“மாந்தை மேற்கு பிரதேசத்தை மத நல்லிணக்கமுள்ள பிரதேசமாக மாற்றியமைப்போம்”

அடம்பனில் அமைச்சர் ரிஷாட் தெரிவிப்பு! 

ஊடகப்பிரிவு
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்-
ன்னார், மாந்தை மேற்கு பிரதேச சபை எல்லைக்குள் கத்தோலிக்க, இஸ்லாமிய மற்றும் இந்து ஆகிய மூவின மக்களும் வாழ்வதால், இதன் நிருவாகத்தைப் பொறுப்பேற்றிருக்கும் புதிய சபையானது, மத நல்லிணக்கத்துடன் கூடிய பிரதேசமாக இதனை மாற்றி, இன உறவுக்கு முன்னுதாரணம் மிக்க சபையாகத் திகழ வேண்டும் என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

மாந்தை மேற்கு பிரதேச சபையின் தவிசாளர், பிரதித் தவிசாளர் மற்றும் உறுப்பினர்களை வரவேற்கும் விழா, நேற்று மாலை (03) அடம்பன் பிரதேச சபை வளாகத்தில் இடம்பெற்ற போதே, அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

மாந்தை மேற்கு பிரதேச சபை தவிசாளர் ஆசிர்வாதம் சந்தியாகு (செல்லத் தம்பு) அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்த விழாவில், பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றிய அமைச்சர் ரிஷாட் மேலும் கூறியதாவது,
மன்னார் மாவட்டத்திலே யுத்தத்தினால் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்ட கிராமங்கள், இந்தப் பிரதேச சபையில் உள்ளடங்கியுள்ளன. அதுமட்டுமின்றி பாரிய பரப்பினைக்கொண்ட இந்த பிரதேச சபை எல்லைக்குள்ளே, மாந்தை மேற்கு பிரதேச செயலகம் மற்றும் மடு பிரதேச செயலகம் ஆகிய இரண்டு நிருவாகச் செயலகங்கள் அமைந்துள்ளன. அது மட்டுமின்றி கத்தோலிக்கர்களின் புனிதஸ்தலமான மடு மாதா தேவாலயமும் இங்குதான் அமைந்துள்ளது.
யுத்தம் தீவிரப்படுத்தப்பட்டிருந்த காலத்திலேயே, இங்கு வாழ்ந்த மக்கள் மெனிக் பாமுக்கும், முல்லைத்தீவுக்கும் ஓடிய வரலாறுகளும், அவர்கள் அகதிகளாக முகாம்களிலே கிடந்து அவதிப்பட்ட நிகழ்வுகளும் என் கண் முன்னே நிற்கின்றது. அந்தவேளை, இந்தப் பிரதேசத்திலே வாழ்ந்த மக்களுக்கு என்னால் முடிந்தவற்றை நான் செய்துள்ளேன் என்பதை மிகவும் மனத்திருப்தியுடன் கூறுகின்றேன். அதுமட்டுமின்றி இந்தப் பிரதேசத்தில் வாழும் மக்கள், மிகவும் நன்றியுடையவர்கள் என்பதை பல சந்தர்ப்பங்களில் வெளிப்படுத்தியிருக்கின்றனர்.
அதன் பிரதிபலனாகவே மாந்தை மேற்கு பிரதேச சபையில் என்றுமில்லாதவாறு 13 ஆசானங்களில், 11 ஆசனங்களை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் இம்முறை கைப்பற்றியது. அதனாலேயே நேர்மையான அரசியல் அனுபவமுள்ள செல்லத்தம்பு ஐயாவின் தலைமையில், மாந்தை மேற்கு பிரதேச சபையின் ஆட்சியை எம்மால் அமைக்க முடிந்தது.

பதவிகள் என்பது தற்காலிகமானாவையே. எனவே இந்தப் பிரதேச சபையின் அதிகாரத்தை தமது தோள்களில் சுமந்தவர்கள் எந்தவிதமான கட்சி, இன வேறுபாடுகளுக்கு அப்பால் பணியாற்ற வேண்டும்.
யுத்தத்தினால் நாம் இழந்தவைகள் அதிகம். குண்டுச் சத்தங்களும், ஈனக்குரல்களும் இன்னும் எம்மை விட்டு அகலாத நிலையில், நாம் அவற்றிலிருந்து படிப்படியாக விடுதலைப் பெறவேண்டும். மக்களின் வாழ்க்கைத் தரத்தை முன்னேற்றுவதற்கான நடவடிக்கைகளில் நாம் ஈடுபட வேண்டுமேயொழிய, நமது சுயநலங்களை மையமாகக் கொண்டு இயங்கக் கூடாது. ஒவ்வொரு உறுப்பினரும் மனச்சாட்சிக்கு ஏற்ப நடந்துகொண்டால், இந்தப் பிரதேசத்தை வளங்கொழிக்கும் பகுதியாக மாற்ற முடியும்.

30 வருட காலங்களாக நமது மக்கள் பட்ட கஷ்டங்களை மனதில் இருத்திப் பணியாற்றுங்கள். நமக்கிடையே எந்தவொரு பேதமையும் வேண்டாம். அதிகாரத்தில் உள்ளவர்கள் எதிர்க்கட்சியினரின் ஆலோசனைகளைப் பெற்று, அபிவிருத்திகளை முன்னெடுங்கள். அதன்மூலமே அபிவிருத்திகளை தடையின்றி மேற்கொள்ள முடியும் என்றும் அமைச்சர் கூறினார்.
இந்த விழாவில், வடமாகாண சபை உறுப்பினர் ஜெயதிலக்க, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் செயலாளர் சுபைர்தீன், முன்னாள் மாகாண சபை உறுப்பினரும், அமைச்சரின் பிரத்தியேகச் செயலாளருமான ரிப்கான் பதியுதீன் மற்றும் மக்கள் காங்கிரஸின் முக்கியஸ்தர்கள் உட்பட பலர் பங்கேற்றிருந்தனர்.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -