அடிக்கடி
காணும் நிறம்
சிலருக்கு வானில்
பலருக்கு போணில்
கடலில் நீலம்
பார்வையின்
பலவீனத்தை
பகிரங்கப்படுத்தும்
உடலில் நீலம்
உள்ளே போனது
உயிருக்கு விஷமென
உசார் படுத்தும்
படத்தில் 'நீலம்'
பார்க்காதவன்
பாக்கியசாலி
பார்த்தவன்
'பக்கி'ய சாலி
வைரத்தில் நீலம்
பூமியை சில நேரம்
புரட்டிப் போட்டிருக்கிறது
உறவாடிய தலைகளையும்
உருட்டிப் போட்டிருக்கிறது
நெருப்பில் நீலம்
கருப்புப் பிடிக்காது
காப்பாற்றும் பாத்திரத்தை
வெள்ளுடை நீலம்
அணிந்து தேய்ந்த
ஆடைப் பழசை
அடுத்தவர்க்குக் காட்டாது
அரணாய் நிற்கும்
கட்சி நீலம்
பச்சை நிறத்தோடு
பாரதப் போர் தொடுக்கும்
திமிங்கிலத்தில் நீலம்
ஆண்டவன் படைப்பின்
ஆச்சரியம் கூறும்
பல் நீலம் (Bluetooth)
பல்லாயிரம் தரவை
பல்லால் கடித்து
பலருக்கும் பங்கு வைக்கும்
நீலப் பட்டியல்
நீளமாய்த் தொடர்கிறது
நீலம் இருக்கும் - இந்த
நிலம் இருக்கும் வரைக்கும்
