கட்டாரில் பணிபுரியும் கல்லொழுவை முஸ்லிம் இளைஞர்களின் கல்விப்பணி பாராட்டத்தக்கது - பியனந்த தேரர் புகழாரம்



ஐ. ஏ. காதிர் கான்-
ட்டாரில் தொழில் புரியும் கல்லொழுவை வாழ் முஸ்லிம் இளைஞர்களின் கல்விப் பணி பாராட்டத்தக்கது. இச்சேவை தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட வேண்டும் என, கல்லொழுவை லும்பினி விகாராதிபதி காலி பியனந்த தேரர் புகழாரம் சூட்டினார்.
கட்டாரில் தொழில் புரிவோரின் கல்லொழுவை முஸ்லிம் சங்கம் (GMA - Q) ஏற்பாட்டில், வறிய மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு, (25) செவ்வாய்க்கிழமை மாலை, கல்லொழுவை அல் அமான் முஸ்லிம் மகா வித்தியாலய பிரதான மண்டபத்தில், அதிபர் எம்.எச்.எம். காமில் தலைமையில் இடம்பெற்றது.
இதன்போதே விகாராதிபதி மேற்கண்டவாறு கூறினார். விகாராதிபதி மேலும் இங்கு கருத்துத் தெரிவிக்கும்போது,
கல்லொழுவை கிராமத்தில், சிங்கள முஸ்லிம் சமூகங்களுக்கிடையில், மிக நீண்ட காலந்தொட்டு நட்புறவு பேணப்பட்டு வருகிறது. அந்தவகையில், கல்வித்துறையிலும் இன, மத, மொழி, பேதம் பாராது சகல சமூகத்தவர்களின் பிள்ளைகளுக்கும் இச்சங்கம் இவ்வாறான பணிகளைப் புரிந்து வருவது பாராட்டத்தக்கது. கல்விக்கு உயிர் கொடுப்போர் மரணிப்பதில்லை என்ற வரலாறு உண்டு. இந்த வரலாறுக்கு ஏற்றவாறு, இச்சங்கம் செயற்படுவதும், இந்நிகழ்வில் நான் கலந்துகொள்வதும் தனக்கு மகிழ்ச்சியளிக்கிறது.
கல்லொழுவை கிராமத்து முஸ்லிம் பிள்ளைகள் ஒரு காலத்தில் எட்டாம் வகுப்புடன் தமது படிப்பை முடித்துக் கொள்வார்கள். இது எனக்குள் பெரும் கவலையாக இருந்தது. பெற்றோர்களும் இதில் கவனக்குறைவாக இருந்தார்கள். ஆனால், இன்று இந்நிலைமை மாறியிருப்பதைக் காணும்போது சந்தோஷமாக உள்ளது. இன்று இங்குள்ள பிள்ளைகள், கல்வியில் முன்னேறி பல்வேறு துறைகளிலும் தொழில் புரிந்து வருகின்றார்கள். இவர்களில் ஒரு பகுதியினரே, இன்று கட்டாரிலும் பணி புரிந்து வருகின்றார்கள்.
கட்டாரில் தொழில் புரியும் இக்கிராமத்து இளைஞர்கள், அவர்களின் பணத்தை வீண் விரயம் செய்யாமல் சமூகப்பணி மற்றும் இவ்வாறான கல்விப் பணிகளில் தமது பணத்தைச் செலவிட்டு வருவதை, இத்தருணத்தில் என்னால் மெச்சாமல் இருக்க முடியாது. அவர்கள் பல நலன்புரித் திட்டங்களையும் முன்னெடுத்து வருகின்றார்கள். இவை எல்லாவற்றையும் பார்க்கும்போது, மீண்டுமொருமுறை அவர்களைப் பாராட்டாமல் இருக்க முடியாது.
தானதர்மத்துக்கு இஸ்லாத்தில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. இதனை நான் முஸ்லிம்களின் நோன்பு மாதத்தில் நிறையவே காண்கின்றேன். இவ்வூரிலும் முஸ்லிம்கள் மத்தியில் இவ்வாறான கைங்கரியங்களைப் நிறையவே இடம்பெறுவதைப் பார்க்கின்றேன்.
ஆகவே, மதங்களைப் பார்க்காது மனங்களைப் பார்த்து இச் சங்கம் மேற்கொண்டுவரும் இவ்வாறான கல்விப் பணிகளை, தொடர்ந்தும் முன்னெடுத்து வரவேண்டும் என, நான் உளமாறப் பிராத்திக்கின்றேன். இதற்கான சக்தியையும் வலிமையையும் இறைவன் இச்சங்க உறுப்பினர்கள் அனைவருக்கும் வழங்க வேண்டும் என்றார்.
கல்லொழுவை ஜும்ஆப் பள்ளிவாசல் பிரதம பேஷ் இமாம் மெளலவி எம். நிஸார் (பாரி) இந்நிகழ்வில் கருத்துத் தெரிவிக்கும்போது,
நபிகள் நாயகம் அவர்கள், படிக்கத் தெரியாதவர்கள். என்றாலும், கல்விக்கு முன்னுரிமை வழங்கினார்கள். குர்ஆனில் கூட கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளதுடன், பல இடங்களில் இதுபற்றிக் கூறப்பட்டுள்ளது. எனவே, கல்விக்கு உதவுவோருக்கு ஈருலகிலும் பெரும் பாக்கியம் உண்டு. அந்த பாக்கியத்தை, இந்த ஊரைச் சேர்ந்த இளைஞர்கள் பெற்றிருக்கின்றார்கள். அதுமட்டுமல்ல, இவ்வூரில் வசதிபடைத்த தாராள மனங்கொண்ட பலரும் இருக்கின்றார்கள். அவர்களும் தமக்கு முடியுமான அளவில் உதவிக்கொண்டிருக்கின்றார்கள்.
கட்டாரில் தொழில் புரியும் இந்த ஊரைச் சேர்ந்த இளைஞர்கள், எமது சிறார்களின் கல்வி விடயத்தில் அக்கரை எடுத்து, கல்விச் சமுதாயமொன்றைக் கட்டியெழுப்ப முன்வந்திருக்கின்றார்கள். இதற்கான கூலியை அல்லாஹ் அவர்களுக்கு நிச்சயம் வழங்குவான்.
இன்று முஸ்லிம்களிடமிருந்து ஒழுக்க விழுமியங்கள் எடுபட்டுப்போவதைப் பார்க்கின்றோம். இஸ்லாம் கூறும் சிறந்த அறிவுரைகள், இன்று குறைவாகவே உள்ளது. எமது வழிமுறைகளை, இன்று ஏனைய சமுதாயத்தினர் பின்பற்றுகின்றார்கள். அதிகாலையில் எழுந்து படிக்கின்றார்கள். இரவிலும் நீண்ட நேரம் கற்கின்றார்கள். எமது பிள்ளைகள், விளையாட்டுக்களிலும் வீண் பொழுது போக்குகளிலும் காலத்தையும், நேரத்தையும் கழித்து வருகின்றார்கள். ஆகவே, பெற்றோர்கள் இது விடயத்தில் கண்ணுங்கருத்துமாக இருந்து, பிள்ளைகள் வளர்ப்பில் அதி தீவிர அக்கரை செலுத்த வேண்டும் என்று கூறினார்.
இச்சங்கம் உருவாக்கப்பட்டு அதன் உறுபினர்கள், மூன்று வருடங்களிலும் பள்ளிவாசல் பணிகளுக்கும், கல்வி நடவடிக்கைகளுக்கும், வறிய மக்களின் தேவைகளுக்கும் உதவி வருகின்றார்கள். எனினும், அவர்களின் பணிகள், மூன்று வருடங்களில் மக்கள் மயப்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இச்சிறப்பு நிகழ்வில், மினுவாங்கொடை பிரதேச சபை உறுப்பினர்களான கப்பார் ஹாஜி, டெஸ்மன் சில்வா, உதவி அதிபர் ரிழான், மினுவாங்கொடை கல்வி வலய தமிழ்ப்பிரிவு ஆலோசகர் ஏ.ஏ.எம். றிஸ்வி, லேக்ஹவுஸ் தமிழ்ப்பிரசுரங்களுக்கான ஆலோசகரும் கம்பஹா மாவட்ட எழுத்தியக்கத் தலைவருமான எம்.ஏ.எம். நிலாம், ரீ.டப்ளியூ.ஏ. வஹ்ஹாப் (மு.மி.பி.உ.), எம்.ஜீ.எம். சியாத் உள்ளிட்ட சங்க உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர்.







இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -