பாதுகாப்பு அச்சுறுத்தலுள்ள பாராளுமன்ற உறுப்பினர்களின் வாழ்க்கையைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பும் கடமையும் சபாநாயகருக்கும் உள்ளது.
இந்த வகையில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்குத் தேவையான சகல பாதுகாப்பு ஏற்பாடுகளையும் சபாநாயகரே செய்ய வேண்டும். இந்த நியதிக்கு உட்பட்டு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் தனக்கு விடுக்கப்பட்டுள்ள கொலை அச்சுறுத்தல் தொடர்பில் கவனம் செலுத்துமாறு சபாநாயகரிடம் சபையில் விடுத்த கோரிக்கையை எவரும் சவாலுக்கு உட்படுத்தவோ மலினப்படுத்தவோ முடியாது.
தனிப்பட்ட, அரசியல் கோபதாபங்களின் பின்னணிகளிலன்றி பெறுமதியான உயிரைக் காக்கும் மனிதாபிமானமாகவே இதைக் கருதவேண்டும்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபாய ராஜபக்ஷ ஆகியோரின் கொலை சதி முயற்சிகளை வெளிச்சத்துக்கு கொண்டு வந்த நாமல்குமார என்பவரே மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாத் பதியுதீனைக் கொலை செய்வதற்கான முயற்சிகளையும் அம்பலப் படுத்தினார். அவரது குரல் பதிவில் இந்த சதி முயற்சி தெளிவாகத் தெரிகின்றது.
இக்கொலை முயற்சிகள் அம்பலமான மறுகணமே ஜனாதிபதியினதும், கோட்டாபாயவினதும் பாதுகாப்புகள் பலப்படுத்தப்பட்டன. ஆனால் தனது பாதுகாப்பு ஏற்பாடுகள் எதுவும் செய்யப்படவில்லை என்பதனையே அவர் சபையில் சபாநாயகரிடம் சுட்டிக்காட்டினார். விசேட ஏற்பாடுகளை செய்யாவிட்டாலும் உள்ள பாதுகாப்புக்களை விலக்கிக் கொண்டது ஏன்? விசேட அதிரடிப்படையினருடன் முப்பது பொலிஸார் பாதுகாப்பு வழங்கிய அவரை இப்போது வெறும் இரண்டு பொலிஸாரே பாதுகாக்கின்றனர். இந்த விடயத்தை அவர் சபையில் சுட்டிக்காட்டினார்.
முஸ்லிம்களைப் பொறுத்த வரை ஆண்டவனுக்கு அடுத்ததே ஏனைய பாதுகாப்பு ஏற்பாடுகள் என்பது அவர்களது நம்பிக்கை. இங்கே பாதுகாப்பு ஏற்பாடுகளைப் பற்றி ரிஷாட் அலட்டிக் கொண்டதாகத் தெரியவில்லை.
இவ்விடயத்தில் செலுத்தப்பட்ட பாரபட்சமே அவரைக் கவலையில் ஆழ்த்தியுள்ளது.
பிரமுகர்களின் உயிர்கள் படுகொலைகளால் பலாத்காரமாகப் பறிக்கப்படக்கூடாது என்பதற்காகவே பாதுகாப்புகள் வழங்கப்படுகின்றன.
நாமல்குமாரவின் தகவல்களில் உண்மை இருந்ததாலேயே ஜனாதிபதி, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாவின் பாதுகாப்புகள் உடனடியாக அதிகரிக்கப்பட்டன. அதே நாமல் குமாரவே ரிஷாதுக்குள்ள அச்சுறுத்தல்களையும் அம்பலப்படுத்தினார்.
இந்த நியாயம், தர்மம், மனிதாபிமானங்களுக்கு உட்பட்டுத்தான் முகநூல் பதிவாளர்கள் தமது நிலைப்பாடுகளையும் கருத்துக்களையும் பதிவிட வேண்டும். தாங்கள் நினைத்ததையெல்லாம் பதிவிட்டு சமுதாயத்தை குழப்பத்தில் ஆழ்த்தக்கூடாது என்பதுதான் எமது நிலைப்பாடு.