அஹதிய்யாப் பாடசாலைகளில் கல்வி பயிலும் மாணவர்களின் நலன் கருதி அவர்களுக்கு இஸ்லாமிய பாடங்களில் ஒரு அங்கீகாரத்தை வழங்கும் வகையில் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் அஹதிய்யா மற்றும் இஸ்லாமிய சமய பாடசாலைகளுக்கான புதிய பாடத்திட்டங்களை தயாரித்து வெளியிடும் ஒரு பாரிய சேவையைச் செய்து முடித்துள்ளது.
இதுவரை காலமும் ஒரு சிறந்த பாடத்திட்டம் இல்லாத குறையைக் கண்டறிந்த திணைக்களம் இந்த மாணவர்களுக்கு அவர்களின் அடைவு மட்டத்தைக் கூட்டும் வகையில் புதிய பாடத்திட்டத்தை குறித்த துறைகளில் பாண்டித்தியம் பெற்ற புத்தி ஜீவிகள் அடங்கிய குழுக்களினால் வெளிப்படையான முறையில் இஸ்லாமியப் பாடங்களில் மாணவர்கள் சிறந்த அறிவையும் அதன் மூலம் நல்ல சிறப்புத் தேர்ச்சியையும் அடைந்து கொள்ளும் வகையில் தேசிய மட்ட பாட நெறிகளுக்கு ஏற்ற வகையில் தரம் 06, 07, 08 மற்றும் 09 ஆகிய தரங்களில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு இப்பாடத் திட்டத்தை தயாரித்து வெளியிடுகின்றமை இந்தத் திணைக்களத்தின் வரலாற்றில் ஒரு திருப்பு முனை என்றே கூறலாம்.
இம்முறை சுமார் 28 புத்தகங்களை தமிழ், சிங்களம் மற்றும் ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் இப்பாடத்திட்டத்தை தயாரித்து வெளியிடுகின்றது. இதில் ஏற்கெனவே தமிழ் மொழியில் 10 புத்தகங்கள் வெளியிடப்பட்டன. தற்போது இவற்றின் சிங்கள மற்றும் ஆங்கில மொழி பெயர்ப்புடன் வெளியிடப்படுவதுடன் மேற்படிப் பாடத்திட்டத்திற்கு மேலதிகமாக புதிதாக தமிழ் மொழியில் 08 புத்தகங்களும் வெளியிடப்படுகின்றன.
இந்த வகையில் திணைக்களத்தால் அஹதிய்ய இறுதி சான்றுப் பரீட்சைக்கான அல்-அக்கீதா தொடர்பான இஸ்லாம் தீனியாத் தர்மாச்சார்ய பரீட்சைக்கான அல்-அக்கீதா மஸாதிருஷ் ஷரீஆ, அல்-பிக்ஹூல் இஸ்லாம், அல்-அஹ்லாக் வஸ்சூலூக், அஸ்ஸீரா வத்தாரிககுல்; இஸ்லாம் ஆகிய நான்கு (04) புத்தகங்களும்,
இஸ்லாமிய தீனியாத் தர்மாச்சார்ய பரீட்சைக்கான அல்-அக்கீதா மஸாதிருஷ் ஷரீஆ, அல்-பிக்ஹூல் இஸ்லாம், அல்-அஹ்லாக் வஸ்சூலூக், அஸ்ஸீரா வத்தாரிக் இஸ்லாம், அல்-அதாபுல் இஸ்லாம் வல்லுக்கத்துல் அராபியா, அரபிக் மொழி மற்றும் தஜ்ஜிவீத் சட்டம் ஆகிய ஆறு புத்தகங்களினதும் சிங்கள மற்றும் ஆங்கில மொழிகளிலும் வெளியிடப்பட்டவுள்ளன. மேற்படி ஆறு (06) புத்தகங்களும் ஏற்கெனவே தமிழ் மொழியில் வெளியிடப்பட்டன. தற்போது சிங்களம் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளில் வெளியிடப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
அத்துடன் புதிதாக தரம் 6, 7, 8, 9 ஆகிய ஒவ்வொரு தரங்களுக்கும் வேறு வேறாக பகுதி ஒன்றுக்கான மஸாதிருஷ் ஷரீஆ, அஸ்ஸீரா வத்தாரிக் ஆகிய தலைப்புக்களிலும், பகுதி இரண்டிற்கான அகீதா, இபாதா, அக்லாக் ஆகியவை அடங்கிய பாடப்புத்தகங்களும் தமிழ் மொழியில் வெளியிடப்பட இருப்பதுடன் இவற்றிற்கான சிங்கள மற்றும் ஆங்கில மொழி பெயர்ப்புக்களையும் விரைவாக வெளியிட திணைக்களம் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் திணைக்களத்தின் பணிப்பாளர் எம்.ஆர்.எம். மலிக் தெரிவித்தார்.
இப்பாடத்திட்டத்தின் கீழ் மாணவர்கள் கல்வி பயின்று தேர்ச்சி பெறும் பட்சத்தில் அவர்கள் சமய ஆசிரியர்களாக ஆகுவதற்கும் வாய்ப்புக்கள் உள்ளன. இதற்கான ஒரு திட்டத்ததைக்கூட அரசு முன்வைத்துள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
இந்த வகையில் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்டுள்ள இப்பாடத்திட்டத்திற்கு அமைய ஒவ்வொரு அஹதிய்யாக்களும் தமது கல்வி நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்லுமானால் அதன் மூலம் மாணவர்கள் இஸ்லாமிய பாட நெறிகளில் ஒரு சிறந்த அடைவு மட்டத்தினை பெற்றுக் கொள்ளலாம் என்பதே திணைக்களத்தின் எண்ணப்பாடாகும்.
மேற்படிப் பாடப்புத்தக வெளியீடு இன்று 28ஆம் திகதி செவ்வாய்க்கிழமை பிற்பகல் 4.00 மணிக்கு தபால், தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய விவகார அமைச்சர் எம்.எச்.அப்துல் ஹலீம் தலைமையில் 310, டி.ஆர். விஜேவர்த்தன மாவத்தை, கொழும்பு-10 இல் உள்ள தபால் திணைக்களத்தின் தலைமையக கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது. (திணைக்கள தொடர்புகளுக்கு 0112669997- தொலை நகல்: 0112692147)
