கல்முனை சாய்ந்தமருது மற்றும் தமிழ் செயலகம் போன்ற விடயங்களில் சரியான கள நிலவரத்தை அறியாமல் ஜே வி பி பாராளுமன்ற உறுப்பினர் பாராளுமன்றத்தில் உரையாற்றியதை உலமா கட்சி வன்மையாக கண்டித்துள்ளது. இதுபற்றி கட்சித்தலைவர் முபாறக் அப்துல் மஜீத் இன்று (29) தெரிவித்திருப்பதாவது,
சாய்ந்தமருதுக்கான சபையை வழங்குவதில் எந்த பிரச்சினையும் இல்லை என கூறும் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் அவர்கள் கல்முனை வடக்கு, மருதமுனை, கல்முனை மாநகர சபை என்ற சபைகளுக்கான கோரிக்கைகளும் உள்ளன என்று கூறிவிட்டு இவை அத்தனையும் ஒரே நேரத்தில் பிரகடனப்படுத்தப்பட வேண்டும் என கூறியிருந்தால் இது விடயத்தின் உண்மை நிலையை அவர் தெரிந்தவர் என அறியப்பட்டிருக்கும்.
ஆனால் நான்கு சபைகள் பற்றி பேசிவிட்டு சாய்ந்தமருதுக்கு சபை வழங்குவதற்கும் கல்முனை தமிழ் செயலகத்தை தரமுயர்த்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விஜித ஹேரத் கோரிக்கை விடுத்திருப்பதன் மூலம் அவர் கல்முனை முஸ்லிம்களையும் அவர்களது அபிலாஷைகளையும் புறந்தள்ளி யாரோ சிலரை திருப்திப்படுத்த முனைந்துள்ளார் என்பது புரிகிறது.
அத்துடன் பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் தனது அரசியல் காரணத்துக்காகவே இதனை தடுக்கிறார் எனவும் குற்றம் சாட்டியிருப்பது மிக மோசமான அரசியல் காழ்ப்புணர்வின் வெளிப்பாடாகும். உண்மையில் சாய்ந்தமருது பிரச்சினை தீர்வது என்பதே ஹரீசுக்கு அரசியல் லாபமாக இருக்கும். ஆனால் கல்முனையை நான்காக பிரிக்காமல், கல்முனை முஸ்லிம்களின் வர்த்தக நிலையங்கள் உள்ள கல்முனை நகரை தனி முஸ்லிம் கிராம சேவகர் பிரிவுக்குள் உள்ளடக்காமல் கல்முனை தமிழ் செயலகத்தை தரமுயர்த்துவதன் மூலமும் கல்முனையில் மிக மோசமான இன முறுகலும் சமூக முறுகலும் ஏற்படும் என்பதை தெரிந்தே இது விடயத்தில் ராஜாங்க அமைச்சர் நிதானமாக செயற்படுகிறார் என்பதை களத்தில் நிற்கும் எம்மால் உறுதியாக கூறமுடியும்.
இது பற்றி ஜேவிபிக்கு புரியாவிட்டால் பிரச்சினையின் ஓர் அங்கமான கல்முனை அனைத்துப்பள்ளி நிர்வாகத்தை அழைத்து அவர்களுடன் பேசி தெரிந்து கொள்ள முடியும்.
ஆகவே கல்முனையை நான்காக பிரிக்கும் கோரிக்கைகள் உள்ளன என்பதை ஏற்றுக்கொண்ட பா. உ. விஜித ஹேரத் அவ்வாறு நான்காக 1987க்கு முன் இருந்தது போல் பிரிக்க வேண்டும் என்று கோராமல் தனியாக சாய்ந்தமருது பிரதேச சபையும், கல்முனை தமிழ் செயலகத்தை தரமுயர்த்தவும் கோருவதை உலமா கட்சி வன்மையாக கண்டிப்பதுடன் இப்படியான பேச்சுக்கள் மூலம் இன, சமூக முரண்பாடுகளை ஏற்படுத்த வேண்டாம் எனவும் கேட்டுக்கொள்கிறது.