முஸ்லிம்களின் அரசியல் நகர்வுகள் ஆளுமைமிக்க தலைவர்கள் இல்லாது பயணித்திற்கு கொண்டிருப்பதை மர்ஹூம் அஷ்ரஃப்பின் மரணத்திற்கு பின்னர் உணரக் கூடியதாக உள்ளது. ஒரு சமூகத்தை அரசியல் ரீதியாக வழி நடத்தக் கூடியவர் அச் சமூகத்தின் குரலாக இருக்க வேண்டும் என்பது அரசியல் கொள்கையாகும். அரசியல் ரீதியான அடக்குமுறைகளை கையாளும் போது சமூகம் சார்ந்த சாதகமான தீர்மானங்களை மேற்கொள்வது அரசியல் தலைவனின் மிக முக்கியமான வகிபாகமாகும்.
இன்றைய சூழ்நிலையை பொறுத்தவரையில் முஸ்லிம் அரசியல் தலைவர்கள் என தங்களை அளையாடப்படுத்தி,பணங்களை கொடுத்து தங்களை தலைவர்கள் என விளம்பரபடுத்தத சொல்லும் பெயரளவிலான தலைவர்கள் சமூகம் சார்ந்த தீர்மானங்களை மேற்கொள்கிறார்களா?என வினா தொடுக்கின்ற போது விடை சமூகம் சார்ந்ததல்ல தங்களது சுய இலாபம் கருதிய தீர்மானங்களாகவே இருக்கிறது என கிடைக்கப்பெறும்.
எம் சமூகத்தில் உள்ள பலர் தலைவர்களை எப்போதும் அண்ணார்ந்து தேடுவதையே வழக்கமாக கொண்டுள்ளனர்.தலைவன் என்பவன் உயரத்தில் இருக்க வேண்டும்,பண பலம் படைத்தவனாக இருக்க வேண்டும் என நினைக்கிறார்களே தவிர அவன் தூயவழியில் சமூகத்தை வழிநடாத்துவானா?என சிந்திப்பதில்லை.உயரத்தில் இருக்கும் ஒருவனால் மாத்திரமே தலைமை வகிக்க முடியும் என்றிருந்தால் மறைந்த அரசியல் தலைவர் அஷ்ரப் முஸ்லிம் அரசியலின் விடிவெள்ளியாக திகழ்ந்திருக்க முடியாது என்பதை எம்மில் பலர் சிந்திப்பதில்லை.
ஆளுமை மிக்க பல இளைஞர்கள் எமது சமூகத்தில் வலம் வந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் அவர்களை நாம் ஒருபோதும் உற்சாகபடுத்தியதில்லை. மாற்றமாக அவர்களின் ஆளுமைகளை எவ்வாறு மழுங்கடிக்க முடியும் என்பதையே சிந்தித்து கொண்டிருக்கின்றோம். இன்றைய இளைஞர்கள் நாளைய தலைவர்கள் என வாய்களினால் மாத்திரமே பேசி விட்டு செல்கின்றோம்.எமது நாட்டில் முஸ்லீம் சமூகம் எதிர்நோக்கும் பேரினவாத அரசியல் அடக்கு முறைக்கு எதிராக குரல் எழுப்ப கூடிய சுயநலமற்ற தலைவர்களை உருவாக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
சமூகம் சார்ந்த சிந்தனை கொண்ட இளைஞர்கள் முஸ்லிம் பிரதேசங்களில் இலைமறைகாய்களாக உலாவருகின்றார்கள் அவர்களை வெளி உலகிற்கு வெளிப்படுத்தும் முயற்சிகளை ஒவ்வொரு ஊர்களிலும் பரவலாக மேற்கொள்ள வேண்டும். தலைவன் என்பவன் எப்போதும் அண்ணார்ந்து பார்க்கின்ற உயரத்தில் இருப்பவனாக இருக்கவேண்டியதில்லை.உன் பக்கத்தில் இருக்கின்ற உன்னைப்போல் ஒருவனாகவும் இருக்கலாம் என்ற சிந்தனை எம் ஒவ்வொருவோர் மனதிலும் எழ வேண்டும். சிறந்த தலைமைத்துவம் ஒன்றை உருவாக்க இன்றே முயற்சிப்போம்.
ஜெம்சித் (ஏ) றகுமான்,
மருதமுனை.
