ஆதிப் அஹமட்-
30.07.2017 அன்று நடைபெற்ற காத்தான்குடி பள்ளிவாயல் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தின் ஆண்டுப்பொதுச் சபைக் கூட்டத்தில் கூச்சல்களும், குழப்பங்களும் அமளிதுமளியும் ஏற்பட்டது.வழமைக்கு மாறாக பொலிஸார் கூட்டத்துக்கு பாதுகாப்பு வழங்கியமை என்றுமில்லாத மனதை வேதனைப்படுத்திய முக்கிய அம்சமாகும்.இவ்விடயம் தொடர்பில் காத்தான்குடி நகரசபையின் முன்னாள் தலைவரும் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான யு.எல்.எம்.என்.முபீன் ஊடகங்களுக்கு அனுப்பிய அறிக்கையில் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தனது அறிக்கையில்;
இத்தகைய கூச்சல் குழப்பம் பொலிஸ் பாதுகாப்பு போன்ற நிலைமைகள் சம்மேளனத்தின் வரலாற்றில் என்றுமே இருந்ததில்லை.இத்தகைய மோசமான சூழ்நிலையை உருவாக்கியதற்கான முழுப் பொறுப்பையும் சம்மேளனத்தின் தலைவர் எம்.எம்.தௌபீக் அதன் செயலாளர் ஏ.எல்.எம்.சபீல் நளீமி அதன் மூத்த தலைவர்களில் ஒருவரான எம்.டீ.காலித் jp மற்றும் சம்மேளனத்தின் பள்ளிவாயல்கள் நம்பிக்கையாளர்கள் தெரிவுக்குளுவுமே பொறுப்பேற்க வேண்டும்,அத்துடன் மேற்சொன்ன மூன்று பொறுப்புமிக்க தலைவர்களின் ஒருதலைப் பட்சமான செயற்பாடே குழப்பங்களுக்கு காரணமாக அமைந்திருந்தமையினை பின்வரும் விடயங்களூடாக அறிந்துகொள்ள முடியும்.
மேற்படி கூச்சல் குழப்பங்கள் முதலாம் குறிச்சி மீரா ஜும்ஆப் பள்ளிவாயலின் நிர்வாக சபையினரை பிரதிநிதித்துவப்படுத்திய நபர்களினாலே ஏற்படுத்தப்பட்டது.இவர்கள் சபையில் அநாகரிகமான முறையிலும் சபை ஒழுங்கை மீறிய வண்ணம் செயற்ப்பட்டனர்.சம்மேளனத்தின் பொதுச்சபை கூட்டத்தை நடத்த விடாமல் தமது பள்ளி சார்பான பிரச்சினையை முதலில் கதைக்க வேண்டுமென்று கோரிக்கையை முன் வைத்தனர்.
இக்கோரிக்கையின் பின்னால் சம்மேளனத்தின் புதிய தலைவர் தங்களுக்கு தரப்பட வேண்டும் என்ற அம்சமே பிரதானமாக அமைந்திருந்தது. இத்தனைக்கும் 2016 ஜூன் 15ம் திகதியன்று சுபைர்CC தலைமையிலான மீரா ஜும்ஆப் பள்ளிவாயலின் நிர்வாக சபையின் காலம் முடிவடைந்திருந்தது. காலம் முடிவடைந்ததன் பின்னால் பள்ளிவாயலின் புதிய நிர்வாக தெரிவை நடத்தாமல் பள்ளியை அடாத்தாக பிடித்துக்கொண்டு வக்பு சபையின் கட்டளையை மீறி செயற்பட்டுக்கொண்டிருக்கும் சுபைர்CC தலைமையிலான குழுவினரே சம்மேளனத்தின் புதிய தலைமைத்துவத்தை அடாவடித்தனமாக பெற்றுக்கொள்ள முயற்சித்தமை சம்மேளன வரலாற்றில் ஒரு கறை படிந்த நிகழ்வாக மாறியிருக்கிறது.
சுபைர்CC தலைமையிலான நிர்வாக சபையினர் மீரா ஜும்ஆப் பள்ளிவாயலை மீண்டும் நிர்வாகம் செய்வதில் எமக்கு எந்த ஆட்சேபனையும் கிடையாது. அவர்களின் நிர்வாக காலத்தில் பள்ளிவாயலை சிறப்பாக நிர்வாகம் செய்ததை நாம் அறிவோம். மாறாக நிர்வாக காலம் முடிந்தால் மீண்டும் உரிய தெரிவை நடத்தி மஹல்லா வாசிகளால் மீண்டும் தெரியப்பட்டே நிர்வாகத்திற்கு வர வேண்டும்.
மேற்படி மீரா ஜும்ஆப் பள்ளிவாயலின் நிர்வாகக் காலம் முடிவடைந்தமை, அந்நிர்வாகத்திர்க்கெதிரான ஜமாஅத்தார்களின் செயற்பாடு,நிர்வாகத்துக்கு எதிரான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டமை,நிர்வாகத்திற்கெதிரான வக்பு சபையின் கட்டளைகள் உதாசீனப்படுத்தப்பட்டமை,முஸ்லிம் சமய கலாச்சார விவகார திணைக்களத்தின் உத்தியோகத்தர்கள் மற்றும் காத்தான்குடி பிரதேச செயலாளர் உள்ளிட்டவர்கள் சுபைர்CC தலைமையிலான குழுவினரால் அவமானப்படுத்தப்பட்டமை போன்ற விடயங்களை தெரிந்து கொண்டே மேற்சொன்ன சம்மேளனத்தின் மூன்று தலைமைப் பொறுப்பிலுள்ளவர்கள் சுபைர்CC தலைமையிலான காலாவதியடைந்த நிர்வாகத்திற்கு சாமரம் வீசியமையினால் ஏற்பட்ட குழப்பங்களே 30.07.2017இல் இடம்பெற்ற சம்மேளன பொதுச் சபைக் கூட்டத்தில் அரங்கேறியது.
கடந்த 15.06.2016இல் முடிவடைந்த மேற்படி நிர்வாக சபைக்கு எதிராக அத்திகதிக்கு முன்பதாகவே பல்வேறு குற்றச்சாட்டுகளை தெரிவித்து முதலாம் குறிச்சி ஜமாஅத்தாரினால் முறைப்பாடு ஒன்று ஜனாதிபதிக்கு முன்வைக்கபட்டிருந்தது. இது தொடர்பிலான விசாரணையை மேற்கொள்ளுமாறு வக்பு சபைக்கு மேற்படி கடிதம் ஜனாதிபதி செயலகத்தினால் அனுப்பப்பட்டிருந்தது. இதன் பின்னர் 30.08.2016இல் அப்போதைய சுபைர்CC தலைமையிலான நிர்வாகத்தினரையும், ஜமாஅத்தார்களையும் அழைத்து வக்பு சபையினால் ஒரு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இவ் விசாரணையின் பின் புதிய நிர்வாகத்தை தெரிவு செய்ய தேர்தல் நடாத்துவதென வக்பு சபை தீர்மானம் எடுத்தது.தேர்தல் ஏற்பாட்டுக்கான பொறுப்பை சுபைர்CC தலைமையிலான நிர்வாகமே பொறுப்பெடுத்தும் இருந்தது.ஆனால் தேர்தல் ஏற்பாடுகளை செய்யாமல் சட்டவிரோதமான முறையில் தமது நிர்வாகத்தை நடாத்திக்கொண்டிருந்தனர்.
மீண்டும் 2016 ஒக்டோபர் மாதத்தில் ஜமாஅத்தார் சங்கத்தினர் வக்பு சபையை கொழும்புக்கு சென்று சந்தித்து மேலும் ஒரு முறைப்பாட்டை செய்தனர். அதற்கு அமைவாக 2017.01.27 இல் தேர்தல் நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்யுமாறு காத்தான்குடி முஸ்லிம் சமைய பண்பாட்டலுவல்கள் திணைக்கள கிளையினூடாக மீரா ஜும்ஆப் பள்ளிவாயல் நிர்வாகத்துக்கு வக்பு சபை அறிவித்தல் விடுத்திருந்தது.
மேற்படி வக்பு சபையின் கட்டளைகள் சுபைர்CC தலமையிலான நிர்வாகத்தினரால் உதாசீனப்படுத்தப்பட்டதால் 08.05.2017இல் வக்பு சபையினால் காத்தான்குடி பிரதேச செயலாளர் தலைமையில் மீரா ஜும்ஆப் பள்ளிவாயலுக்கான இடைக்கால நிர்வாக சபை நியமிக்கப்பட்டு பள்ளியின் பொறுப்புகளை இடைக்கால நிர்வாகத்தினரிடம் ஒப்படைக்குமாறு பழைய நிர்வாக சபைக்கு அறிவித்திருந்தது.
இதன் பிறகு இரண்டு தடவைகள் மேற்படி பள்ளிவாயலின் பொறுப்புகளை பாரமெடுப்பதற்காக சென்ற இடைக்கால நிர்வாகத்தினர் பழைய நிர்வாக சபையினால் அவமானப்படுத்தப்பட்டதுடன் முஸ்லிம் சமய கலாச்சார திணைக்கள அதிகாரிகளையும் அவமானப்படுத்தினர்.
மேற்படி இடைக்கால நிர்வாக சபையிடம் பள்ளியின் பொறுப்புக்களை பாரம் கொடுப்பதில் மறுத்து வந்த சுபைர்CC தலைமையிலான பழைய நிர்வாகத்தினருக்கு மேற்சொன்ன சம்மேளனத்தின் மூன்று தலைவர்களும் ஆதரவாக செயற்பட்டனர். இலங்கை வக்பு சபையின் கிழக்கு மாகாணத்துக்கான பிரதிநிதியான எஸ்.எச்.ஆதம்பாவா மதனியை இரண்டு தடவைகள் சந்தித்து இடைக்கால நிர்வாகத்தினரிடம் பள்ளியை பொறுப்பு கொடுப்பதை தாமதப்படுத்தி தடை ஏற்படுத்தினர். இவ்விடயம் தொடர்பில் நான்(முபீன்), ஆதம்பாவா மௌலவியை கடந்த றமழானில் சந்தித்து வினவினேன். அதற்கு அவர் “பள்ளிவாயல்கள் சம்மேளனம் தன்னை சந்தித்ததாகவும் அவர்களின் கோரிக்கையை மறுக்க முடியவில்லை, நோன்புப்பெருநாள் முடிந்து நிர்வாக தெரிவை நடத்துவதாக” தெரிவித்தார்.
சம்மேளனத்தின் பிரதான நோக்க்கங்களில் ஒன்றாக பள்ளிவாயல்கள் தைக்காக்களின் ஒன்றுபட்ட நிர்வாகத்தினை ஏற்படுத்தல் என்பது சம்மேளன யாப்பு ரீதியானதாகும்.
ஏன் மீரா ஜும்ஆப் பள்ளிவாயல் விடயத்தில் இந்த நோக்கத்தை சம்மேளனம் நிறைவேற்றவில்லை ?
காலம் முடிந்த நிர்வாகத்தை நீடிப்பதற்கு இவர்கள் ஏன் அக்கறை எடுக்க வேண்டும்?
அடாவடித்தனமாகவும் வன்முறையையும் கையாளும் சுபைர்CC தலைமையிலான நிர்வாகத்தை தட்டி கேட்க முடியாமல் தடுமாறிய சம்மேளனம் ஏனைய பள்ளிவாயல்களின் தெரிவை எதிர்காலத்தில் சுமூகமாக நடாத்த முடியுமா?
பள்ளிவாயல் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தின் பிரதான குழுக்களில் பள்ளிவாயல்கள் நம்பிக்கையாளர் தெரிவுக்குழுவும் ஒன்றாகும்.இக்குழு நித்திரையில் இருந்ததா?
ஊரில் வருமானம் குறைந்த ஏழைப்பள்ளிவாயல்கலை பாரமெடுக்க போட்டியில்லாத போது காசு கொட்டும் பள்ளிவாயல்களின் பதவியை அடைந்துகொள்ள பயங்கர போட்டி நிலவுவது ஏன்?
கண்டனம் தெரிவித்தல்
நேற்றைய சம்மேளன பொதுச் சபைக் கூட்டத்தில் சுபைர்CC தலைமையிலான நிர்வாக குழுவினர் நடந்து கொண்ட முறைமைக்கு எனது வன்மையான கண்டனத்தை தெரிவிக்கிறேன். சபை ஒழுங்கு மீறி உலமாக்கள், பெரியவர்களுக்கு முன்பாக அடாவடித்தனத்தை பிரயோகித்தமை மிகப்பிழையான முன்னுதாரணமாகும். ஊரின் இரு கண்களான ஜம்இய்யத்துல் உலமா மற்றும் பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம் கேவலப்படுத்தப்பட்டமை மன்னிக்க முடியாத குற்றமாகும். தங்களது பதவி ஆசைக்காக நமது ஊரில் நமது தலைவர்களின் அயராத உழைப்பினால் ஒழிக்கப்பட்ட குறிச்சி பிரதேச வாதங்களை தூண்டும் வகையில் சகோதரர் ஏ.ஜே.எம்.அனீஸ் ஆற்றிய உரை மிகவும் கண்டிக்கத்தக்கது.
இறுதியாக,
ஊரின் தலைமைத்துவ நிறுவனங்களின் கட்டுக்கோப்பு பாதுகாக்கப்பட வேண்டும். தலைமைத்துவத்தில் உள்ளவர்களின் பிழையான செயற்ப்பாடுகளால் ஊரின் கட்டுக் கோப்பு சிதைக்கப்படக்கூடாது. பள்ளிவாயல்களின் நிர்வாகத்தை சீரமைக்கும் விடயத்தில் சம்மேளனம் உறுதியான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும்.இல்லாவிட்டால் அப்பொறுப்பை வக்பு சபைக்கு விட்டுவிட வேண்டும்.
சம்மேளனத்தின் பிரதான உபகுழுவான பள்ளிவாயல் நம்பிக்கையாளர் தெரிவுக்குழு அர்ப்பணிப்புடன் செயற்பட்டாலும் அது யாப்பு ரீதியாக வலுப்படுத்தப்பட வேண்டும். சம்மேளனத்தின் செயற்ப்பாடுகளை சீர்குலைப்பவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் சரத்துகளை சம்மேளன யாப்பில் உள்வாங்க வேண்டும் என முபீன் தெரிவித்துள்ளார்.