அம்பாறை மாவட்டத்தில் நீண்டகாலமாக நிலவிவரும் காணிப்பிரச்சினைக்கு தீர்வுகாணும் நோக்கில், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம், உயர்மட்ட குழுவுடன் நேற்று (24) திங்கட்கிழமை கள விஜயமொன்றை மேற்கொண்டார். அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் துசித பீ வணிகசிங்க, வன பரிபாலன திணைக்கள பணிப்பாளர் ஏ.ஆர்.என் முனசிங்க உள்ளிட்ட அதிகாரிகள், வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள், தொல் பொருளியல் திணைக்கள அதிகாரிகள், நில அளவைத் திணைக்கள அதிகாரிகள் உள்ளிட்ட உயர்மட்ட குழுவினர் சர்ச்சைக்குரிய இடங்களுக்குச் சென்று கலநிலவரங்களை நேரில் கண்டறிந்தனர்.
காலை 8.30 மணி தொடக்கம் மாலை 6.30 மணிவரை உணவுக்குகூட நேரம் ஒதுக்காமல் மக்களின் காணிகள் அபகரிக்கப்பட்டுள்ள வட்டமடு, கிரான் கோமாரி, வேகாமம், பாலையடி வட்டை மற்றும் கரங்கோ போன்ற இடங்களுக்கு சென்ற குழுவினர், சம்பந்தப்பட்ட காணி உரிமையாளர்களை நேரில் சந்தித்து, பிரச்சினைகளை தீர்ப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து ஆராய்ந்தனர்.
இதன்போது, வட்டமடு விவசாயிகள் தங்களது பிரச்சினைகள் தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு விளக்கமளித்ததுடன், இப்பிரதேசத்தில் விவசாய நடவடிக்கை எதிர்காலத்தில் மேற்கொள்வதுக்கான உறுதிமொழியினையும் வன பரிபாலன திணைக்கள தலைவரிடமிருந்து பெற்றுக்கொண்டனர்.
இவ்விஜயத்தில் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம். சல்மான், எம்.ஐ.எம். மன்சூர், மாகாணசபை உறுப்பினர்களான ஆரிப் சம்சுதீன், ஏ.எல். தவம், அமைச்சின் இணைப்புச் செயலாளர் யூ.எல். முபீன், கட்சியின் அக்கரைப்பற்று அமைப்பாளர் எஸ்.எல்.எம். ஹனீபா மதனி, உயர்பீட உறுப்பினர் பளீல் பி.ஏ., கட்சி முக்கியஸ்தர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள், பாதிக்கப்பட்ட மக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.




