காரைதீவு நிருபர் சகா-
எதிர்வரும் உள்ளூராட்சி சபை தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் உள்ள சபைகளுக்கும் ஐக்கிய தேசிய கட்சி போட்டியிடுகின்றது. ஆனால் ஊர் ஒற்றுமையின் பொருட்டு காரைதீவு பிரதேசசபையில் ஜ.தே.கட்சி போட்டியிடாது. என்று ஐக்கிய தேசிய கட்சியின் காரைதீவு பிரதேச அமைப்பாளர் பி. ரி. தர்மலிங்கம் தெரிவித்தார்.
எதிர்வரும் உள்ளூராட்சி சபை தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் உள்ள சபைகளுக்கும் ஐக்கிய தேசிய கட்சி போட்டியிடுகின்றது. இந்நிலையில் இச்சபைகளுக்கான வேட்பாளர்கள் தெரிவு ஐக்கிய தேசிய கட்சியின் அம்பாறை மாவட்ட அமைப்பாளர் அமைச்சர் தயா கமகே மற்றும் பொத்துவில் தொகுதி அமைப்பாளர் லொயஸ் ஆதம்பாவா ஆகியோர் முன்னிலையில் அம்பாறையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.
பி. ரி. தர்மலிங்கம் இத்தேர்தலில் காரைதீவில் எந்தவொரு அரசியல் செயற்பாடுகளையும் மேற்கொள்ள மாட்டார் என்று தெரியப்படுத்தி விட்டு கூட்டத்தில் இருந்து இடையிலேயே வெளியேறினார்.
பிற்பாடு இது தொடர்பாக இவர் ஊடகவியலாளர்களுக்கு கருத்து கூறியபோதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இவர் தெரிவித்தவை வருமாறு:-
காரைதீவு பிரதேச சபை தேர்தலில் காரைதீவு பிரதேசம் முன்னிலை வகிக்க வேண்டும் என்பதற்காக காரைதீவில் இருந்து சுயேச்சை குழுவாக போட்டியிடுவது என்று காரைதீவு பிரதேச மக்கள் ஒன்றாக கூடி தீர்மானம் எடுத்தனர்.
ஆனால் இத்தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி, தமிழ் தேசிய கூட்டமைப்பு, தமிழ் மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி போன்ற கட்சிகளின் செயற்பாட்டாளர்களையும் இச்சுயேச்சை குழுவுக்குள் வேட்பாளர்களாக உள்ளீர்க்க வேண்டும் காரைதீவு மகா சபைக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.
ஆயினும் இக்கோரிக்கையை காரைதீவு மகா சபை பொருட்படுத்தவில்லை. இதனாலேயே காரைதீவு பிரதேச சபை தேர்தல் களத்தில் பல கட்சிகளும் குதிக்க நேர்ந்தது.
காரைதீவில் இருந்து காரைதீவு பிரதேச சபைக்கு சுயேச்சை குழுவாகவே போட்டியிட வேண்டும் என்கிற ஊர் தீர்மானத்தை எனது கட்சி தலைமைக்கு நான் தெரியப்படுத்தினேன். ஆனால் ஒரு தேசிய கட்சி என்கிற வகையில் அனைத்து சபைகளுக்கும் போட்டியிடுவது என்கிற முடிவில் கட்சி தலைமை உறுதியாகவும், தெளிவாகவும் உள்ளது.
இந்நிலையில் வேட்பாளர் தெரிவு கூட்டத்தில் பிரசன்னமான நான் காரைதீவு பிரதேச சபை தேர்தலில் கட்சி நலனை காட்டிலும் ஊர் நலனே எனக்கு முக்கியமானது என்பதால் இத்தேர்தலில் காரைதீவில் எந்தவொரு அரசியல் நடவடிக்கைகளிலும் ஈடுபட போவதில்லை என்கிற எனது முடிவை அறிவித்து விட்டு இடையில் வெளியேறி வந்து விட்டேன்.
நான் ஊர் தீர்மானத்துக்கு மதிப்பு கொடுத்தும், கட்டுப்பட்டும் இவ்விதம் நடந்து கொண்டேன் என்பதை பத்திரிகை வாயிலாக எனது ஊர் மக்களுக்கும், மகா சபைக்கும் தெரியப்படுத்துகின்றேன்.