எம்.ரீ. ஹைதர் அலி-
அல் - மதீனாஸ் இளைஞர் கழகத்தின் கடந்த ஆண்டுக்கான வேலைத்திட்டங்களுக்கான மதிப்பீட்டு செயற்றிட்ட நிகழ்வு
ஐரோப்பிய யூனியனின் அனுசரணையின் கீழ் காத்தான்குடி அல் - மதீனாஸ் இளைஞர் கழகத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்ட கடந்த ஆண்டுக்கான வேலைத்திட்டங்களுக்கான மதிப்பீட்டு செயற்றிட்ட நிகழ்வு 2017.11.02ஆந்திகதி - வியாழக்கிழமை புதிய காத்தான்குடி 167B கிராம சேவகர் அலுவலகத்தில் நடைபெற்றது.
அல் - மதீனாஸ் இளைஞர் கழகத்தின் தலைவரும், காத்தான்குடி இளைஞர் சம்மேளனத்தின் அமைப்பாளருமான I.M. ஹறூஸ் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் ஐரோப்பிய யூனியனின் திட்ட மதிப்பீட்டாளர் வைத்தியர் ரெயின்ஹார்ட் ஸ்கின்னர், யுனிசப் நிறுவனத்தின் சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் நவரத்தினம் அன்ருவ், காத்தான்குடி இளைஞர் சம்மேளனத்தின் தலைவர் A.C.M.ரிம்சான், PLAN நிறுவனத்தின் சமூக ஊக்குவிப்பாளர் அமலன், சத்தியதாசன் (CPRO), PLAN நிறுவனத்தின் திட்ட ஆலோசகர்களான திரு. இராம மூர்த்தி மற்றும் சத்தியநாதன் ஆகியோர் கலந்து கொண்டதோடு, விஷேட அதிதியாக முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் மட்டக்களப்பு தொகுதி அமைப்பாளருமான கௌரவ பொறியியலாளர் ஷிப்லி பாறூக் அவர்களும் கலந்து கொண்டார்.
இதன்போது அல் - மதீனாஸ் இளைஞர் கழகத்தின் கடந்த கால செயற்றிட்டங்கள் தொடர்பான விரிவான மீளாய்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதோடு எதிர்காலத்தில் நடைமுறைப்படுத்தப்படவிருக்கும் பல்வேறு வேலைத்திட்டங்கள் தொடர்பான கலந்துரையாடல்களும் மேற்கொள்ளப்பட்டன.
புதிய காத்தான்குடி 167B கிராம சேவகர் பிரிவினைப் பிரதிநிதித்துவப்படுத்தி இயங்கிவரும் அல் மதீனாஸ் இளைஞர் கழகமானது காத்தான்குடி மற்றும் அதனைச் சூழவுள்ள பிரதேசங்களை மையப்படுத்தி கல்வி, விளையாட்டு, கலாச்சாரம், இளைஞர் அபிவிருத்தி உள்ளிட்ட பல்வேறு செயற்றிட்டங்களை தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.