பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் (CTA) ஜனநாயத்துக்கும் சுதந்திரத்துக்கும் பாரிய பாதிப்பை ஏற்படுத்தும்


எஸ்.அஷ்ரப்கான்-
நீண்ட காலமாக நடைமுறையிலுள்ள பயங்கரவாத தடைச் சட்டத்தை( PTA) நீக்கி ஐ.தே.கட்சி அரசினால் புதிதாக கொண்டுவரப்படவுள்ள பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் (CTA) ஜனநாயத்துக்கும் சுதந்திரத்துக்கும் பாரிய பாதிப்பை ஏற்படுத்தும் என முன்னாள் அமைச்சர் பஷீர் சேகு தாவூத் இன்று (19) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

அவ்வறிக்கையில் மேலும் அவர் குறிப்பிடும்போது,

"தடையை விட எதிர்ப்பு ஆபத்தானது" என்பதை உணர மனிதர்க்கு விசேட உணர் கொம்புகள் தேவையில்லையல்லவா ? இச்சட்டம் இரகசியமான முறையில் அமைச்சரவையில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

முஸ்லிம்களை மிக மோசமாகப் பாதிக்கப் போகும் இச்சட்டத்தை இன்னும் வாசிக்காத முஸ்லிம் அமைச்சர்கள் அமைச்சரவைத் தீர்மானத்தின் போது பேசா மடத்தைகளாக இருந்தமை "வாழைப்பழத்தை தின்னும் போது வாய் வலிக்கும்" என்று சொன்ன சித்தரின் நக்கல் கருத்தை நினைவூட்டுகிறது.

பயங்கரவாத தடைச் சட்டம் தமிழ் மக்களின் உரிமைக் குரலை நசுக்கி அவர்களை சிறைக் குழிகளுக்குள் தள்ளுவதை இலக்காகக் கொண்டிருந்தது.இச்சட்டம் தமிழரைக் கொல்லும் உரிமைச் சீட்டை பாதுகாப்புத் தரப்புக்கு எழுதிக்கொடுத்திருந்தது.இவ்வாறே முஸ்லிம்களையும், இஸ்லாமியக் கோட்பாடுகளையும், செயற்பாடுகளையும் பயங்கரவாத முலாம் பூசி நசுக்குவதைப் பிரதானமான இலக்காகக் கொண்டு பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம்,தற்போது நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடைச் சட்டத்தை பிரதியீடு செய்கிறது.


இவ்வருடம் வரும் தேசியத் தேர்தலுக்கு முன்னதாக இச்சட்டத்தை நிறைவேற்றி நடைமுறைப்படுத்துவதற்கு இன்றைய அரசு அவசரமாகப் முயல்கிறது.


மஹிந்த தரப்பு இச்சட்டத்தை எதிர்க்கும் நோக்கத்தோடு கருத்துக்களைப் பரிமாறுகிறது. ஜே. வி.பி கொள்கை அடிப்படையில் இச்சட்டத்தை எதிர்க்கும், முஸ்லிம் கட்சிகளும் தமிழ்க் கட்சிகளும் இச்சட்டமூலத்தை நாடாளுமன்றில் எதிர்த்தால் இச்சட்டம் படு தோல்வியடையும்.

தமிழ் பேசும் நாடாளுமன்ற உறுப்பினர்களே! பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை தலை முழுக வைக்க ஒன்று சேருங்கள். இச்சட்டமூலத்தை எதிர்க்க ஒன்றிணைவதன் மூலம் தமிழால் இணையும் புதிய அரசியல் போக்கை உருவாக்குவோம்!

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -