கிழக்கில் ஏற்பட்டுள்ள நிருவாகப் பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு கிழக்கு மாகாண முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் புதிய பிரதமருக்கு ஆதரவு வழங்க வேண்டும்

ஏ.எல்.றியாஸ்-
முஸ்லிம் சமூகத்தினை பிரதிநிதத்துவப்படுத்துகின்ற அரசியல் தலைவர்கள், மற்றும் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி தலைமையிலான புதிய பிரதமருக்கு ஆதரவு வழங்கி புதியதொரு அரசாங்கமொன்றை இந்த நாட்டிலே ஏற்படுத்தி நாட்டையும், நாட்டு மக்களையும் பாதுகாக்க வேண்டும் என கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.சுபையிர் தெரிவித்தார்.
தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்ற சூழ்நிலையில் புதிய அரசாங்கம் ஒன்றினை இந்த நாட்டிலே ஏற்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்து இன்று (28) ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கன்டவாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் கருத்துத்தெரிவிக்கையில்,நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்ற சூழ்நிலையில் குறிப்பாக, முஸ்லிம் சமூகத்தினை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற கிழக்கு மாகாண அரசியல் தலைவர்கள், உள்ளிட்ட முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்சவுக்கு ஆதரவு வழங்கி புதியதொரு அரசாங்கமொன்றை இந்த நாட்டிலே ஏற்படுத்தி நாட்டையும், நாட்டு மக்களையும் பாதுகாப்பதற்கு முன்வர வேண்டும்.
குறிப்பாக கடந்த நல்லாட்சி அரசாங்கத்தில் ஐக்கிய தேசிய கட்சியின் ஆதிக்கம் மேலோங்கி காணப்பட்டது. ஐக்கிய தேசிய கட்சியானது தமது கட்சியினை வளர்ப்பதிலும், சர்வதேசத்தினுடைய நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப இந்த நாட்டை செயற்படுத்துவதிலும் குறியாய் இருந்தது. அந்த அரசாங்கத்திலே நாட்டை முன்னேற்றுவதற்குரிய எந்தவொரு திட்டங்களும் வகுக்கப்படவில்லை. அவர்களிடத்தில் எந்தவொரு பொருளாதார திட்டமும் காணப்படவில்லை. அதனால் எமது நாட்டினுடைய பொருளாதாரம் பின்தங்கியும் வீழ்ச்சியடைந்தும் காணப்பட்டது. அதன் காரணமாக மக்கள் பல்வேறு கஸ்டங்களை எதிர்நோக்கி வந்தனர்.
கடந்த அரசாங்கத்திலே இனப்பிரச்சினை தீர்வு விடயத்தில் ஒரு சாராரை திருப்த்திப்படுத்தும் வகையில் ஐக்கிய தேசிய கட்சி செயற்பட்டது. அத்துடன் புதிய அரசியலமைப்பு விடயத்திலும், முஸ்லிம் சமூகம் புறக்கனிக்கப்பட்டது. புதிய தேர்தல் முறை மாற்றத்திலும் முஸ்லிம்களுக்கு அநீதியிழைக்கப்பட்டது. ஐரோப்பிய நாடுகளின் தேவைகளுக்காக முஸ்லிம்களுடைய தனியார் சட்டங்களை மாற்றியமைக்கின்ற நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டது. குறிப்பாக நல்லாட்சியிலே கிழக்கு மாகாணத்தில் நிருவாக பயங்கரவாதம் மேலோங்கியிருந்தது. முஸ்லிம் மக்கள் தங்களது பிரச்சினைகளை தீர்த்துக்கொள்ள முடியாது வேதனையடைந்த சம்பவங்களும் ஏராளம் உள்ளது.
கடந்த யுத்த காலத்தின் போது முஸ்லிம் சமூகம் இழந்த காணிகளை நல்லாட்சி அரசாங்கத்தில் மீட்க முடியாமல் போனமை கவலையான விடயமாகும். ஒரு இனத்தினுடைய காணிப்பிரச்சினைகளை தீர்ப்பதில் மாத்திரமே ஐக்கிய தேசிய கட்சி முக்கியத்துவம் வழங்கி செயற்பட்டது. முஸ்லிம் சமூகம் இழந்த காணிகளை மீட்பதற்கு முஸ்லிம் அரசியல் தலைவர்களால் இயலாமல் போனது. முஸ்லிம் சமூகத்திற்கு எதிரான திட்டமிட்ட செயற்பாடுகளும் அரங்கேற்றப்பட்டன. இதனால் இந்த நாட்டிலே வாழ்ந்த முஸ்லிம்கள் அச்சமடைந்த நிலையிலே காணப்பட்டனர். இவ்வாறான சம்பவங்களை முஸ்லிம் மக்கள் பிரதிநிதிகள் மீண்டுமொறுமுறை என்னிப்பார்க்க வேண்டும்.
குறிப்பாக இந்த நாட்டினுடைய ஜனாதிபதியினை படுகொலை செய்வதற்கு அரசாங்கத்திற்குள் இருந்தே, திட்டங்கள் தீட்டப்பட்டது. அந்த விடயம் தொடர்பில் ஐக்கிய தேசிய கட்சி அசமந்தப்போக்குடன் செயற்பட்டது. இவ்வாறான சூழ்நிலையில் ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து நல்லாட்சிக்கு ஆதரவு வழங்கிய ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பு நல்லாட்சியில் இருந்து வெளியேறியது. அதனைத்தொடர்ந்து எமது ஜனாதிபதியினால் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச இந்த நாட்டினுடைய பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளார். ஒரே கட்சியினை சேர்ந்தவர்கள் ஜனாதிபதியாகவும், பிரதமராகவும் கிடைத்திருப்பது நாட்டுக்கும், மக்களுக்கும் கிடைத்துள்ள வரப்பிரசாதமாகும்.
இவ்வாறானதொரு அரசியல் மாற்றத்தினை ஏற்படுத்துவதற்கு, ஒரு குழுவாக செயற்பட்டு உழைத்த இந்த நாட்டினுடைய சிரேஸ்ட அரசியல் தவைலர்கள், குறிப்பாக அந்த குழுவில் அங்கம் வகித்து தற்போதைய ஜனாதிபதி மற்றும் முன்னாள் ஜனாதிபதி ஆகியோரை ஒன்றினைப்பதில் தான் இந்த நாட்டுக்கு விடிவு கிடைக்கும் என்பதில் உறுதியாகவிருந்து செயற்பட்ட தேசிய காங்கிரசின் தலைவர் அதாஉல்லா ஆகியோருக்கும் முஸ்லிம் சமூகத்தின் சார்பில் பாராட்டுக்களைத் தெரவித்துக்கொள்கின்றேன்.
இவ்வாறான சந்தர்ப்பத்தில் முஸ்லிம் சமூகத்தினை பிரதிநிதித்துவப்படுத்தும் வட, கிழக்கு உள்ளிட்ட முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் புதிய பிரதமருக்கு ஆதரவு வழங்கி உறுதியான அரசாங்கமொன்றை இந்த நாட்டிலே ஏற்படுத்த வேண்டும். குறிப்பாக முஸ்லிம் சமூகத்தினுடைய அரசியல் தீர்வு குறித்தும், முஸ்லிம் சமூகத்தின் அரசியல் அபிலாசைகளை வென்றெடுப்பதற்கும் இந்த சந்தர்ப்பத்தினை பயன்படுத்த வேண்டும். இந்த நாட்டிலே வாழுகின்ற பெரும்பாலான மக்கள் ஆட்சி மாற்றத்தினையே விரும்புகின்றனர். சர்வதேசத்தினுடைய ஏஜெண்டாகவுள்ள ரணிலை வீட்டுக்கு அனுப்பி ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பு அரசாங்கத்தினை ஏற்படுத்துவதே நாட்டு மக்களின் விருப்பமுமாகும். நாட்டு மக்களின் விருப்பத்திற்கமைய நாட்டையும், மக்களையும் பாதுகாப்பதற்கு ஜனாதிபதி மேற்கொண்ட முடிவானது பாராட்டத்தக்கதாகும்.
எனவே ஐக்கிய தேசிய கட்சியின் சதிவலையில் முஸ்லிம் அரசியல் தலைவர்கள் சிக்கிக்கொண்டு பதவிகளுக்கும், பணங்களுக்கும் சோரம் போகாது, தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் சூழ்நிலையில் முஸ்லிம் சமூகத்தின் நன்மை கருதியும், நாட்டு மக்களின் எதிர்பார்ப்புக்கும் மதிப்பளித்து ஜனாதிபதி தலைமையிலான புதிய பிரதமருக்கு ஆதரவினை வழங்கி புதிய அரசாங்கமொன்றை ஏற்படுத்த வேண்டும். குறிப்பாக இந்த தருனத்தில் கிழக்கு மாகாண முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் மிகக்கவனமாக செயற்பட்டு தலைமைகளுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். அப்போதுதான் இந்த நாட்டு மக்கள் உட்பட வடகிழக்கில் வாழும் முஸ்லிம்கள் சந்தோசமாகவும், நிம்மதியாகவும் வாழ முடியும் எனவும் சுபையிர் மேலும் தெரிவித்தார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -