள்ளும் நாம், நமது ஒற்றுமையை செயலில் காட்டுவதற்கான சந்தர்ப்பம் இதுவாகும். ஏனெனில், இந்த தருணத்தில் சில்லறைக் காரணங்களுக்காக நமது ஒற்றுமை சீர்குலைக்கப்பட்டு சிதறடிக்கப்படுமானால் எதிர்காலத்தில் சிறுபான்மையினராகிய நாமே அதற்காக விலையை செலுத்த வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படவும் வாய்ப்புண்டு.
அப்பாவி முஸ்லிம் மக்களுக்கெதிராக காட்டுமிராண்டித்தனமான வன்முறைகளை கட்டவிழ்த்து விடுவதன் ஊடாக இம்மக்களை அடக்கி ஆள நினைக்கும் சக்திகளுக்கு எதிராக தற்போதைய சூழலில் உரிய பாடத்தை கற்பிக்க நாம் தவறுமிடத்து எதிர்காலத்தில் ஏனைய சிறுபான்மை மக்கள் மீதும் அடக்கு முறைகள் பாவிக்கப்படாது என்பதற்கு என்ன உத்தரவாதம் உள்ளது. முப்பது வருடகால யுத்தத்தில் இனவாதிகளால் தமிழ் மக்கள் அனுபவித்த துயரங்கள் இன்றும் அந்த மக்கள் மனதில் நீங்காத வடுக்களை ஏற்படுத்தியுள்ளன.
பல்வேறு காரணங்களைக் காட்டி சிறுபான்மை உறுப்பினர்களை இந்த பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிக்கச் செய்து அதனூடாக தமிழ் முஸ்லிம் உறவுகளில் பிளவுகளை ஏற்பத்தி இன்னுமின்னும் குழப்பங்களைத் தோற்றுவிக்க சில சக்திகள் முனைப்புடன் செயற்படுகின்றதா என்ற அச்சமும் எழுந்துள்ளது. தற்போது முஸ்லிம்கள் எதிர்நோக்கும் ஆபத்துகள் போன்று எதிர்காலத்தில் இவ்வாறானதொரு கொடூரங்களை தமிழ் சமூகம் எதிர்கொள்ள நேரிடுமிடத்து முஸ்லிம்களே அதற்காக ஆதரவை வழங்க முதலில் முன்வருவர் என்பதில் எந்த ஐயுமில்லை. இந்தப் பிரேரணை விடயத்தில் தமிழ் முஸ்லிம் வேற்றுமையைப் பார்த்து விரும்பத்தகாத செயற்பாடுகள் நடைபெறுமாயின் அதுவே இனவாத சக்திகளுக்கு தீனியாகப் போய்விடும்.
அது மட்டுமல்லாது இந்தப் பிரேரணை வெற்றியளிக்கும் பட்சத்தில், இதை ஆதராமாக வைத்தே தமிழ் முஸ்லிம் என்ற வேறுபாடின்றி எந்த சிறுபான்மை அரசியல்வாதியையும் தாம் நினைத்த மாத்திரத்தில் ஒரு நம்பிக்கை இல்லாப் பிரேரணை ஊடாக தகுதியிழக்கச் செய்து தமக்கு தேவையான காரியத்தைச் சாதித்துக்கொள்ள முடியும் என்ற தைரியத்தை இனவாத சக்கதிகளுக்கு ஊட்டிவிடும்.
நல்லாட்சி அரசாங்கம் பாரிய சவாலை எதிர்நோக்கியபோது மஹிந்த தரப்புக்கு தாவி ஆட்சியைக் கவிழ்க்க முற்படாது அரசாங்கத்துடனே இணைந்திருந்து ஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான ஆட்சியைத் தக்க வைப்பதில் பாரிய பங்காற்றிய றிஷாட் பதியுதீனை ஓரங்கட்ட பிரேரணைக்கு ஆதரவாக செயற்பட்டு தன்மீது சேறு பூசிக்கொள்ள ரணில் விக்கிரமசிங்க விரும்ப மாட்டார் என்பதுடன் இதே ஆட்சியை காப்பாற்றுவதில் முக்கிய பங்கு வகித்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைமை புனித மக்காவில் வைத்து றிஷாட் பதியுதீனுடன் ஏற்படுத்திக் கொண்ட உடன்பாட்டை முறித்துகொள்ளவும் விரும்பாது.

இந்த பிரேரணைக்கு ஆதரவு வழங்குவதா இல்லையா என்பது தொடர்பில் பொது எதிரணி இன்னும் தீர்க்கமான முடிவினை எட்டவில்லை என்ற செய்திகளையே காண முடிகின்றது. காரணம், 'இந்த பிரேரணையில் சில தவறுகள் காணப்படுகின்றன என்றும் தவறுகளுடன் சமர்ப்பிக்கப்படும் பிரேரணை தோற்பதற்கே வழிவகுக்கும் என்பதுடன் தோற்கும் பிரேரணையைக் கொண்டுவந்து றிஷாத்துக்காக ஆதரவைப் பெருக்காதீர்கள்' என்று தன்னைச் சந்தித்தவர்களிடம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறியதாக ஒரு செய்தியையும் காணக் கிடைத்தது. இவற்றினடிப்படையில் நோக்கும்போது பிரேரணை தோற்கடிக்கப்படுவதற்கான வாய்ப்பே அதிகமாகக் காணப்படுகின்றது.

எனவே, இந்த அவநம்பிக்கைப் பிரேரணை என்பது ஒரு கட்சியின் தலைவருக்கோ அல்லது தனிப்பட்ட ஒரு அரசியல்வாதிக்கோ எதிராக கொண்டுவரப்பட்டதல்ல, மாறாக சிறுபான்மையின அங்கத்தவர் ஒருவருக்கு எதிராக கொண்டவரப்பட்டது எனக் கருதி பிரேரணையைத் தோற்கடித்து இலங்கையில் உள்ள தமிழ் முஸ்லிம் இன ஒற்றுமையை உலகிற்கு எடுத்துக் காட்டப்பட வேண்டும்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -