ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ்-
அம்பாரை மாவட்டத்திலுள்ள நிந்தவூர்க் கடற்கரைப் பிரதசத்தில் இன்று காலை மழையுடன் கூடிய திடீர் மினிச் சூறாவளி வீசியுள்ளதால், அப்பிரதேச மீனவர்களும், அவர்களது குடியிருப்புக்களும்( வாடிகளும் ) வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளன என்று எமது பிராந்திய செய்தியாளர் தெரிவிக்கின்றார்.
இம்மினிச் சூறாவளியினால் 100 மீனவர்களுக்குச் சொந்தமான அல்-மினா கரைவலை மீனவர் சங்க மீனவர் குடியிருப்பும் (வாடி)யும், அவர்கள் தொழிலுக்குப் பயன்படுத்தும் உபகரணங்களும் முற்று முழுதாகச் சேதமடைந்துள்ளது. இதனால் தமது தொழிலைத் தொடர்வதில் சிரமங்களை எதிர்கொள்வதாக மீனவர்கள் கவலையைத் தெரிவித்துள்ளனர்.
இன்று காலையிலிருந்து வானம் மப்பும், மந்தாரமுமாகக் காட்சியளிப்பதோடு, தொடர்ந்தும் மழை பெய்து கொண்டிருக்கிறது.
இம்மினிச் சூறாவளி காலை 11.30 மணியளவில் நிந்தவூர் 8ம், 9ம் பிரிவுக் கடற்கரைப் பிரதேசத்தை மட்டுமே தாக்கியுள்ளது. ஏனைய பிரதேசங்களுக்கு இதன் தாக்கம் உணரப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கதாகும். ஆனால் மழை தொடர்ந்தும் பெய்து கொண்டிருக்கிறது.

