மலையக மக்கள் இலங்கை தொழிலாளர் காங்கிரஸையும், ஆறுமுகன் தொண்டமானையுமே மலையகத்தின் தலைமையாக ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள் என்பதை எதிர்வரும் உள்ளுராட்சி மன்ற தேர்தல் மூலம் நிரூபித்து காட்டுவார்கள் என மத்திய மாகாண விவசாய,இந்து கலாச்சார மற்றும் கல்வி அமைச்சர் மருதபாண்டி ரமேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தல் தொடர்பான மக்கள் சந்திப்பு இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமான் அவர்களின் தலைமையில் கிறெட்வெஸ்டன், ஹொலிரூட் மற்றும் ரட்ணகிரிய பகுதிகளில் நடைபெற்றது. இச்சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு மாகாண அமைச்சர் தொடர்ந்து உரையாற்றுகையில்
கடந்த தேர்தலின்போது இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் முத்து சிவலிங்கம் பொதுச்செயலாளர் ஆறுமுகன் தொண்டமான் ஆகியோர் மக்களை நேரடியாக சந்தித்து எதிர்காலம் எப்படி உருவாக போகின்றது என்பதை முன்கூட்டியே சொன்னார்கள்.அன்று மக்கள் எதிர்ப்பார்த்தார்கள் காங்கிரஸை விட வேறு யாராவது மக்களுக்கு சேவை செய்யவேண்டும் என்று இன்று அவர்களின் சேவை எப்படி இருக்கின்றது என்று உணர்ந்துள்ளார்கள்.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் சௌமிய மூர்த்தி தொண்டமான் மற்றும் ஆறுமுகன் தொண்டமான் ஆகியோர் மலையக மக்களுக்காக பெற்றுக்கொடுத்த உரிமைகளும் சலுகைகளும் இந்த இரண்டு வருட காலத்தில் இல்லாமல் போய்கொண்டு இருக்கின்றது. அன்று ஆறுமுகன் தொண்டமான் 30 பேர்ஜஸ் காணியில் 13 இலட்சம் பெறுமதியான வீடுகளை கொட்டக்கலை ஸ்டோனிகிளிப் தோட்டத்தில் கட்டினார்.அது ஒரு அழகான கிராமமாக காட்சியளிக்கின்றது.
அன்று ஆறுமுகன் தொண்டான் லயன் அறைகளை முழுமையாக உடைத்து எறிந்துவிட்டு தனிவீடுகளை கட்டி தோட்டம் முழுவதையும் கிராமமாக மாற்ற வேண்டும். தொழிலாளர்களுக்கு வேலை செய்ய தேவையான காணிகளை விடுத்து எஞ்சிய காணிகளை எமது இளைஞர் யுவதிகளுக்கு பிரித்து கொடுத்து சுயதொழிலை ஊக்குவிக்க வேண்டும் என அரசாங்கத்திடம் கேட்டிருந்தார். சுயதொழிலுக்கான நடவடிக்கைகளை தமது அமைச்சினூடாக செய்து கொடுக்கின்றேன் என்றார்.
அன்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பேச்சை கேட்காமல் மக்கள் சிலருக்கு வாக்களித்தீர்கள் அதன் பிரதி பலனை இன்று அனுபவிக்கின்றீர்கள். கிராமம் என்பது முழு தோட்ட லயன்களுக்கும் பதிலாக சகல வசதிகளையும் கொண்ட குடியிருப்பு தொகுதியை உருவாக்குவதே தவிர இருபது வீடுகளை கட்டி அதற்கு பெயர் சூட்டி கிராமம் என்று அழைப்பதல்ல. தற்போதைய ஆட்சியில் மலையக மக்கள் பலவீனமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
மலையக மக்களின் பேரம் பேசும் சக்தி மழுங்கடிக்கப்பட்டுள்ளது. தேயிலை ஆராய்ச்சி நிலையங்கள், விவசாய திணைக்களங்கள் இருந்தும் களை நாசினி, பூச்சி கொல்லிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளமையால் தேயிலை மலைகள் காடாக்கப்பட்டுள்ளன. விஷசந்துக்கள் தேயிலை மலையகளில் குடியேறி விட்டன,தொழிலாளர்களை குளவிகள் துரத்தி துரத்தி தாக்குகின்றன,சுகாதாரம் சீர்குழைந்து விட்டது.
தோட்ட நிர்வாகங்கள் பாலாகி வருகின்றது.தோட்ட அதிகாரிகள் தொழிலாளர்களை மதிக்காது நடப்பதும் சர்வாதிகாரமாக செயற்படுவதும் அதிகரித்துக்கொண்டே செல்கின்றது.
இதனால் எதிர்காலத்தில் தோட்ட தொழிலாளர்களுக்கு வேலையில்லாமல் போகும் நிலை ஏற்படும். நாங்கள் உங்களை இந்த தேயிலை தோட்டங்களை நம்பி வாழ சொல்லவில்லை. இந்த தோட்டங்கள் தான் நமது இருப்பிடம் இதனை யாருக்கும் விட்டக்கொடுக்க வேண்டாம் என கூறுகின்றோம். நாம் தேயிலை தோட்டங்களில் கஸ்டப்பட்டு உழைத்த எமது பணத்தை கூட (சேம இலாப நிதி) இன்று பெறமுடியாமல் இருக்கின்றது. இதனை கூட கம்பனி காரர்கள் வழங்க முடியாத நிலை ஏறப்பட்டுள்ளது.
அன்று தொழிலமைச்சர் கூறினார் மூன்று கம்பனிகளுக்கு 1702 மில்லியன் ரூபா நிதி தேவைப்படுகின்றது என்று. இதனை தொழிலாளர்கள் பெற்றுக்கொள்ள குறைந்தது மூன்று ஆண்டுகள் ஆகும். மலையக மக்கள் இனிமேலும் பொய் பிரச்சாரங்களை நம்பி வாக்களிக்காதீர்கள் சரியான தலைமைத்துவத்தை சரியான தருணத்தில் தெரிவு செய்யுங்கள் அப்போதுதான் நமது சமூகம் ஏனைய சமூகத்துடன் தலைநிமிர்ந்தும் பேரம் பேசும் சக்தி மிக்க சமூகமாக காணப்படும்.
நல்லொதொரு தலைவன் எம்மிடம் இல்லாமல் போனால் எமது சமூகத்திற்கே பாரிய வீழ்ச்சி ஏற்படும் எனவே நீங்கள் சமூக ரீதியில் சிந்தித்து வாக்களியுங்கள்.இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மக்களுக்காக போராடிய அமைப்பு அதனை எவராலும் மறுக்கவோ மறைக்கவோ முடியாது என்றார்.
