‘அம்பாரைப் பள்ளிவாசல் உடைப்பு தமிழ் ஈழ கிழக்கெல்லையை அடையாளம் காட்டியுள்ளது’




-முன்னாள் அமைச்சர் எம்.எச். சேகு இஸ்ஸதீன்-


26.02.2018 திங்கள் இரவு அம்பாரை நகரில் முஸ்லிம் தேனீர்க் கடைகளை உடைப்பதில் தொடங்கி அம்பாரை ஜும்ஆப் பள்ளிவாசலையும், அதனோடு ஒட்டியிருந்த தங்கும் அறைகளையும் நொறுக்கி, வாகனங்களையும் பொலிஸார் முன்னிலையிலேயே தீக்கிரையாக்கிய சம்பங்கள் சிங்கள பௌத்த தேசியம் முஸ்லிம்களையும் நாடு பூராகவும் சீண்டி வடக்கு கிழக்கு முஸ்லிம்களை தமிழ் ஈழ போராட்டத்திற்கு மீள் உயிர்கொடுக்க வடக்கு கிழக்கு முஸ்லிம்களையும் பங்காளிகளாக்கி வைத்துள்ளதுடன் தழிழ் ஈழத்தின் கிழக்கு வாசலையும் அடையாளம் காட்டியுள்ளது. என்று முன்னாள் அமைச்சர் முஸ்லிம் தேசிய முன்னணியின் தலைவர் சட்டத்தரணி எம்.எச். சேகு இஸ்ஸதீன் அபிப்பிராயம் தெரிவித்துள்ளார்.

நாடளாவிய தமிழ்மொழி சிறுபான்மை இனங்கள் மீதான காலத்திற்குக் காலம் கைக்கொள்ளப்பட்டுவரும் அழிச்சாட்டியங்களும், அடக்கு முறைகளும் இப்போது வடக்கு கிழக்கிலும் விஸ்தரிக்கப்பட்டு வருகிறது. இறக்காமம் மாயக்கல்லி மலையில் முஸ்லிம் பிரதேசத்தில் புத்த சிலையை நிறுத்தியதிலிருந்து வடக்கு கிழக்கில் புத்த ஆலயங்களுக்கு ஆயிரம் இடங்களை அடையாளம் கண்டிருப்பதாக நல்லாட்சி அரசாங்கம் கூறியிருப்பதும், சம்மாந்துறைப் பிரதேசத்தைச் சுற்றி 33 இடங்கள் அதற்காக அடையாளம் காணப்பட்டுள்ளதான செய்தியும் தமிழ் மொழிச் சமுகங்களின் தன்மானத்திற்கும் தற்பாதுகாப்பிற்குமாக தமிழ் தேசியத்தோடு முஸ்லிம் தேசியத்தையும் ஒன்றிணைத்துப் போராட வைக்கும் நிலையையே உருவாக்கியுள்ளது.

தமக்கிடையே உள்ள கருத்து வேறுபாடுகளைக் களைந்து இரண்டு தமிழ் மொழி தேசியங்களும் தம்மைப் பாதுகாக்கக்கூடிய ஆட்சி அதிகாரம் பற்றிய புரிந்துணர்வுடனான ஏற்பாடுகளில் இணக்கம் கண்டு தத்தம் சுய நிர்ணய உரிமைகளை உறுதிப்படுத்தும் ஒன்றிணைந்த போராட்டத்தை முன்னெடுக்கும் காலம் கைக்கெட்டிய தூரத்திற்கு வந்துள்ளது.

அம்பாரையில் ஆரம்பித்து வைக்கப்பட்ட இனவெறி அச்சுறுத்தல்கள் அம்பாரை மாவட்டத்தில் தமிழ் மொழி கரையோர மாவட்டம் சகல தமிழ், முஸ்லிம் மக்களுக்கும் பொருத்தமான, மையமான இடத்தில் அமைக்கப்படுவதை இந்த இனக்கலவரம் வலியுறுத்தியுள்ளது.

அத்தோடு நின்று விடாமல் அம்பாரையில் அமைந்துள்ள சகல அமைச்சுகளுக்குமுரிய மாவட்ட அலுவலகங்களும் கரையோர மாவட்டத்தில் நிறுவப்பட வேண்டும்.

இந்த விடயத்தை தமிழ்த் தேசியமும், முஸ்லிம் தேசியமும் ஒன்றிணைந்து ஆரம்பிக்க வேண்டியது அவசியப்பட்டுள்ளது. அது மாத்திரமல்லாமல் அனைத்துப் போராட்டங்களிலும் இணைந்து செயற்படுவதற்கான பேச்சு வார்த்தைகளை இரு தேசியங்களும் காலதாமதமின்றி ஆரம்பிக்க வேண்டும்.

போதனைகளால் புரிய வைக்க முடியாமல் போயுள்ள பாடங்களை சாதனைகளால் சரித்திரமாக்கிக் காட்டி நாட்டை சகலரும் சமமாக வாழுமிடமாக்க நாம் துணிவு கொள்ள வேண்டும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -