கல்முனை மாநகர சபையில் புதிய நியமனங்களை கண்டித்து தற்காலிக ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு; மறியல் போராட்டம்..!

அஸ்லம் எஸ்.மொலானா, யூ.கே.காலிதீன்-நீண்ட காலமாக கடமையாற்றி வருகின்ற தமக்கு நிரந்தர நியமனம் வழங்காமல், அரசியல் ரீதியாக புதிதாக சிலருக்கு கிழக்கு மாகாண சபையினால் நிரந்தர நியமனம் வழங்கப்பட்டிருப்பதாக தெரிவித்து மாநகர சபையின் தற்காலிக ஊழியர்கள் இன்று புதன்கிழமை (01) பணிப்பகிஷ்கரிப்பை மேற்கொண்டதுடன் கண்டன ஆர்பாட்டத்திலும் மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

இதனால் கல்முனை மாநகர சபையின் அனைத்து பிரிவுகளினதும் பணிகள் முடங்கியதுடன் திண்மக்கழிவகற்றல் உள்ளிட்ட சேவைகள் எவையும் இடம்பெறவில்லை. அத்துடன் மாநகர சபை வளாகத்தில் அமைந்துள்ள கல்முனை பிரதேச செயலகத்தின் செயற்பாடுகளும் பாதிக்கப்பட்டிருந்தன.

கல்முனை மாநகர சபை தற்காலிக ஊழியர்களின் இப்போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து மாநகர சபை உறுப்பினர்கள் சிலரும் அங்கு வருகை தந்திருந்ததுடன் அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கத்தின் தலைவர் எஸ்.லோகநாதன் உள்ளிட்டோரும் போராட்டத்தில் பங்கேற்றிருந்தனர். இதன்போது கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் அவர்களும் அங்கு வருகை தந்து, ஊழியர்களின் ஆதங்கங்களை கேட்டறிந்து கொண்டதுடன் சம்மந்தப்பட்ட தரப்பினருடன் இப்பிரச்சினை தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தி, நியாயமான தீர்வினைப் பெற்றுத்தர முயற்சிப்பேன் என்று உறுதியளித்தார்.

குறித்த ஊழியர்கள், புதிய நியமனங்களை கண்டித்தும் தமக்கு நிரந்தர நியமனம் வழங்குமாறு கோரியும் கோஷங்களை எழுப்பியதுடன் பதாதைகளையும் ஏந்தியிருந்தனர்.

இதன்போது ஊழியர்கள் சிலர் கருத்து தெரிவிக்கையில்;

"கல்முனை மாநகர சயையில் நாங்கள் 102 பேர் கடந்த ஆறு வருடங்களுக்கு மேலாக தற்காலிக ஊழியர்களாக கடமையாற்றி வருகின்றோம். எமக்கு நிரந்தர நியமனம் வழங்குமாறு விடுக்கப்பட்ட கோரிக்கைகள் இன்னும் நிறைவேற்றப்படாமல் இழுத்தடிப்பு செய்யப்பட்டு வருகின்றது. இதனால் நாம் நொந்து கஷ்டப்பட்டு, எமது குடும்ப சுமைகளை தாங்கிக் கொண்டிருக்கின்றோம்..

எவ்வாறாயினும் என்றோ ஒரு நாள் நிரந்தர நியமனம் கிடைக்கும் என்ற பெரும் நம்பிக்கையுடன் கடமையாற்றி வருகின்ற எமக்கு அநீதியிழைக்கும் வகையில் அரசியல் ரீதியாக கிழக்கு மாகாண ஆளுநரின் விசேட உத்தரவின் பேரில் புதிதாக சிலருக்கு நிரந்தர தொழில் நியமனம் வழங்கப்பட்டிருக்கிறது.

இது எமது வயிற்றில் அடிக்கும் மனிதாபிமானமற்ற செயற்பாடாகும். கடந்த பல வருடங்களாக குறைந்த ஊதியத்தில் அர்ப்பணிப்புடன் கடமையாற்றி வருகின்ற எமது நிரந்தர நியமனத்தை கேள்விக்குறியாக்கியுள்ளதுடன் தொழிலை இழக்கும் ஆபத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த அரசியல் ரீதியான நியமன நடவடிக்கையை நாம் வன்மையாக கண்டிக்கிறோம். இவ்வாறான கண்மூடித்தனமான செயற்பாடுகளை நாம் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்.

ஆகையினால் புதிய நியமனத்தை உடனடியாக ரத்து செய்யுமாறு வேண்டுகின்றோம். இல்லையேல் எமது போராட்டம் தொடரும்" என்று ஆகோரோஷமாக தெரிவித்தனர்.

நாடாளுமன்ற உறுப்பினர் கே.கோடீஸ்வரன் மற்றும் கல்முனை விகாராதிபதி ரண்முத்துக்கல சங்கரத்ன தேரர் போன்றோரும் இங்கு வருகை தந்து பாதிக்கப்பட்ட ஊழியர்களுக்காக குரல் கொடுத்தனர்.

அதேவேளை கல்முனை மாநகர சபையில் புதிய ஊழியர் நியமனம் தொடர்பில் எழுந்துள்ள இந்த சர்ச்சை குறித்து மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீபை, நாடாளுமன்ற உறுப்பினர் கே.கோடீஸ்வரன் மற்றும் மாநகர சபை உறுப்பினர்கள் சிலர் முதல்வர் செயலகத்தில் சந்தித்து கலந்துரையாடினர்.







இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -