அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகளின் அங்கத்தவர்களுக்கும் தொண்டர்களுக்கு அரசியல்துறை தொடர்பாக இந்தியாவில் பயிற்சிகளை வழங்குவதற்கு அகில இந்திய முஸ்லிம் லீக் தயாராக இருப்பதாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் மாநில பொதுச்செயலாளரும் மற்றும் சட்டமன்ற உறுப்பினருமான கே.ஏ.எம். முஹம்மது அபுபக்கர் கூறினார்.
இந்தியத் தூதுக் குழுவினர் ஞாயிறன்று கொழும்பிலுள்ள அகில இலங்கை முஸ்லீக் வாலிப முன்னணிகளின் சம்மேளத் தலைமையகத்துக்கு விஜயம் செய்தனர்.
அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகளின் சம்மேளனத்தின் உபதலைவர் ஷாம் நவாஸ் தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
தொடர்ந்து அங்கு அவர் கருத்துத் தெரிவிக்கையில்,
அகில இந்திய முஸ்லிம் லீக்கும் அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணியும் இணைந்து எதிர்காலத்தில் நெருங்கிய உறவுகளைக் கட்டி எழுப்புவதற்கு, நான் இந்தியா சென்றதும் எமது தலைமையிடம் அது பற்றி பேச்சு வார்த்தை நடத்துவேன்.
அத்தோடு, அடுத்தடுத்து நடக்கும் அரசியல்துறை தொடர்பான பயிற்சி மாநாடுகளில் இலங்கையிலுள்ள இளைஞர்கள் கலந்து கொள்வதற்கு வாய்ப்பு அளிக்கப்படும். அதிலும் முன்னாள் சபாநாயகர் பாக்கீர் மாக்கார் எங்களுடைய தலைவரோடு நெருங்கிச் செயற்பட்ட ஒருவர். அதே போன்று மர்ஹும் ஏ.எச்.எம் அஸ்வர் எமது ஒவ்வொரு நிகழ்வுகளிலும் கலந்து கொண்டு இலங்கைக்கும் - இந்தியாவுக்கும் இடையில் ஓர் இணைப்புப் பாலமாகச் செயற்பட்டவர் எனவும் தெரிவித்தார்.
இந்திய சட்டமன்ற உறுப்பினர் கே. எம். எம். முஹம்மத் அபுபக்கர் நிகழ்வில் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார்.
அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகளின் உபதலைவர் ஷாம் நவாஸ் மற்றும் முன்னாள் தலைவர்களான, என்.எம்.அமீன், சட்டத்தரணி ரஷீட் எம்.இம்தியாஸ், உதவிச் செயலாளர் பௌஸர் பாரூக், செயற்குழு உறுப்பினர் நஸீர், இந்திய ஊடகவிலாளர் திருச்சி சாஹுல் ஹமீது, மாநில துணைச் செயலாளர் இப்ராஹிம் மக்கி, மீடியா போரத்தின் செயலாளர் சாதிக் சிஹான் ஆகியோரும் நிகழ்வில் பிரசன்னமாயிருந்தனர்.