சொந்த நிலங்களை பறிகொடுக்கும் துரதிஷ்ட சமூகம்


பஹ்மி-
லங்கைத் திருநாட்டில் சிறுபான்மையாக மட்டுமல்ல நிலமற்ற சமூகமாகவும் முஸ்லீம் சமூகம் மாற்றம் காண்கிறது.சனத்தொகை மற்றும் புவியியல் அமைப்பிற்கு ஏற்ப குறிப்பாக வடகிழக்கில் முஸ்லீம்களின் காணிகள் திட்டமிட்டு மற்றைய இனங்களால் சூறையாடப்படுகிறது.தங்களுக்குள் அரசியல் பதவிகளுக்காக குழுக்களாகப் பிரிந்து மட்டுமே சண்டையிடுகின்றனர்.ஏற்கனவே இழந்த நிலங்களை மீட்கவோ அல்லது இருக்கின்ற காணிப் பிரச்சனைகளைத் தீர்க்கவோ அரசியல் தலமைகளோ,சமூகவோ அக்கறையற்றதாக உள்ளது.

வடக்கில் இருந்து ஆயுதக்குழுவால் திட்டமிட்டு காணிகளை விட்டு வெளியேறிய மக்களுக்கு 30வருடங்களாக முடிவில்லை.வடக்கிலும்,கிழக்கிலும் பல அரசியல் தலமைகளை உருவாக்கி இன்னும் அநாதரவாகவே முகாம்களில் உள்ளனர்.தேர்தல் வந்தால் மட்டும் வடமாகாண மக்களின் காணிப் பிரச்சனையை பூதாகரமாக்கி இருபெரும் முஸ்லீம் அரசியல் தலமைகளும் போட்டி அரசியலைச் செய்கின்றனர்.

தமிழ்மக்கள் தங்களது இருப்பை,அதாவது நிலத்துக்காகவே போராடினார்கள்.உயிர்களைப் பழிகொடுத்து சொந்த மண்ணுக்காக போராடினார்கள்.இன்றும் அரசியல் ரீதியாக போராட்டங்களைச் செய்து வடக்கில் தங்களது காணிகளை இராணுவக் கட்டுப்பாட்டில் இருந்து மீட்டுள்ளனர்.பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சியாக இருந்து அரசியலமைப்பு வரைபில் இணைந்த வட-கிழக்கு ஆலோசனையை முன்வைத்து சரித்திரம் படைத்துள்ளனர்.சட்டரீதியாக பிரிக்கப்பட்ட வடகிழக்கை இணைப்பது சாத்தியமோ,இல்லையோ மீண்டும் இணைக்க ஜனநாயக ரீதியில் போராடுகின்றனர்.
ஆனால் முஸ்லீம்களின் உரிமைப் போராட்டம் பதவிகளுக்காக மட்டுமே முன்னெடுக்கப்படுகிறது.எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் முஸ்லீம்களை விலைபேசி பதவிகளுக்காக முன்டியடிக்கும் போராட்டமே முஸ்லீம்களிடம் உள்ளது.இதற்கு மக்களும் ஏற்பால் போல தயார்படுத்தப்பட்டுள்ளனர்.இதனால் தங்களின் இருப்பை பற்றி சிந்திக்காமல்,பதவிகளுக்காக மட்டும் சிதறியடிக்கப்பட்ட சமூகமாக மாறியுள்ளது துரதிஷ்டவசமாகும்.

கிழக்கில் முஸ்லீம்களின் அதிகமான காணிகள் திட்டமிட்டு ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.அண்மையில் வடக்கில் கோப்பிளாவு,இரணைதீவு,கிழக்கில் நாவலடி,சம்பூர் போன்ற பிரதேசங்களில் தமிழர்கள் தங்களது காணிகளை அரசாங்கத்தையே தடுமாறச் செய்து  வரலாறு படைத்தனர்.ஆனால் 30 வருடங்களாக வடக்கிற்கு வெளியே இன்னும் சொந்தக் காணிகளுக்குப் போகமுடியாமல் முஸ்லீம் சமூகம் அநாதையாக உள்ளது.
முஸ்லீம் சமூகத்தின் வேகமான சனத்தொகைப் பெருக்கம் இத்தகைய நிலை தொடர்ந்தால் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கிவிடும்.பழைய தேர்தல் முறையில் ஏதோ கிடைத்த அதிஷ்டங்களால் அதிக பிரதிநிதிகளைப் பெற்றதால்,,தாங்கள் அதிகாரமுள்ள சமூகமாக பிழையான கணக்கில் வாழ்கிறது.
ஆனால் தமிழர்கள் இன்று பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி,வடமாகாண ஆளும்கட்சி,கிழக்கில் பங்காளிக்கட்சி என்று முஸ்லீம்களைவிட அதிகாரமிக்கதாக உள்ளனர்.இருந்தும் இன்றுவரை தங்களது நிலங்களை மீட்க ஐனநாயக ரீதியில் தொடர்ந்து போராடுகின்றனர்.

அண்மையில் எல்லை நிர்ணயம் என்ற போர்வையில் நடந்த புதிய உள்ளூராட்சித் தேர்தல் முஸ்லீம்களை அரசியல் அநாதையாக்கியது.முன்னர் வடகிழக்கில் தனித்து ஆட்சி செய்த பலசபைகளில் இன்று முஸ்லீம் கட்சிகள் தமிழ் மற்றும் சிங்கள உறுப்பினர்களின் கால்கலைப் பிடித்து ஆட்சி செய்கின்றனர்.எதிர்காலத்தில் இது இன்னும் மோசமாகலாம்.

ஆளும்கட்சியோ,அமைச்சுப் பதவியோ இல்லாமல் இராணுவத்துடன் போராடி தமிழ்மக்கள் நிலங்களை மீட்கின்றனர்.திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களை எதிர்த்து வீதியில் போராடுகின்றனர்.முஸ்லீம் தலமைகளோ உள்நாட்டிலும்,வெளிநாட்டிலும் தங்களுக்கு சொத்துக்களைக் குவிப்பதிலே போட்டியாக உள்ளனர்.

இன்று உலகத்தில் அதிகமான போராட்டங்கள் சொந்த நிலத்துக்காகவே நடக்கின்றது.ஆனால் குறைந்த பட்சம் இருக்கின்ற நிலங்களையாகவே பாதுகாக்க தவறிய நிலையில் முஸ்லீம் சமூகம் உள்ளது.வெறுமனே பொருத்தமற்றதும் விலைபோகின்றதுமான அரசியல் தலமைகளை தெரிவு செய்வதிலே முஸ்லீம் சமூகம் தன்னை முதனிலைப்படுத்டுகிறது.

முஸ்லீம்களுக்கு கிழக்கில் அண்மைய தகவலின்படி சுமார் 95ஆயிரம் எக்கர் மற்றும் வடக்கில் ஒரு இலட்சத்திப் பத்தாயிரம் ஏக்கர் காணிப் பிரச்சனை உள்ளது.ஆனால் கடந்த 3வருடத்திற்கும் 55%மான காணிப் பிரச்சனைக்கு தமிழ்மக்கள் தீர்வுகண்டுள்ளனர்.

வடக்கில் 1990ல் இருந்து வெளியேறிய மக்கள் இது மூன்று மடங்காக அதிகரித்துள்ளனர். இந்த நிலையில் முஸ்லீம்களை மீளக்குடியேற்றாமல் வர்த்தமானி அறிவித்தல்,பாதுகாக்கப்பட்ட வனப்பிரதேசம்,ஜனாதிபதி செயலனி என்று வடமாகாண முஸ்லீம்கள் நிரந்தரமாக காணிகள் அற்ற சமூகமாக மாற்றப்பட்டு வருகின்றனர்.

கிழக்கில் நுரைச்சோலை, பொத்துவில், அஷ்ரப்நகர், பொன்னன்வெளி, அம்பலம்ளோயா,லகுகலை,கிரான்கோமாரி,வட்டமடு,கிங்குராணை,வேலாமரத்துவெளி போன்ற அம்பாறை மாவட்ட முஸ்லீம்களின் காணிகளில் அபகரிக்கப்பட்டுள்ளது.அதிகமான முஸ்லீம்களது காணிகள் உள்ள பிரதேசங்கள் வனஜீவராசிகள் திணைக்களமும்,மரபுரிமை பிரதேசம் எனவும் சூறையாடப்பட்டுள்ளது.

திருகோணமலையில் கிண்ணியா,கருமலையூற்று,பதவிசிரிபுற, குச்சவெளி, மூதூர் போன்ற இடங்களில் அதிகமாக வாழ்ந்த முஸ்லீம்களது காணிகள் இன்னும் பிரச்சனைக்கு உரியதாகவே உள்ளது.இராணுவத்தையும்,சிங்கள கடும் போக்கையும் காரணம்காட்டி பல ஏக்கர்காணிகள் சூறையாடப்பட்டுள்ளது.

குறைந்தபட்சம் சனத்தொகை விகிதாசாரத்திற்கு எற்றவகையிலாவது காணிகள் வழங்கப்பட வேண்டும்.திருகோணமலையில் குறைந்த எண்ணிக்கையிலான சிங்களவர்கள் அதிகளவிலான நிலத்தை ஆள்கின்றனர்.ஆனால் முஸ்லீம்களோ கணிசமானளவு வாழ்கின்ற கிண்ணியா மற்றும் மூதூர் பிரதேசங்களில் மற்றையவர்களின் அதிகமான ஊடுருவலைச் சந்திக்கின்றனர்.இந்தப் பிரதேசங்களில் அதிகரிக்கும் மக்கள் தொகைக்கு ஏற்ப காணிகளும் இல்லை,ருக்கிம்ற காணிகளில் கரையோர அத்துமீறல்களையும் சந்திக்கின்றனர்.
கற்றறிந்த பாடங்கள் ஆணைக்குழு வடகிழக்கில் முஸ்லீம்களின் காணிப் பிரச்சனையில் அரசாங்கம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென பரிந்துரை செய்தது.இதனைக்கூட வாய்திறந்து பேசமுடியாத தலமைகளால் முஸ்லீம் சமூகம் வழிநடாத்தப்படுகிறது.

தேர்தல் வந்தால் மட்டும் வாக்குகளுக்காக முஸ்லீம்களின் காணிப்பிரச்சனை இனவாதக் கண்ணோட்டத்தில் மேடைகளில் பேசப்படுகிறது.
முஸ்லீம்களுக்கு சொந்தமான காணிகள் அபகரிக்கப்பட்டுள்ளது.சொந்தக் காணியில் மீள்குடியேற முடியாமல் உள்ளனர். அத்துடன் மட்டுப்படுத்தப்பட்ட காணிகளுக்குள் மட்டும் நெருக்கமாக வாழ்வதற்கு திணிக்கப்பட்டுள்ளனர்.இதனை முஸ்லீம் சமூக ஆர்வலர்களோ,கல்விமான்களோ அதிகம் பேசுவதில்லை.ஏனெனில் கொழும்பில் கொகுசு வீடு அல்லது தொழில் இருந்தால் போதும் என்ற மனநிலையே அவர்களிடம் உள்ளது.
ஆகவே தங்களது இருப்பை பாதுகாக்க முஸ்லீம் சமூகம் ஐனநாய ரீதியில் போராட வேண்டும்.இந்தக் காணிப் பிரச்சனை ஆயுதக் குழுக்களாலும்,சிங்கள அரசுகளாலும் திட்டமிட்டு நீண்டகால நோக்கில் படிப்படியாக மேற்கொள்ளப்பட்டவை.ஆதலால் இதற்கு உடனடித் தீர்வு சாத்தியமற்றது.ஆனாலும் எதிர்காலத்தில் எதிர்கொள்ள இருக்கும் ஆபத்தைத் தடுத்து நமது சந்ததியினருக்கு உத்தரவாதத்தை ஏற்படுத்த வேண்டும்.
ஆதலால் எமது காணிகளை மீட்கும் சட்டரீதியான செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும்.வெறுமனே கைகட்டி வேடிக்கை பார்த்தால் எதிர்கால எல்லை நிர்ணயத்தில் முஸ்லீம்களுக்கான ஒரு வட்டாரம் கூட சரித்திரத்தில் மறைந்து போகலாம்.
வெறுமனே பாராளுமன்ற ஆசனங்களைப் பெறுவது சாதனையல்ல.நமது உரிமைகளையும்,பாதுகாப்பையும் உத்தரவாதம் செய்யக்கூடிய நிரந்தர இருப்பு அவசியமாகும்.
சனத்தொகையில் பெரும்பான்மைக்கு மத்தியில் சிறுபான்மையாக வாழலாம்.ஆனால் பெரும்பான்மை எண்ணிக்கையில் வாழ்கின்ற பிரதேசங்களில் காணிகளற்ற சிறுபான்மையினராக வாழ்வது அடிமைத்தனமாகும்.
ஆகவே வெறுமனே ஏலம் போகின்ற முஸ்லீம் அரசியல் கலாச்சாரத்தில் இருந்து நாம்விடுபட வேண்டும்.எமது பூர்வீக நிலங்களே எமக்கான உரிமை,அதுவே எமக்கான பாதுகாப்பும் ஆகும்.






இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -