அப்துல் காதர் மசூர் மௌலானா!
பயங்கரவாதத்தின் பிடியில் இருந்து மீட்ட மஹிந்தவுக்கு ராஜபக்சவுக்கு சீரழிந்துள்ள பொருளாதாரத்தை கட்டியெழுப்புவது மிக சுலபமான காரியமாகும், அந்த அடிப்படையில் அவரின் அத்தனை முயற்சிகளுக்கும் பூரணமாக ஒத்துழைப்போம் என இன நல்லுறவுக்கான தேசிய வேலைத்திட்டத்தின் தலைவரும் சமூக சிந்தனையாளருமான அஷ்செய்க் அப்துல் காதர் மசூர் மௌலானா விடுத்துள்ள விஷேட ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார்.கடந்த வெள்ளியன்று இந்த நாட்டில் ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றம் மற்றும் புதிய பிரதமர் நியமனம் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் எடுக்கப்பட்ட தீர்மானம் தேசிய முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இதனை சில வங்குரோத்து அரசியல்வாதிகள் தாறுமாறாக விமர்சனம் செய்கின்றனர். அவர் செய்தது அரசியல் யாப்புக்கு முரணானது என்கின்றனர், அவர் செய்தது துரோகம் என்கின்றனர்.
கடந்த 2015 இல் வெறும் 45 க்கு குறைந்த பாராளுமன்ற ஆசனங்களையே கொண்டிருந்த ரணிலுக்கு இந்த நாட்டின் பிரதமர் பதவியை வழங்கிய அதே ஜனாதிபதிதான் இன்று அதி கூடிய பெரும்பாண்மை ஆசனங்களை கொண்டிருக்கும் மஹிந்தவுக்கு வழங்கியிருக்கிறார். அன்று யாரும் இது பற்றி கூப்பாடு போடவில்லை. ஜனாதிபதியின் தீர்மானத்தை கேள்விக்குட்படுத்தவில்லை. பதவி வெறிபிடித்து சிறுபிள்ளைத்தனமாக அலறி மாளிகைக்குள் இருந்துகொண்டு நானே பிரதமர் என கார்ட்போர்டால் எழுதிவைத்துக்கொண்டு அடம்பிடிக்கவில்லை. நாட்டின் அதி உயர் பதவிகளை வகிப்பவர்கள் கௌரவமாக நடந்துகொள்ளவேண்டும் அதிலும் டை கோர்ட் அணிந்த ரணில் இது குறித்து அதிக கவனம் செலுத்த வேண்டும்.
இன்று துரோகம் பற்றி பேசுகின்றனர், ஜனாதிபதி பதவிக்கு பொருத்தமான வேட்பாளர் தனது கட்சியிலே யாரும் இல்லாதபோது மஹிந்தவுடன் முரண்பட்டுக்கொண்டு அவரை எதிர்த்துக்கொண்டு வங்குரோத்து நிலையில் இருந்த ஐக்கிய தேசிய கட்சிக்கு பொது வேட்ப்பாளர் என்ற போர்வையில் தலைமை வழங்கினார் மைத்திரி, வெறும் 45 க்கு உட்பட்ட ஆசனங்களை கொண்டவர்களுக்கு பிரதமர் பதவி வழங்கி அழகு பார்த்தார். அவ்வாறு அதல பாதாளத்தில் கிடந்த கட்சிக்கு ஓரளவு ஒட்ஸிசன் வழங்கியவரை இறுதியில் கொலை செய்ய எடுத்த முயற்சியை விட துரோகம் ஏதும் இருக்கிறதா. ஜனாதிபதியை கொலை செய்துவிட்டு அந்த பதவியை அடைய முற்பட்டவர்கள் துரோகம் பற்றி பேசுவது வெட்கமானது.
கடந்த காலத்தில் அழுத்தகமை கலவரத்தை மூலதனமாக வைத்தே தனது அரசியலை ஆரம்பித்தார்கள் ஆட்சிக்கு வந்தால் உடன் விசாரணை இடம்பெறுமென்று கூறினார்கள், கலவரத்தில் ஈடுபட்டவர்களை தண்டிப்போம் என்றனர். ஆனால் சதிகாரர்கள், கலவரக்காரர்கள் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை , ஈற்றிலே நடந்தது எதுவுமில்லை, தண்டனையும் தண்டப்பணமும் கிடைக்கவில்லை. இதனை ரணிலுக்கு ஆதரவு வழங்கிய எந்த முஸ்லீம் அமைச்சரும் கேட்டக்கவுமில்லை. மௌனித்து போயினர். அதே ரணிலின் தலைமையில்தான் ஜிந்தோட்டை திகன கலவரத்திற்கு தூபமிட்டனர். முஸ்லீம் சமூகத்தின் சொத்துக்களையும் பொருளாதாரத்தையும் தேடித்தேடி அழித்தனர். அப்போதும் ரணில் கைகட்டி வாய்பொத்தி அமைதி காத்தார்.
அதேபோன்றுதான் இந்த நாட்டில் ஊழலை ஒழித்துக்கட்ட புறப்பட்ட ரணில் விக்ரமசிங்க மத்தியவங்கியின் மிகப்பெரும் ஊழலுக்கு துணை போனார். தனது நண்பர் அர்ஜுன் மகேந்திரன் மூலமாக பாரிய மோசடியில் ஈடுபட்டார். அர்ஜுன் மகேந்திரனை கைதுசெய்து மன்றில் ஆஜர்படுத்த உதவுமாறு ஜனாதிபதி கோரிய போதும் அது தொடர்பில் தனது நண்பனுக்கு எதிராக எந்தவித நடவடிக்கையும் இன்றி இந்த நாட்டின் பெருமளவு முதலை ஏப்பம்விட காரணமானார். அதிலிருந்துதான் பொருளாதார சீரழிவு இந்த நாட்டில் ஆரம்பமாகியது.
அது மாத்திரமல்லாது இந்த நாட்டின் தேசிய சொத்துக்களை வெளிநாடுகளுக்கு விற்றவர்களால் பொருளாதாரம் தொடர்பில் சீரான கொள்கைகளை பின்பற்ற முடியுமா பொருளாதாரத்தை சீரழித்தவர்கள் இவர்கள். நாட்டினை சர்வதேச சக்திகளின் பிடியில் சிக்கவைக்க ரணில் எடுக்கும் முயற்சிகளுக்கு மைத்திரி முட்டுக்கட்டை போட்டுவிட்டார்.
30 வருட கொடூர யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்து பொருளாதாரத்தை கட்டியெழுப்ப அத்திவாரமிட்ட மஹிந்த ராஜபக்சவின் உதவியை தற்போது மைத்திரி நாடியிருக்கிறார், மஹிந்த ராஜபக்ச ஒருபோதும் இந்த பதவியினை விரும்பியிருக்கவில்லை ஆனால் நாட்டை கொண்டு நடத்தக்கூடிய வல்லமை மஹிந்த ராஜபக்சவுக்கு இருக்கிறது என்பதை மீண்டும் உணர்ந்ததானாலே மஹிந்தவை அழைத்து பிரதமர் பதவியை வழங்கியிருக்கிறார்.
நாடு பொருளாதார ரீதியாக சீரழிந்துள்ளது என்கிறார்கள் மறுபுறம் பல பில்லியன் செலவில் ஆடம்பர வாகனங்களை இறக்குமதி செய்கிறார்கள், இது யாருடைய பணம் எங்கிருந்து இந்த பணம் கிடைத்தது ஏன் இவ்வாறு திட்டமிடப்படாத வேலைத்திட்டங்கள் இடம்பெறுகின்றன. இவைகளை நாடு என்கிற ரீதியில் சிந்திக்க வேண்டாமா? நாட்டினுடைய அணைத்தது வளங்களும் சூறையாடப்படுகிறது இதனை மீட்க வேண்டும் அதற்கு ஒரு தகுதியான தலைமைதான் தற்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்ச.
இன்று ஜனநாயகம் பற்றி பேசுகின்றனர், இவர்கள் கடந்த `உள்ளுராட்ச்சி மன்ற தேர்தலில் அடைந்த படு தோல்வி முழு நாடும் அறியும் இதனாலே மாகாண சபை தேர்தலை நடத்த அச்சப்படுகின்றனர். இவர்கள் குறுக்கு வழியே பதவிகளை அடைந்தவர்கள் அவ்வாறே மீளவும் குறுக்கு வழியில் சதியில் ஈடுபட்டு ஜனாதிபதி பதவியினை அடைய முற்பட்டனர். அதிலே கையும் மெய்யுமாக பிடிபட்டுள்ளனர், அதனாலேயே தற்போது பதவியினை இழந்துள்ளனர்.
இந்த சந்தர்ப்பத்தில் முஸ்லீம் சமூகம் மிகவும் தெளிவாகவும் விழிப்பாகவும் இருத்தல் வேண்டும். இந்த நாட்டினை சதிகளின் பிடியில் இருந்து பாதுகாக்க வேண்டிய பொறுப்பு எமக்கு இருக்கிரது. தற்போது சர்வதேதசத்திடம் மண்டியிடுகின்றனர் அதிலும் குறிப்பாக முஸ்லீம் சமூகத்தின் விரோதிகளிடம் மண்டியிடுகின்றனர். முஸ்லீம் சமூகத்துக்கு இவர்களால் விமோசனம் ஒருபோதும் கிடைக்கப்போவதில்லை என்பதனை உணரவேண்டும்.
அந்தவகையில் இழந்துள்ள பொருளாதாரத்தை மீளவும் கட்டியெழுப்பவும் நாட்டின் சொத்துக்களை பாதுகாக்கவும் முஸ்லீம் சமூகத்தின் நிம்மதியான சுபீட்சமான வாழ்வுக்கும் பிரதமர் மஹிந்த ராஜபக்ச தலைமையில் மலந்துள்ள புதிய ஆட்சியில் பங்காளர்களாகி வெற்றிகொள்வோம்.
