எமது நாட்டின் கல்வி மறுமலர்ச்சிக்காக ஆசியா பவுண்டேஷன் நிறுவனம் பெரும் அர்ப்பணிப்புடன் உன்னத பணியாற்றி வருகின்றது என அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர் ஏ.எம்.ரஹ்மத்துல்லாஹ் தெரிவித்தார்.
அமெரிக்காவை தளமாகக் கொண்ட ஆசியா பவுண்டேஷனினால் அக்கரைப்பற்று கல்வி வலயத்திலுள்ள 72 பாடசாலைகளுக்கு சுமார் எட்டு இலட்சம் ரூபா பெறுமதியான நூல்களை விநியோகிக்கும் நிகழ்வு நேற்று திங்கட்கிழமை (25) அட்டாளைச்சேனை தேசிய பாடசாலையில் நடைபெற்றது. இந்நிகழ்வுக்கு தலைமை வகித்து உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
இந்நிகழ்வில் ஆசிய பவுண்டேஷன் நிறுவனத்தின் புத்தகங்கள் நிகழ்ச்சித் திட்டப் பணிப்பாளர் அன்டன் டி.நல்லதம்பி பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன் அதன் நிபுணத்துவ ஆலோசகர் எம்.ஐ.எம்.வலீத், அக்கரைப்பற்று வலய மற்றும் கோட்டக் கல்வி அதிகாரிகள் மற்றும் அதிபர்களும் பங்கேற்றிருந்தனர்.
அங்கு வலயக் கல்விப் பணிப்பாளர் ஏ.எம்.ரஹ்மத்துல்லாஹ் மேலும் உரையாற்றுகையில் கூறியதாவது;
"புத்தகங்கள் வாசிப்பதன் மூலமே சிறந்த சிந்தனையாளர்கள் உருவாகின்றனர். புத்தகங்களை வாசிப்பதற்கு பாடசாலை மாணவர்கள் ஊக்குவிக்கப்பட வேண்டும். இது விடயத்தில் அதிபர்கள், ஆசிரியர்கள் கூடிய கரிசனை எடுத்துக் கொள்ள வேண்டும். வீண் போக்குகளில் இருந்து மாணவர்களை பாதுகாப்பதற்கு இது பெரிதும் உதவும் என்பதில் சந்தேகம் கிடையாது.
மாணவர்கள் வாசித்து அறிவைப் பெருக்கிக் கொள்ள வேண்டும் என்பதற்காக வழங்கப்படுகின்ற பெறுமதியான புத்தகங்களை வாசிகசாலைகளின் அலுமாரிகளில் பூட்டி வைத்து தூசு படாமல் பாதுகாப்பதில் எவருக்கும் எவ்வித பிரயோசனமும் கிடைக்கப் போவதில்லை. அவற்றை அன்பளிப்புச் செய்வோரின் நோக்கம் இதன் மூலம் சிதறடிக்கப்படுகிறது.
எமது வேண்டுகோளையேற்று தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை, ஜீ.சி.ஈ.உயர்தரம் மற்றும் சாதாரண தரப் பரீட்சைகளின் கடந்த கால வினா, விடை தொகுப்பு நூல்கள் உட்பட கிடைப்பதற்கு அரிய, மிகப்பெறுமதியான புத்தகங்களை கொள்வனவு செய்து, எமது வலயத்திலுள்ள 72 பாடசாலைகளுக்கும் ஒரே நேரத்தில் விநியோகிப்பதற்கு ஆசியா பவுண்டேஷன் எடுத்துள்ள நடவடிக்கை மிகவும் பாராட்டி, போற்றத்தக்கதாகும். இதற்காக அந்நிறுவனத்திற்கும் இதற்காக முன்னின்று உதவிய அதன் சிரேஷ்ட அதிகாரிகளான நல்லதம்பி மற்றும் வலீத் ஆகியோருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கின்றோம்.
இந்த நிறுவனம் எமது நாடு முழுவதும் இப்பணியை முன்னெடுத்து வருகின்றது. எமது நாட்டின் கல்வித்துறையில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தி, நல்ல அறிஞர்களையும் சிந்தனையாளர்களையும் உருவாக்கி, நாட்டை முன்னேற்றுவதை இலக்காகக் கொண்டு செயற்படும் ஆசியா பவுண்டேஷனின் இந்த உன்னத பணியை நாம் மெச்சுகின்றோம்" என்றும் குறிப்பிட்டார்.
இந்த நிறுவனம் எமது நாடு முழுவதும் இப்பணியை முன்னெடுத்து வருகின்றது. எமது நாட்டின் கல்வித்துறையில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தி, நல்ல அறிஞர்களையும் சிந்தனையாளர்களையும் உருவாக்கி, நாட்டை முன்னேற்றுவதை இலக்காகக் கொண்டு செயற்படும் ஆசியா பவுண்டேஷனின் இந்த உன்னத பணியை நாம் மெச்சுகின்றோம்" என்றும் குறிப்பிட்டார்.