புலிகளை இல்லாதொழித்த படையினரை நீதிமன்றத்திற்கு முன்பாக நிறுத்துவதா பொங்கியெழும் மகிந்த..!

மிழீழ விடுதலைப்புலிகளை ஆயுத ரீதியில் தோற்கடிப்பதற்கு முழுவீச்சாக செயற்பட்ட ஸ்ரீலங்கா படையினருக்கு அதிகபட்ச தண்டனை வழங்குவதற்கான முயற்சிகளில் புலம்பெயர்ந்த தமிழ்ச் சமூகம் ஈடுபட்டு வருவதாக எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச குற்றம் சாட்டியுள்ளார். ஸ்ரீலங்கா படையினர் மீதுள்ள குற்றக் கறைகளில் எந்தவித உண்மையும் இல்லை என்பதை நிரூபிப்பதற்கு ஜெனீவா மனித உரிமைகள் பேரவைக்கு சென்று ஸ்ரீலங்கா அரசாங்கம் கடந்த 4 வருடங்களாக குரல் கொடுக்க தவறியதால் அதன் பிரதிபலன்களை படையினரே அனுபவித்து வருவதாகவும் மஹிந்த ராஜபக்ச சுட்டிக்காட்டினார்.

கொழும்பின் புறநகர் பகுதியான ஹோமாகம – பனாகொட பிரதேசத்திற்கு நேற்றைய தினம் மாலை விஜயம் செய்த எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச, பனாகொட – கந்தவிகாரையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள பௌத்த சொரூபத்தை திறந்து வைத்தார். அதன் பின்னர் அங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மக்கள் கூட்டத்திலும் அவர் உரையாற்றினார்.

யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர முழுமூச்சாக செயற்பட்ட ஸ்ரீலங்கா படையினர் இன்று சிறையில் அடைக்கப்பட்டு வருவதை வன்மையாக கண்டித்த எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச, விடுதலைப்புலிகளின் முன்னாள் போராளிகள் விடுவிக்கப்படுகின்ற நிலையில், அவர்களுக்கு எதிராகப் போராடிய படையினர் சிறைவாசம் அனுபவித்து வருவது நியாயமற்ற செயற்பாடு என்றும் கூறினார்.

அவர் தொடர்ந்தும் கருத்துத்தெரிவிக்கையில்,

நாட்டை காப்பாற்றுவதற்காக போராடிய படையினரை நீதிமன்றத்திற்கு முன்பாக கொண்டு சென்று சிலரை மாதங்களாகவும், வருடங்களாகவும் விளக்கமறியலில் வைப்பதே இன்றைய நிலையாகும். பயங்கரவாதிகளை ஒடுக்கியமை, ஆயுததாரிகளுடன் போராடியமையே இவர்கள் செய்த குற்றமாகும். இதற்காகவே அவர்களுக்கு வேறுவிதமான பதில் அளிக்கப்படுகின்றது.

பயங்கரவாதிகள் பலருக்கு விடுதலை வழங்கப்படுகையில் அவர்களை ஒடுக்குவதற்காக முன்வந்த பொலிஸார் மற்றும் முப்படையினருக்கு அதற்கும் மேலான ஒரு தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று தமிழ் புலம் பெயர்ந்த சமூகம் விரும்புகின்றது. ஜெனீவாவில் இதுகுறித்து கலந்துரையாடப்படுகிறது. இப்படியான நிலையே நாட்டிலும் உலகத்திலும் ஏற்பட்டிருக்கிறது.

சர்வதேசத்திற்கு முன்பாக எமது குற்றமற்ற தன்மையை பேசுவதற்காக கடந்த 4 வருடங்களாக எவரும் செல்லவில்லை. அதனால்தான் அதற்கான பிரதிபலன்களை இன்று அனுபவிக்கின்றோம். இதேவேளை பெருந்திரளான பௌத்த மக்கள் மத்தியில் தொடர்ந்தும் உரையாற்றிய எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச, வடக்கு, கிழக்கு மாகாணங்களில் காணப்படுகின்ற பௌத்த புராதனச் சின்னங்கள் இயந்திர உதவியுடன் இடித்தொழிக்கப்பட்டு வருவதாகவும் அதனை உடனடியாக தலையீடு செய்து அரசாங்கம் நிறுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

விசேடமாக இந்த நிலை குறித்து மட்டுமல்ல, அதனூடாக இன்று விகாரை கட்டப்படுகின்றது போல விகாரைகள் இயந்திரங்களால் இடிக்கப்பட்டு அவற்றின் மீது வீடுகள் கட்டப்படுகின்ற யுகம் இன்று உருவாகியுள்ளது. சில பகுதிகளில் வீடுகள் நிர்மாணிக்கப்படுகின்றன, இன்னும் சில இடங்களில் அவை அழிக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து சில சந்தர்ப்பங்களில் எமது அதிகாரிகள் மௌனித்துள்ளனர். இந்த நிலை நாட்டில் உருவாகியுள்ளது.

இதுதொடர்பாக மக்களை தெளிவுபடுத்துவது அவசியமாகின்றது என நம்புகின்றேன். விசேடமாக வடக்கு, கிழக்கு பகுதிகளில் புராதன சின்னங்களை பாதுகாப்பது எமது கடமையாகும். அரசாங்கத்தின் பொறுப்பாகும். அவற்றை பாதுகாக்க அவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அவற்றை இயந்திரத்தினால் இடித்து அழிக்கப்படுவதற்கு இடமளிக்கின்றமை மிகப்பெரிய குற்றமாகும். அதனால் இந்த நிலை குறித்து விளங்கிக்கொண்டு அறிந்துகொண்டு செயற்படுவது எமது கடமையாகும்.

இன்று விசேடமாக அரசியலமைப்பு ஊடாக மாற்றங்களை செய்து அரசியலமைப்பில் பௌத்த தர்மத்திற்குரிய பாதுகாப்பு குறித்து பல்வேறு யோசனைகள் கொண்டுவரப்படுவதை கண்டிருக்கின்றோம். எமது மகாநாயக்க தேரர்கள் மிகவும் தெளிவாக இந்த நாட்டில் பௌத்த தர்மத்திற்குரிய இடம், முதன்மை என்பது குறித்து பேசியுள்ளனர். அதற்காக அர்ப்பணிப்புடன் செயற்படுகிறார்கள் என்று நாங்கள் நம்புகின்றோம் எனவும் தெரிவித்துள்ளார்.IBC
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -