பிரதமர் ரணிலின் கழுத்தில் வைத்த கத்தியாக மாறியுள்ள மாகாண எல்லை நிர்ணய அறிக்கை




ஏ.எச்.சித்தீக் காரியப்பர்-
மாகாண எல்லை நிர்ணய அறிக்கை இன்று (24) நாடாளுமன்றத்தில் தோற்கடிக்கப்பட்டுள்ளது அல்லது நிராகரிக்கப்பட்டுள்ளது. தமிழ் பேசும் மக்களுக்கான அரசியல் மரண சாசனமாகக் காணப்பட்ட இந்த மாகாண எல்லை நிர்ணய அறிக்கையை நான் படித்த போது, அதில் காணப்பட்ட பல விடயங்களை அவதானித்து அதிர்ச்சியும் கவலையும் அடைந்தேன்.

தமிழ் பேசும் சிறுபான்மை இனத்தின் அரசியல் இருப்பைத் திட்டமிட்ட வகையில் சிதைத்து அவர்களின் அரசியல் ஆளுமையை, செல்வாக்கை இல்லாமல் செய்யும் வகையில் தயாரிக்கப்பட்ட இந்த மாகாண எல்லை நிர்ணய அறிக்கை நடைமுறைக்கு வந்தால் அதன் விபரீதங்களை எண்ணிப் பார்ததேன்.
இறுதியில், அந்த அறிக்கையை தமிழ் பேசும் அரசியல் கட்சிகளின் தலைமைகளுடன் பிரதான சிங்கள தேசியக் கட்சிகளும் இணைந்து தோற்கடித்தச் செய்தமை இலங்கை அரசியல் வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டும். நாடாளுமன்றத்தில் இன்று பங்கேற்றிருந்த 139 பேரும் ஒன்று சேர்ந்து அந்த அறிக்கையை நிராகரித்தமை சர்வதேசத்தின் கவனத்தையே ஈர்த்துள்ளது.
ஆனால், இப்போது பிரச்சினைகள் அனைத்தும் முடிந்து விட்டன. பழைய முறையிலேயே தேர்தல் நடைபெறப் போகிறது என்று நாம் நினைத்து விட முடியாது.
ஒருவர் கூட ஆதரவளிக்காத இந்தச் சட்டமூலமானது இப்போது பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் கழுத்தில் வைத்த கத்தியாக மாறியுள்ளது. எந்தத் திருத்தமும் செய்யவே இடமில்லை என்ற நிலையில் நிராகரிக்கப்பட்டுள்ள இந்தச் சட்டமூலத்துக்கு பிரதமரால் திருத்தங்களுடன் மீண்டும் எவ்வாறு சமர்ப்பிக்க முடியும் என்ற கேள்வி இப்போது எழுந்துள்ளது. அதற்கான தார்மீக உரிமையைக் கூட பிரதமர் இன்று இழந்துள்ளார்.
எனவே, பழைய முறையிலான தேர்தல் சட்டத்தைக் கொண்டு வருவதற்கான அறிவிப்பை பிரதமர் கூடிய விரைவில் பகிரங்கமாக வெளிப்படுத்த வேண்டும். இது தவிர அவருக்கு எந்த வழியும் இல்லை.
இதேவேளை,, இது தொடர்பில் ஆராய பிரதமர் தலைமையில் சபாநாயகரால் நிச்சயமாக ஒரு குழு நியமிக்கப்படும். அந்தக் குழு புதிதாக சமர்ப்பிக்கப்பட்டு நிராகரிக்கப்பட்டுள்ள மாகாண எல்லை நிர்ணய அறிக்கையில் காணப்படும் அநீதிகள், குறைபாடுகள் தொடர்பில் விசாரணை செய்து திருத்தங்களைச் செய்ய வேண்டிய நிலையே தற்போது எழுந்துள்ளது. இந்த நிலையில், அவ்வாறு திருத்தங்கள் செய்யப்பட்ட இதே புதிய மாகாண எல்லை நிர்ணய அறிக்கையையே மீண்டும் நடைமுறைக்கு கொண்டு வரவும் முயற்சிக்கப்படலாம்.
இவ்வாறானதொரு நிலையில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இந்த விடயத்தில் தன்னால் தலையிட முடியாது என்றும் அதற்கான ஆணையை நாடாளுமன்றம் தனக்குத் தரவில்லை என்றும் நாட்டு மக்களுக்கு உடனடியாக தெளிவுபடுத்தி பழைய முறையிலேயே தேர்தல்களை நடத்த முடியும் என்பதனை அவர் பகிரங்கமாக தெரிவிக்க வேண்டும். அதனை அவர் செய்வாரா?
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -