அரச வைத்தியர்கள் மற்றும் மின்சார சபை ஊழியர்களுக்கெதிரான மக்கள் போராட்டத்தின் அவசியம்

ரச தொழிலொன்று கிடைத்து விடாதா என்று அலையும் எம்மவர்கள் அது கிடைத்ததன் பிற்பாடு அந்தப் பொறுப்பினை தார்மீகமாகச் செய்வது ரொம்பவும் அரிது. மக்களின் வரிப்பணத்திலிருந்தே ஊதியம் பெறும் அவர்கள் அந்த மக்களையே அடமானம் வைத்து பிளைப்பு நடாத்துகின்றமை ரொம்பவும் அநீதியான விடயமாகும்.

எல்லாவற்றுக்கும் வேலை நிறுத்தம், போராட்டம் என்றே காலத்தைக் கடத்திக்கொண்டிருக்கிறார்கள். இத்தகையோர் தாம் சார்ந்த துறைகளின் சீர்திருத்தம் மற்றும் சேவை விரிவுபடுத்தல் போன்ற பொது நன்மைகளை அடிப்படையாக வைத்து எந்தப் போராட்டத்தினையும் முன்னெடுப்பது கிடையாது. அனைத்தும் தமது சொந்த லாபங்களை முன்னிறுத்தியே மேற்கொள்ளப்படுகின்றமை இவர்களது மிலேசத்தனத்திற்கு சிறந்த எடுத்துக்காட்டாகும்.

அதாவது ஆசிரியர்களாக இருந்தால் அவர்கள் ஒருபோதும் பாடத்திட்ட ஒழுங்குபடுத்தல் பற்றியோ மாணவர்களுக்கான விமோசனங்கள் பற்றியோ எந்தப் போராட்டங்களையும் முன்னெடுப்பதில்லை. அவர்களது சம்பள உயர்வு மற்றும் சலுகைகள் கோரியே பெரும்பாலான போராட்டங்களை மேற்கொள்ளுகின்றனர்.

அதுபோல வைத்தியர்களாக இருந்தால் நோயாளிகளுக்கான வசதிகளை விஸ்தீரணப்படுத்துதல் மற்றும் மருந்துப் பொருட்களுக்கான பற்றாக்குறையை சரிசெய்தல் நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மனித மற்றும் பௌதீக வளங்களை அதிகரித்தல் போன்ற பொது இலக்குகளுக்காக வேண்டி ஒருபோதும் குரல் கொடுப்பதுமில்லை, போராடுவதுமில்லை. மாறாக தமது சம்பள உயர்வு மற்றும் தமது தனித்தன்மையைப் பேணுதல் போன்ற சுய இலாபங்களுக்கான போராட்டங்களே அதிகம்.

இத்தகைய போராட்டங்களில் விசேடமான விடயம் என்னவென்றால் இவை அனைத்தினாலும் பாதிக்கப்படுவதும் துன்புறுவதும் அவர்களுக்கு ஊதியம் வழங்குகின்ற பொதுமக்கள்தான். எமது வரிப்பணத்தை ஊதியமாகப் பெறும் இவர்கள்தான் அரசாங்கத்திற்கெதிரான போராட்டம் என்ற பெயரில் எம்மை துன்புறுத்திக்கொண்டிருக்கிறார்கள். அரசாங்க நிறுவனங்களுக்கும் அவர்களுக்குமிடையில் நிலவுகின்ற பிரச்சினைகளுக்கு பொதுமக்களைப் பகடைக்காய்களாகப் பயன்படுத்துவது அநாகரிகத்தின் உச்சமாகும்.

இந்த விடயங்களைச் சரிசெய்வதற்கு,

1. அரச ஊழியர்களை உள்ளீர்ப்புச் செய்யும் அரச நெறிமுறைக் கோட்பாடுகள் இறுக்கமான முறையில் சரிசெய்யப்படல் வேண்டும்.
2. அரச ஊழியர்களுக்கான போராட்ட உரிமை பொது மக்களைப் பாதிக்காத வகையில் சட்டமியற்றப்படல் வேண்டும். பிரான்சில் இத்தகைய நடைமுறை பின்பற்றப்படுகிறது.

இவ்வாறான விடயங்கள் அரசால் ஒழுங்குபடுத்தப்பட்டால் ஏராளமான நன்மைகள் உண்டு.
1. சமூக அக்கறையுள்ளவர்கள் மாத்திரமே அரச பணிகளுக்கு ஆர்வங்காட்டுவர்
2. அரசாங்கத்திடம் வேலை கோரி நடாக்கின்ற ஆர்ப்பாட்டங்களும் போராட்டங்களும் குறைந்து சுயதொழிலில் இளைய சமூகம் ஆர்வங்காட்டத் தொடங்கும்
3. அரச ஊழியர்களிடமிருந்து வினைத்திறனான சேவைகளை தேசம் அனுபவிக்கும்

எத்தனையோ இளைஞர்கள் தமக்கு அரச பணியில் ஈடுபடும் வாய்ப்புக்கிடைக்காதா என்று வெளியே காத்துக்கிடக்கிறார்கள். அவர்களை மேற்சொன்ன கோட்பாடுகளின் கீழ் இணைத்துக்கொளவதோடு பழைய சுயநல அரச அலுவலர்களை உடனடியாக வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகளை மேள்கொள்வதாக அரசு அறிவிக்க வேண்டும். இந்த அறிவிப்பை அடுத்து பாதிப்பேர் அடங்கிவிடுவார்கள்.

இவையெல்லாம் நடக்கவில்லையென்றால் எம்மைத் துன்புறுத்தும் அரச ஊழியர்களின் போராட்டத்திற்கெதிராக பொதுமக்களாகிய நாம் நாடு தழுவிய போராட்டத்தில் இறங்கவேண்டும். இத்தகைய சுயநலம் பிடித்த அரச ஊழியர்களை உடனடியாக அரச பணியிலிருந்து நீக்கி புதியோர்களுக்கு வாய்ப்பளித்து சேவைகளை முன்னெடுக்குமாறு எமது போராட்டக் கோசம் அமையவேண்டும். இது தேசத்தின் ஒவ்வொரு குடிமகனினதும் உரிமையும் கடமையுமாகும்.

அரசால் அவர்கள் பாதிக்கப்படுவதாகக் கோசமிட்டு அவர்கள் செய்கின்ற போராட்டத்தைத் அவர்களால் பாதிக்கப்படும் நாமே தடுக்கவேண்டும்.
அரச வைத்தியர்கள் மற்றும் மின்சார சபை ஊழியர்கள் ஆகியோரின் போராட்டத்திற்கு எதிராக பொதுமக்களாகிய நாம் எல்லோருமாக ஒன்றிணைந்து நாடு தழுவிய போராட்டத்தை முன்னெடுப்போம், வாருங்கள்...!

ரா.ப.அரூஸ்

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -