இன முரண்பாட்டிற்கு அடிப்படையாக அமைந்த மொழிப்பிரச்சினையை இல்லாதொழித்து, இனங்களிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்காக தமது அமைச்சு பல்வேறு வேலைத் திட்டங்களை முன்னெடுத்து வருவதாக தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்க மற்றும் அரச கரும மொழிகள் பிரதியமைச்சர் செய்யித் அலி ஸாஹிர் மௌலானா தெரிவித்தார்.
ஜனாதிபதியினால் இந்த அமைச்சு உருவாக்கப்பட்டபோது வெறுமனே உபதேசம் சொல்கின்ற அமைச்சாக மட்டுமே இருந்து வந்தது. ஆனால் தற்போது அபிவிருத்தி பணிகளையும் முன்னெடுக்கின்ற அமைச்சாக மாற்றி, ஒவ்வொரு பிரதேச செயலாளர் பிரிவிலும் 250 மில்லியன் ரூபா நிதியில் கிராமிய அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.
அம்பாறை மாவட்ட நல்லிணக்க ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நேற்று செவ்வாய்க்கிழமை (24) கல்முனை ஆசாத் பிளாசாவில் நடைபெற்ற நல்லிணக்க மாநாட்டில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே பிரதியமைச்சர் இவற்றைக் கூறினார்.
அம்பாறை மாவட்டத்தை சேர்ந்த மூவின சிவில் சமூக பிரதிநிதிகளும் பங்கேற்றிருந்த இம்மாநாட்டில் பிரதியமைச்சர் அலி ஸாஹிர் மௌலானா தனதுரையில் மேலும் கூறியதாவது;
"இனங்களிடையே, சமூகங்களிடையே, மக்களிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்காக எமது அமைச்சினால் ஒவ்வொரு கிராம சேவகர் பிரிவிலும் நல்லிணக்க குழுக்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. இதுவரை 17412 குழுக்கள் எமது அமைச்சில் பதிவு செய்யப்பட்டுள்ளன.
நாட்டில் மேற்கொள்ளப்படுகின்ற எந்தவொரு அபிவிருத்தி திட்டமும் நல்லிணக்கத்துடன் முன்னெடுக்கப்படா விட்டால் அவை நீடித்து நிலைக்காது என்பதை அனைவரும் உணர்ந்து செயற்பட வேண்டியுள்ளது. அந்த வகையில் எமது அமைச்சும் இன்று அபிவிருத்தி பணிகளை முன்னெடுக்கின்ற அமைச்சாக மாற்றப்பட்டுள்ளது. மக்களுக்கான வாழ்வாதாரம், வணக்கஸ்தலங்களின் புனரமைப்பு, வீதி நிர்மாணம் என்று பல வேலைத் திட்டங்களை முன்னெடுக்கின்றோம்.
நாட்டிலுள்ள அனைத்து இடங்களிலும் அரச நிறுவனங்களிலும் பெயர் பலகைகள் மும்மொழிகளில் சம அந்தஸ்த்தில் எழுதப்பட்டிருக்க வேண்டும். ஒரு மொழி பெரிதாகவோ இன்னொரு மொழி சிறிதாகவோ எழுதப்பட முடியாது. எழுத்துப் பிழைகளுக்கும் இடமளிக்க முடியாது.
நாட்டின் எந்தவொரு மூலையிலாவது தமிழ் அந்தஸ்த்து குறைக்கப்பட்டோ எழுத்துப் பிழையுடனோ இருக்குமாயின் 1956 எனும் அவசர தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு தெரியப்படுத்த முடியும். அதற்கு எமது அமைச்சினால் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். 1956 ஆம் ஆண்டே மொழிப்பிரச்சினை ஏற்படுத்தப்பட்டது. அதனாலேயே அந்த இலக்கத்தை மொழிப் புறக்கணிப்புக்கான முறைப்பாடுகளை செய்வதற்குரிய அவசர இலக்கமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
இது மாத்திரமல்லாமல் மொழிக்கொள்கையை சரியாக அமுல்படுத்தும் பொருட்டு 25 சுற்றுநிருபங்கள் வெளியிடப்பட்டுள்ளன. மொழிகள் தொடர்பான பிரச்சினைகள் எழுகின்றபோது அதனை தீர்த்து வைக்கின்ற அதிகாரம் பிரதேச செயலாளர்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது.
எந்தவொரு அரச நிறுவனத்திலும் பொது மக்களுக்கான கடிதங்கள், விண்ணப்ப படிவங்கள் போன்றவை அவரவர் மொழியில் வழங்கப்பட வேண்டும் என்பது கண்டிப்பான நடைமுறையாக மாற்றப்பட்டுள்ளது. பொலிஸ் நிலையங்களில் தமிழ் மொழியில் முறைப்பாடுகளை பதிவு செய்வதற்கான வசதிகளும் தமிழ் மொழி பேசும் பொலிஸாரும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இவை மறுக்கப்படுகின்றபோது எமது அமைச்சின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டால் எம்மால் உடனடி நடவடிக்கை எடுக்க முடியும்.
கருத்து முரண்பாடு என்பது வெவ்வேறு இனங்களிடையே மாத்திரமல்ல, ஒரே குடும்பத்திலும் ஒரே சமூகத்திலும் ஒரே கட்சியிலும் ஒரே அரசாங்கத்தில் கூட நிறையவே முரண்பாடுகள் ஏற்படுகின்றன. அவ்வாறான சந்தர்ப்பங்களில் விட்டுக்கொடுப்புடன், புரிந்துணர்வுடன் பேசுவதன் மூலமே இணக்கப்பாட்டை எட்ட முடியும்.
எந்தவொரு பிரச்சினைக்கும் பேச்சுவார்த்தை மூலமே தீர்வு காண முடியும். கடந்த யுத்த காலத்தில் கூட இவ்வாறான அணுகுமுறைகள் மூலம் நிறைய பிரச்சினைகளுக்கு தீர்வு கண்ட அனுபவம் எமக்குண்டு.
இத்தகைய நல்லிணக்க பணிகளை ஓர் ஒழுங்கமைப்புடன் செய்து மக்களிடையே அமைதி, சமாதானம், சகவாழ்வை நிரந்தரமாக ஏற்படுத்துவதற்கு சமூகப் பிரதிநிதிகளினதும் இளைஞர்களினதும் பங்களிப்பை உள்வாங்கி செயற்றிட்டங்களை முன்னெடுப்பதில் எமது அமைச்சு மிகவும் கரிசனை செலுத்தி வருகிறது" என்று குறிப்பிட்டார்.