நாடளாவிய ரீதியில் முஸ்லிம்கள் அனைவரையும் பிரதிநிதித்துவம் செய்ய கூடிய தகைமை உடையவர் அதாவுல்லா மாத்திரமே ஆவார்


- அதிருப்தி குழு முக்கியஸ்தர் சட்டத்தரணி பஹீஜ் பரபரப்பு
எஸ்.அஷ்ரப்கான்-
நாடளாவிய ரீதியில் முஸ்லிம்கள் அனைவரையும் அமைச்சரவையில் பிரதிநிதித்துவம் செய்ய கூடிய ஆளுமை, தகைமை, திராணி ஆகியன தேசிய காங்கிரஸ் தலைவர் அதாவுல்லாவுக்கு மாத்திரமே உள்ளன என்று இக்கட்சியில் இருந்து விலகி உள்ள சட்டத்தரணி எம். எம். பஹீஜ் தெரிவித்தார்.

தேசிய காங்கிரஸின் முன்னாள் கொள்கை பரப்பு செயலாளரான இவர் இக்கட்சியில் இருந்து விலகி உள்ளமை தொடர்பாக நேற்று புதன்கிழமை ஊடகவியலாளர்களுக்கு கருத்து கூறியபோதே இவ்வாறு தெரிவித்தார்.

இவர் இது குறித்து தெரிவித்தவை வருமாறு:-
அரசியல் கட்சி என்பது அதிகாரத்தை அடைவதற்கான நெறிமுறை ஆகும். ஆனால் எதிர்கால தேர்தலில் அதிகாரத்தை பெறுவதற்கான வியூகம் எதுவும் தற்காலத்தில் தேசிய காங்கிரஸில் இல்லை. ஆனால் அக்கரைப்பற்றையோ அல்லது அம்பாறை மாவட்டத்தையோ சேர்ந்த முஸ்லிம்களை மாத்திரம் அன்றி நாடளாவிய முஸ்லிம்கள் அனைவரையும் அமைச்சரவையில் பிரதிநிதித்துவம் செய்ய கூடிய ஆளுமை, தகைமை, திராணி ஆகியன அதாவுல்லாவுக்கு மாத்திரமே உள்ளன.
இலங்கை மீதான சர்வதேச நெருக்கடிகள், அரசியல் தீர்வு முயற்சிகள், அரசமைப்பு மாற்ற நடவடிக்கைகள் ஆகியன முக்கியத்துவம் பெற்று உள்ள இக்காலத்தில் பாராளுமன்றத்தில் நிச்சயம் இடம் பிடித்து இருக்க வேண்டியவர் அதாவுல்லா ஆவார். அவர் வர உள்ள தேர்தல் மூலமாக மக்களின் நேரடியான பிரதிநிதியாக பாராளுமன்றம் செல்ல வேண்டும் என்பது எமது எதிர்பார்ப்பு ஆகும்.
கட்சி ஒன்றின் தலைவராக இருந்தும்கூட கடந்த தடவை அமைச்சராக அதாவுல்லா பதவி வகித்தபோது அமைச்சரவையின் கூட்டு பொறுப்பு கருதி பேச முடியாதவராக காணப்பட்டார். இந்நிலையில் இவர் வர உள்ள தேர்தலில் மக்களால் நேரடியாக தெரிவு செய்யப்பட்டு பாராளுமன்றம் சென்றால் ஒழிய நான்கு வருடங்களாக வெளியில் இருந்து பேசி வருகின்ற விடயங்களை பாராளுமன்றத்திலும் சரி, அமைச்சரவையிலும் சரி பேச முடியாதவராகி விடுவார் என்பது திண்ணம் ஆகும்.
ஆனால் வர உள்ள தேர்தலை எதிர்கொள்வதற்கான பொறிமுறை எதுவும் தேசிய காங்கிரஸிடமோ, அதன் தலைமைத்துவத்திடமோ இல்லை. இது கட்சிக்கோ, சமுதாயத்துக்கோ பயன் அளிக்கின்ற விடயம் அல்ல. ஆகவேதான் நாம் இக்கட்சியில் இருந்து விலகுகின்ற தீர்மானத்தை எடுக்க நேர்ந்தது. ஆனால் அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை, எதிரியும் இல்லை, அக்கறைகள் மாத்திரமே நிரந்தரமானவை. சாத்தியமானவற்றை சாத்தியப்படுத்துவதே அரசியல் ஆகும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -