இலங்கை மின்சார சபை தலைமையகத்திற்கு முன்பாக சற்று முன்னர் அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கை மின்சார சபை ஊழியர்களுக்கும், கம்பனித்தெரு பொலிஸாருக்கும் இடையே இன்று இரவு ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து குறித்த பகுதியில் கடும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவத்தை அடுத்து கம்பனித்தெரு பொலிஸார் களத்தில் குவிக்கப்பட்டுள்ளதுடன், மின்சார சபை ஊழியர்களில் சிலர் கல்வீச்சுத் தாக்குதல் நடத்தியிருப்பதாகவும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.இலங்கை மின்சார சபையின் தலைமையக ஊழியர்கள் கடந்த 2014ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட சம்பளம் தொடர்பான சுற்றுநிரூபத்தை இரத்து செய்யுமாறு வலியுறுத்தி போராட்டமொன்றை நடத்தி வந்துள்ளனர்.
இன்றைய தினம் இந்தப் போராட்டம் உக்கிரநிலைமை அடைந்ததை அடுத்து இலங்கை மின்சார சபை தலைமையகம் ஊழியர்களால் முற்றுகையிடப்பட்டது.
இந்த நிலையில் போராட்ட நிலைமையை வழமைக்கு கொண்டுவர கம்பெனித்தெரு பொலிஸார் களமிறங்கபட்டனர். எனினும் அது பதற்றமான நிலைக்க மாறியுள்ளது.இந்தச் சூழ்நிலையில் சில ஊழியர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டதோடு பொலிஸ் வாகனங்களுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளதாக கம்பனித்தெரு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இந்த மோதலில் பொலிஸார் சிலர் காயமடைந்துள்ளதுடன், போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் சிலருக்கும் காயம் ஏற்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த மோதல் சம்பவம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர் என அங்கிருக்கும் ஊடகவியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
