போதைப் பொருள் பெரும் இலாபம் தரும் வியாபாரமாக சிலர் செய்து வருகின்றனர்


எஸ்.அஷ்ரப்கான்-
போதைப் பொருள் இன்று பெரும் இலாபம் தரும் வியாபாரமாக ஒரு சிலர் செய்து வருகின்றனர். என்று அந்த வியாபாரிகளின் செயற்பாடுகள் காணப்படுகின்றது என்று அகில இலங்கை ஐமாஅதுஸ் ஸலாமாத் தலைவர் அஷ்ஷெய்க் ஆஸாத் அப்துல் முஈத் தெரிவித்தார்.
இன்று (24) ஊடகங்களுக்கு அவர் தெரிவிக்கும் போது, மேலும் குறிப்பிட்டவை வருமாறு,
இவர்களது நோக்கமே வியாபாரமாகத்தான் இருக்கின்றது. அது சமூகத்திலும், நாட்டிலும் ஏற்படுத்தும் பாதிப்புக்கள் எதுவாக இருந்தாலும் அவர்களுக்கு அது பிரச்சினையாக இல்லை. போதைப் பாவனையின் மூலம் யாருக்கு எந்தப் பின்விளைவுகளோ அல்லது பாதிப்புக்களோ எது வந்தாலும் பரவாயில்லை

போதைப் பொருள் அற்ற தேசம்' எனும் மகுடத்தில் நாட்டில் பல்வேறு வேலைத்திட்டங்களை அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது. இதற்கு நாட்டிலுள்ள அனைத்து பிரஜைகள், நிறுவனங்கள், அமைப்புக்கள் தமது முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டிய ஒரு கால கட்டத்தில் எமது நாடு உள்ளது.
இன்று இலங்கையில் போதைப் பாவனை மிகப் பரவலாக அதிகரித்து வருகின்றது. குறிப்பாக இளைஞர்கள் இதனால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏன் பாடசாலை மாணவர்களும் இதற்கு இலக்காக்கப்பட்டுள்ளனர்.
மனிதனுக்கு தீங்கை ஏற்படுத்தும் எந்தவொரு செயலையும், பொருளையும் இஸ்லாம் அங்கீகரிக்கவில்லை. இது பொதுவாக அனைத்து மதங்களும் போதிக்கின்ற அடிப்படையான அம்சமாகும். ஆனால் இன்று மார்க்கம் போதிக்கின்ற விழுமியங்கள், போதனைகளை விட்டும் மனிதன் தூரமாகிக் கொண்டு செல்கின்றான்.
மனிதனை மார்க்கத்தின் வழிகாட்டலில் இருந்து விடுவித்து, மனோ இச்சைகளுக்கு கட்டுப்பட்டு நினைத்த போக்கில் வாழ வைப்பதற்கான பிரயத்தனங்கள் பரவலாக நடைபெறுகின்ற உலகில் நாம் வாழ்கின்றோம். இது சுயநலம் மேலோங்கியுள்ள உலகம். பொது நலன்கள் பற்றி சிந்திப்பது குறைந்து செல்கின்ற காலமாகவும் இருக்கின்றது. பொதுவாக கடைத்தெருக்களை மேலோட்டமாக அவதானித்துப் பார்த்தால் இதன் உண்மையை புரிந்து கொள்ள முடியும்.
வாசிகசாலைகள் அதிகமான இடங்களில் இல்லை. புத்தகசாலைகள் குறைந்து செல்கின்றது. இருக்கின்ற புத்தகசாலைகளுக்கு வருகின்றவர்களின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. ஆனால் ஒருசில இடங்களைத் தவிர அதிகமாக கடைத் தெருக்களில் ஒன்றுக்கு மேற்பட்ட மது விற்பனை நிலையங்கள் உள்ளன. இலங்கை எழுத வாசிக்கத் தெரிந்த நாடுகளில் முன்னணியில் உள்ள ஒரு நாடாகவும் இருக்கின்றது. ஆனால் கல்வியின் மூலம் ஏற்படுத்தப்பட வேண்டிய மாற்றம் குறைவாகவே உள்ளது.

“போதைப்பொருள் அற்ற தேசம்” என்ற அம்சத்தில் அனைவரும் கரிசனை எடுக்க வேண்டும். இது எதிர்கால இருப்புக்கான பாரிய வேலைத்திட்டம். இவ்வேலைத்திட்டம் வெற்றிபெற ஒவ்வொரு தரப்பும் பொறுப்புணர்வுடன் செயற்பட வேண்டும்.
இதில் ஒவ்வொரு தனிநபரும் பொறுப்பாக நடந்து கொள்ள வேண்டும். விற்பனை செய்கின்றவன், பாவிக்கின்றவன் தனக்கும், தன் சமூகத்திற்கும், நாட்டுக்கும் தீங்கைத்தான் ஏற்படுத்துகின்றான் என்பதை சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும்.
பெற்றோரின் பங்கு இங்கு அதிகமானது. தமது பிள்ளைகளை இத்தகைய பிழையான பாவனைகளை விட்டும் பாதுகாப்பதில் முதன்மைக் கடமை இவர்களுக்கு உள்ளது. அவ்வகையில் நல்ல நண்பர்களை பிள்ளைகளுக்குக் காட்டிக் கொடுக்க வேண்டும். ஊர்களில் காணப்படும் நல்ல பயனுள்ள வேலைத்திட்டங்களில் அவர்களை ஈடுபடுத்த வேண்டும்.
ஊர் மட்டங்களில் போதைப்பொருள் பாவனை தொடர்பில் மக்களுக்கு விழிப்புணர்;வு நிகழ்ச்சிகள் செய்ய வேண்டும். சமூக நிறுவனங்கள் இது தொடர்பில் தமக்கு மத்தியில் ஒத்துழைக்க வேண்டும். ஒருங்கிணைப்புடன் இது விடயத்தில் பணியாற்ற வேண்டும்.
“போதைப்பொருள் அற்ற தேசம்” எனும் பரப்பில் பணியாற்றும் பிராந்திய தேசிய சிவில் நிறுவனங்கள் பலப்படுத்தப்பட வேண்டும். இவற்றின் நிகழ்ச்சிகள் பரவலாக்கப்பட வேண்டும்.
இவ்வேலைத்திட்டத்தை பரவலாக முன்னெடுத்துள்ள அரசாங்கத்தின் பணிக்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். போதைப்பொருளுடன் சம்பந்தப்பட்டவர்களுக்கு உரிய நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும். இதில் அரச அதிகாரிகள் சரியசாக கடமையாற்ற வேண்டும்.

எந்த சந்தர்ப்பத்திலும் பொது மக்கள் சட்டத்தை கையில் எடுக்கக்கூடாது. அரச தரப்பினருடன் ஒத்துழைத்து போதைப்பொருளற்ற அழகிய தேசத்தைக் கட்டியெழுப்புவது நாட்டில் பிரஜைகளாகிய எமது அனைவரின் கடமையாகும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -