அகமட் எஸ்.முகைடீன்-
பல்கலைக்கழகத்தில் எனது மதிப்புக்குரிய ஆசானாக திகழ்ந்த யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியனை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தை சட்டத்தரணி என்ற வகையில் வன்மையாக கண்டிப்பதாக பிரதி அமைச்சர் ஹரீஸ் தெரிவித்தார்.
யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியனை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகம் தொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் விடுத்துள்ள கண்டண அறிக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
பிரதி அமைச்சர் அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கையில், இன, மத வேறுபாடின்றி நீதியாக செயற்படுகின்ற யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் இச்சம்பவத்தில் தெய்வாதீனமாக உயிர்தப்பினார். அவர் கடந்தகாலங்களில் சமூக விரோத செயல்களை கட்டுப்படுத்தும் வகையில் துணிச்சலாக நீதித்துறை சார்ந்த நடவடிக்கைகளை மேற்கொண்டார். அதன் காரணமாக அவருக்கு உயிர் அச்சுறுத்தல் இருந்ததை அனைவரும் அறிவர். அவரை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகம் நீதித்துறைக்கு எதிரான துப்பாக்கி பிரயோகமாகவே பார்க்கப்படுகிறது.
பொலிஸ் ஊடகப் பேச்சாளர் இத்தாக்குதல் நீதிபதி மா.இளஞ்செழியனை இலக்குவைத்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் அல்ல என்று கூறிய விடயத்தை யாராலும் ஏற்றுக் கொள்ள முடியாது. பொலிஸார் குறித்த நிகழ்வை திசை திருப்புவதற்கு முயற்சிக்காது இத்தாக்குதலின் பிரதான சூத்திரதாரியை விரைவில் கைது செய்யும்வகையில் தீவிரமாக செயற்பட்டு குற்றவாளி சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும்.
அதேவேளை நீதிபதி மா.இளஞ்செழியனை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் உயிரிழந்த பொலிஸ் சார்ஜன்ட் சரத் ஹேமச்சந்திரவுக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கின்றேன்.
