T.B. ஜாயா காணி குறித்து மாகாண சுகாதார அமைச்சின் செயலாளருடன் சந்திப்பு
கிண்ணியா தள வைத்தியசாலையில் காணப்படும் இடவசதியின்மை, காணிப் பிரச்சினை, ஆளணிப் பிரச்சினை மற்றும் இடமாற்றங்கள் குறித்து கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் ஏ.எச்.எம். அன்சார் , மற்றும் கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் எஸ். அருள்குமரன் ஆகியோருடனான கிண்ணியா நகரசபை உறுப்பினர் எம்.எம். மஹ்தி அவர்களின் சந்திப்பு நேற்று (10) காலை திருகோணமலையில் உள்ள மாகாண சுகாதார அமைச்சில் நடை பெற்றது.
இச்சந்திப்பின் போது தற்போது கிண்ணியா தள வைத்தியசாலையில் காணப் படுகின்ற இடநெருக்கடி, ஆளணிவளம், காணிப் பிரச்சினைகள் குறித்து விரிவாக எடுத்துக் கூறப்பட்டுள்ளது.
இதன் விளைவாக வைத்தியசாலைக்கு அருகில் இரு மருங்கிலும் உள்ள இலங்கை மின்சார சபைக்கு சொந்தமான காணியையும் , T.B. ஜாயா வித்தியாலய காணியையும் வைத்திய சாலைக்கு சட்ட ரீதியாகப் பெற்றுக் கொள்ளும் நோக்கில் மாகாண சுகாதார அமைச்சினால் மேற்கொள்ளப் படவேண்டிய ஆரம்ப கட்ட ஆவணங்கள் முழுவதும் இன்றே தயாரிக்கப் பட்டு அங்கிகாரமும் பெற்றுக் கொள்ளப் பட்டதாக எம்.எம்.மஹ்தி தெரிவித்தார்.
அத்தோடு ஆளணி வளப் பிரச்சினை, மற்றும் தற்போதைய இடமாற்றம், புதிய நியமனங்கள் குறித்தும் எடுத்துக் கூறப்பட்டது. இப் பிரச்சினைகளுக்கும் தங்களால் முடியுமான நடவடிக்கைகளை எடுப்பதாக மாகாண சுகாதார பணிப்பாளர் ஏற்றுக் கொண்டார்.
இக் காணிகள் குறித்து பூரணப் படுத்தப் பட்ட ஆவணங்கள் அனைத்தும் பிரதேச செயலாளரின் சிபாரிசுடன் விரைவில் மத்திய அரசின் காணி அமைச்சுக்கு கொண்டு செல்லப் படும் எனவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.