பெப்ரவரி முதல் வாரத்தில் அனைத்து உள்ளூராட்சி சபைகளுக்கும் தேர்தலை நடத்தும் வேட்புமனு கோரலுக்கான அறிவிப்பை தேர்தல்கள் ஆணையகம் நாளை வெளியிடவுள்ளது.
உள்ளூராட்சிசபைகளுக்கான தேர்தலை நடத்துவதற்கான வேட்புமனு கோரலுக்கான தினங்கள் கடந்த 27ஆம் திகதி அறிவிக்கப்படவிருந்தன. என்றாலும், கடந்த பெப்ரவரி மாதம் உள்ளூராட்சித் தேர்தல் எல்லை நிர்ணயம் குறித்து வெளியிடப்பட்டவர்த்தமானியின் குறைப்பாடுகளைச் சுட்டிக்காட்டி மேல்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் காரணமாக 93 உள்ளூராட்சி
சபைகளுக்கான வேட்புமனுக்களுக்கான கோரல் மாத்திரமே அறிவிக்கப்பட்டிருந்தது.
மேல்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு சுதந்திரக் கட்சியின் மத்தியஸ்தத்தின் கீழ் வாபஸ் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதால் அனைத்து உள்ளூராட்சிமன்றங்களுக்குமான தேர்தலை நடத்தக்கூடிய சூழல் உருவாகியுள்ளது.
அதன் அடிப்படையில் நாளை அனைத்து உள்ளூராட்சிமன்றங்களுக்குமான வேட்புமனுகோரலுக்கான அறிவிப்பை தேர்தல் ஆணையகம் வெளியிடவுள்ளது. ஏற்கனவே, அறிவிக்கப்பட்டிருந்த தினங்களுக்கான வேட்பு மனுகோரல் தினமும் இன்று அறிவிக்கப்படும் தினம்வரை நீடிக்கப்படவுள்ளது.
இந்நிலையில், அடுத்தாண்டு பெப்ரவரி மாதம் முதல் வாரத்தில் தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல்கள் ஆணையாளர் அறிவித்திருந்தார்.
அரசியலமைப்பு பிரகாரம் சனிக்கிழமையொன்றிலேயே தேர்தலொன்றை நடத்த முடியும். அதன்படி பெப்ரவரி முதல் வாரத்தில் 3ஆம் திகதியே சனிக்கிழமையாக காணப்படுகிறது. சுதந்திர தினத்திற்கு முதல் தினம் என்பதால் அடுத்துவரும் சனிக்
கிழமையே (10.02.2018) தேர்தல் நடத்தப்படும் வாய்ப்புள்ளது.
