இந்த நாடு பௌத்தர்களை அதிகம் கொண்ட நாடு. இந்த நாட்டின் அரசியலமைப்பில் பௌத்த மதத்துக்குரிய இடம் பாதுகாக்கப்படுகின்றது. சமூகத்தில் அதற்குரிய முதன்மைத் தன்மை பாதுகாக்கப்படுகின்றது. புத்த பெருமான் போதித்ததெல்லாம், குரோதத்தினால், குரோதத்தை வெல்ல முடியாது என்பதாகும். குரோதமில்லாத நிலையினாலேயே குரோதத்தை வெல்ல முடியும்.
எமது இனத்துக்கு பௌத்த மதத்தைப் போதிப்பதன் மூலம் வழிகாட்ட நடவடிக்கை எடுக்கப்படும். தேவையில்லாத பிரச்சினையை உருவாக்கிக் கொண்டு, வீணான அச்சத்தை தோற்றுவித்துக் கொண்டு, பொருளாதாரத்தை அழித்துக் கொண்டு, மக்களைப் பிரித்துக் கூறுபோடுவதற்கு நாம் இடமளிக்கப் போவதில்லையெனவும் பிரதமர் கூறியுள்ளார்.
அரசியலமைப்பு ஒழுங்கமைப்புக் குழுவினால் தயாரிக்கப்பட்ட இடைக்கால அறிக்கை, இன்று பாராளுமன்றத்தில் கூடிய அரசியலமைப்பு சபையிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
அரசியலமைப்பு ஒழுங்கமைப்புக் குழுவின் தலைவர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் இவ்வறிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
இதன்போதே அரசியலமைப்பில் பௌத்த மதத்துக்குள்ள இடம் குறித்து பிரதமர் கருத்துத் தெரிவித்துள்ளார்.
இந்த அறிக்கை பாராளுமன்றத்தில் விரிவாக விவாதிக்கப்படும். மக்கள் அரங்கில் பேசுபொருளாக மாற்றப்படும். இதன் மூலம் முழுநாட்டுக்கும் பொருத்தமான அரசியலமைப்பு தயாரிக்கப்படல் வேண்டும் என்பதே எதிர்பார்ப்பாகும்.
ஒக்டோபர் மாதத்தில் பாராளுமன்றம் கூடாத ஒரு நாளில் அரசியலமைப்பு சபையைக் கூட்டி இந்த அறிக்கையை விவாதிப்பதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.(டைலிசிலோன்)
