முஸ்லிம் அரசியல் கட்சித் தலைவர்களும், பிரதிநிகளும் உள்ளுராட்சி திருத்த சட்டத்திற்கு கண்மூடித்தனமாக ஆதவு வழங்கியதன் ஊடாக பெண் வேட்பாளர்களை பலவந்தமாக தேடும் நிலைமை முஸ்லிம் அரசியல் கட்சிகளுக்கு ஏற்பட்டது.
கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சர் எம்.எஸ். உதுமாலெப்பை
புதிய உள்ளுராட்சி திருத்த சட்டத்தினை முஸ்லிம் அரசியல் தலைமைகள் கண்மூடித்தனமாக ஆதரித்ததனால் முஸ்லிம் சமூகம் வடகிழக்கு மாகாணங்களுக்கு வெளியில் தங்களுக்கான உள்ளுராட்சி பிரதிநிதித்துவங்களை இழந்துள்ளதுடன், முஸ்லிம் பெண் வேட்பாளர்களை பலவந்தமாக அரசியலுக்கு கொண்டுவர வேண்டிய இக்கட்டான சூழ்நிலை முஸ்லிம் அரசியல் கட்சிகளுக்கு ஏற்பட்டுள்ளது என அட்டாளைச்சேனை பிரதேச சபைத் தேர்தலில் தேசிய காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் எம்.எஸ்.ஜஃபர் அவர்களை ஆதரித்து இக்ரஹ் வட்டாரத்தில் தொழில் அதிபர் ஏ.எல்.எம்.மக்கீன் ஜேபி அவர்களின் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய கிழக்கு மாகாண முன்னாள் வீதி அபிவிருத்தி அமைச்சரும், அம்பாரை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவருமான எம்.எஸ்.உதுமாலெப்பை தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்...
நமது முஸ்லிம் பெண்கள் பெரும்பாலும் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதனை விரும்புவதில்லை. எப்போதும் நமது கலாச்சார விழுமியங்களை பேணுபவர்களாகவே முஸ்லிம் பெண்கள் உள்ளனர். புதிய உள்ளுராட்சி முறைமையினால் முஸ்லிம் பெண் வேட்பாளர்களை பலவந்தமாக அரசியலுக்குள் உள்வாங்க வேண்டிய சூழ்நிலை முஸ்லிம் அரசியல் கட்சிகளுக்கு ஏற்பட்டுள்ளது. பாராளுமன்றத்தில் பிரதேச சபைத்திருத்த சட்டம் கொண்டு வரப்பட்ட போது அதற்கு ஆதரவு தெரிவித்த முஸ்லிம் அரசியல் தலைமைகளும், நமது பிரதி நிதிகளும் நடைபெறவுள்ள உள்ளுராட்சி தேர்தலில் பெண் வேட்பாளர்கள் விடயத்தில் பல சவால்களை சந்திக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது.
பழைய தேர்தல் முறைமையினால் உள்ளுராட்சி சபைகளில் 85 பெண்கள் மாத்திரம் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். புதிய தேர்தல் முறைமையினால் எதிர்வரும் பெப்ரவரி மாதம் சுமார் 2000 பெண்கள் உள்ளுராட்சி சபைகளில் உறுப்பினர்களாகும் நிலைமை ஏற்பட்டுள்ளது.
அட்டாளைச்சேனைப் பிரதேச சபையின் அதிகாரத்தினை பல தடவைகள் முஸ்லிம் காங்கிரஸூக்கு நமது பிரதேச மக்கள் வழங்கினார்கள். இதனால் நமது பிரதேசம் அடைந்த நன்மைகளை நமது பிரதேச மக்கள் நன்கு அறிவார்கள்.
அட்டாளைச்சேனைப் பிரதேச சபையின் அதிகாரத்தினை இந்த முறை தேசிய காங்கிரஸிடம் ஒப்படைப்பதன் ஊடாக நமது பிரதேசம் பல நன்மைகளை அடையக் கூடிய நிலைமை ஏற்படும் எனவே அட்டாளைச்சேனைப் பிரதேச மக்கள் வெறும் கோஷங்களையும், பொய்யான வாக்குறுதிகளையும் நம்பி தொடர்ந்து ஏமாற்றம் அடையாமல் தேசிய காங்கிரஸில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரிப்பதுடன் ஊடாக நமது பிராந்திய அபிவிருத்திக்காகவும், நமது சமூகத்தின் நலனுக்காகவும் பங்களிக்க முடியும் எனத் தெரிவித்தார்.
