அம்பாறை பிரதேசத்திலுள்ள முஸ்லிம் பள்ளிவாசல் மற்றும் முஸ்லிம் வர்த்தகர்களுக்குச் சொந்தமான கடைகள் மற்றும் வாகனங்கள் என்பன தீக்கிரையாக்கப்பட்டுள்ளன.
நேற்று (26) இரவு முதல் இன்று அதிகாலை 1.00 மணி வரை, குறித்த பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு சில குழுவினரால் குறித்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து, அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் ஆரம்ப கைத்தொழில் அமைச்சருமான தயா கமகே குறித்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
குறித்த அறிக்கை வருமாறு..
நேற்று (26) இரவு ஒரு சில குழுவினரால் நாட்டை நிலைகுலையச் செய்யும் நோக்கில் அம்பாறை பிரதேசத்தின் ஒரு சில இடங்களில் அசம்பாவித சம்பவங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அரசாங்கத்திற்கு அபகீர்த்தி ஏற்படுத்தும் நோக்கிலும் சமாதனம் மற்றும் நல்லிணக்கத்தை குலைக்கும் நோக்கில் மேற்கொள்ளப்பட்டுள்ள குறித்த செயற்பாடு மற்றும் சதிகாரர்களின் செயற்பாடுகளை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள், தற்போது என்னால் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இவ்வேளையில் சதிகாரர்களின் வலையில் சிக்கி விடாமல், அறிவுடன் செயற்படுமாறு தேசப்பற்றுள்ள அனைத்து மக்களிடமும் கேட்டுக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.