"ஒர்பன் கெயார்" அறக்கட்டளை அங்குரார்ப்பண நிகழ்வில் சந்திரிகா
ஐ. ஏ. காதிர் கான்-
சிறுவர் பராயம் முறையாகப் பாதுகாக்கப்பட்டால் இளைஞன், வாலிபன், மனிதன், முதியவன் என்கின்ற வாழ்நாளின் ஏனைய பருவங்களை இலகுவாக வளப்படுத்த முடியும் என்று, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்தார்.
துரதிஷ்ட வசமாக எமது நாட்டில் இரண்டு இலட்சத்திற்கும் அதிகமான அநாதைச் சிறுவர்கள் வாழ்கின்றனர். பயங்கரவாதம், வன்முறைகள், குடும்பத்தகராறு போன்றவற்றினால் பெற்றோர்களை இழக்கும் அல்லது பராமரிப்பாளர்களினால் கை விடப்படும் சிறுவர்களே அநாதைகளாக்கப்படுகின்றனர் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
அநாதைச் சிறுவர்களுக்கான சேமிப்புக்கணக்கை ஊக்கப்படுத்தும் அமானா வங்கியின் "ஒர்பன் கெயார்" (Orphan Care) அறக்கட்டளையின் தேசியத் திட்ட அங்குரார்ப்பண நிகழ்வு, கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில், (29) வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு உரை நிகழ்த்தும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அமானா வங்கிக் குழுமத்தின் தலைவர் ஒஸ்மான் காசீமின் தலைமையில் இடம்பெற்ற இச்சிறப்பு நிகழ்வில், முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா மேலும் பேசும்போது,
ஆதரவற்ற 18 வயதிற்குட்பட்ட சிறார்களை அரவணைத்து, அவர்களுக்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்கென நாடளாவிய ரீதியில் 14 ஆயிரத்து 197 அநாதை இல்லங்கள் இயங்குகின்றன. எனினும், இத்தகைய இல்லங்களில் தமது சிறுவர் பராயத்தைக் கழிக்கும் ஆதரவற்ற சிறார்கள் 18 வயதின் பின்னர் இச்சமூகத்தில் சடுதியாகத் தனித்து விடப்படுகின்றார்கள். வாழ்க்கையின் வளமான காலப்பகுதி என்பது சிறுவர் பருவமாகும். இந்தப் பருவத்திலேயே பராமரிப்பு ஆதரவு துணை இன்றித் தவிக்கும் அநாதை நிலைப்பாடு சிறார்களை நிர்க்கதியாக்குகிறது. ஒரு மனிதனின் வாழ் நாளுக்கான அடிப்படை அத்திவாரமாகவுள்ள சிறுவர் பராயத்திற்கு அநாதை என்கின்ற ஆதரவற்ற நிலை பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றது. வளமான வாழ்வியலைக் கட்டியெழுப்பும் ஆரம்பப் பருவத்தில் இவ்வாறான நிலைமை, சிறுவர்களுக்கு ஏற்படுவதைத் தடுக்க வேண்டியுள்ளது.
சிறுவர் பராயம் முறையாகப் பாதுகாக்கப்பட்டால், அச்சிறுவனது வாழ்நாளின் ஏனைய பருவங்களை இலகுவாக வளப்படுத்த முடியும். இவர்களின் வாழ்க்கையைக் கட்டியெழுப்ப அமானா வங்கி அறிமுகப்படுத்தியுள்ள அநாதைச் சிறுவர்களுக்கான நிதி வைப்புத்திட்டம், அச்சிறுவர்களின் எதிர்காலத்தை நம்பிக்கையூட்டுகிறது.
வாலிபப் பருவத்தை அடைந்து வாழ்க்கைத் தேடலுக்கான அறிவு மற்றும் அனுபவ முதிர்ச்சி ஏற்பட்ட பின்னர், இவ்வாறான வைப்பு நிதிகளை அவர்களின் கைகளில் ஒப்படைப்பது, வாழ்க்கையைத் துணிவுடன் நடாத்திச் செல்வதற்கான தைரியத்தை ஏற்படுத்தும் என்றார்.
இந்நிகழ்வில், மகளிர் மற்றும் சிறுவர் விவகாரங்களுக்கான அமைச்சர் சந்திராணி பண்டார, இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் டாக்டர் இந்திரஜித் குமாரசுவாமி, அமானா வங்கியின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஐமன் சிஜினி உள்ளிட்ட மேலும் பல அதிதிகள் உரை நிகழ்த்தினர்.