தென்மேற்கு பகுதியில் நிலைகொண்டுள்ள தாழமுக்கம் காரணமாக இன்றைய தினமும் நாட்டில் சீரற்ற காலநிலை தொடருமென வளிமண்டலவியல் திணைக்கம் தெரிவித்துள்ளது.
தற்போது இலங்கையின் தென்மேற்கு பக்கமாக 200 கிலோமீற்றர் தொலைவில் நிலைகொண்டுள்ள தாழமுக்கம் மேலும் வலுவடைந்து நாட்டைவிட்டு நகரும் என எதிர்பார்ப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் இன்று காலை விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
மணிக்கு 60 முதல் 70 கிலோமீற்றர் வேகத்துடனான காற்று வீசுவதோடு, பல பகுதிகளிலும் கடும் மழைபெய்யக்கூடும் எனவும் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
நாட்டை சூழவுள்ள கடற்பிராந்தியங்களில் கடல் கொந்தளிப்பாக காணப்படும் எனவும் கரையோரப்பகுதிகள் மற்றும் ஆழ்கடல் பகுதிகளில் பலத்த காற்று வீசும் எனவும் கூறப்பட்டுள்ளது.
தென், சப்ரகமுவ, மத்திய, ஊவா மற்றும் மேல் மாகாணங்களில் 100 தொடக்கம் 150 மில்லிமீற்றர் அளவிலான
மழை பெய்யக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் கூறியுள்ளது.
பலத்த மழைக்காரணமாக நாட்டின் பல மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை, இரத்தினபுரி, நுவரெலியா, பதுளை, மெனராகலை, மாத்தளை மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
மண்சரிவிற்கான அறிகுறிகள் காணப்படும் பகுதிகளிலிருந்து உடனடியாக வெளியேறுமாறு நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி குறிப்பிட்டுள்ளார்.
பலத்த மழை காரணமாக மரங்கள் முறிந்து வீழ்ந்தமையினால் தலைநகர் உள்ளிட்ட பல பகுதிகளிலும் மின் விநியோகம் தடைப்பட்டுள்ளது.
கொழும்பு, மாத்தளை, காலி, பதுளை, மற்றும் களுத்துறை மாவட்டங்களின் சில பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. சீரற்ற வானிலை காரணமாக மின்விநியோகத்தினை வழமைக்கு கொண்டுவருவதில் தாமதம் நிலவுவதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
நாட்டில் நிலவும் சீரற்ற வானிலைக் காரணமாக மேல், மத்திய, தெற்கு மற்றும் ஊவா மாகாணங்களில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் இன்று விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இதேவேளை சில பாடசாலைகளில் மரங்கள் முறிந்து வீழ்ந்துள்ளதாகவும், கட்டடங்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவங்கள் தொடர்பில் மதீப்பீட்டு பணிகள் இன்று முன்னெடுக்கபடும் என கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, நேற்றிரவு கடலுக்கு சென்ற 07 படகுகள் காணாமல் போயுள்ளன. குறித்த படகுகளில் 12 மீனவர்கள் சென்றுள்ளதாக கடற்றொழில் திணைக்களம் தெரிவித்துள்ளது. கடற்படையினரின் உதவியுடன் காணாமல் போயுள்ள படக்களை தேடும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.