கிழக்கில் சுகாதாரத்துறை பாரிய அபிவிருத்திகளை கண்டு வருகின்றது - ஷிப்லி பாறுக்

எம்.ரீ.ஹைதர் அலி-
கிழக்கு மாகாண முதலமைச்சர் கௌரவ. நசீர் அஹமட் தலைமையிலான மாகாண சபை ஆட்சி அமையப்பெற்ற மிகக் குறுகிய காலத்திற்குள் கிழக்கு மாகாண சுகாதாரத்துறை பாரிய அபிவிருத்திகளை கண்டுவருகின்றது என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் தெரிவித்தார். 

கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக்கின் முயற்சியினால் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் நிதி ஒதுக்கீட்டிலிருந்து காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் 18 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட விஷேட வைத்திய நிபுணர் விடுதி (Consultant Quarters) மற்றும் பற்சிகிச்சைப் பிரிவுடனான வெளிநோயாளர் பிரிவு (OPD) கட்டிடம் என்பனவற்றை திறந்து வைக்கும் நிகழ்வு 2017.07.13ஆந்திகதி-புதன்கிழமை நடைபெற்றது.

காத்தான்குடி தள வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் M.S.M. ஜாபிர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கௌரவ அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும்போதே கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்; 

இந்த வைத்தியசாலையில் காணப்படும் ஆளணிப் பற்றாக்குறையினை நிவர்த்தி செய்து தருமாறு மக்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுக்க தயாரானபோது இந்த வைத்தியசாலைக்கான ஆளணி வளத்தினை நான் முன்னின்று பெற்றுக்கொடுப்பதாக வாக்குறுதியளித்திருந்தேன். அதன் பிரகாரம் நான் மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு எங்களது கிழக்கு மாகாண முதலமைச்சர் கௌரவ நசீர் அஹமட் அவர்களும், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் நஸீர் அவர்களும் எனக்கு உறுதுணையாக செயற்பட்டு வருகின்றனர்.

மேலும் மக்கள் செறிவாகா வாழுகின்ற பிரதேசத்திலுள்ள அதிக நோயாளர் வரவைக் கொண்டுள்ள இத்தகைய வைத்தியசாலைக்குரிய அனுமதிக்கப்பட்ட ஆளணி எண்ணிக்கையினை 130இலிருந்து 280ஆக உயர்த்துவதற்கும் அதற்காக மத்திய அரசிலுள்ள பிரச்சினைகளை தான் முன்னின்று செயற்படுத்துவதாகவும் அதற்காக மிகவும் உறுதியோடு எமது முதலமைச்சர் அவர்கள் செயற்பட்டு வருகின்றார். மிக விரைவில் எமது வைத்தியசாலைக்கு தேவையான ஆளணி வளப் பற்றாக்குறைகளை நிவர்த்தி செய்து வழங்கவுள்ளோம். 

பௌதீக அபிவிருத்திகளைப் பொறுத்த வரையில் கிழக்கு மாகாணத்திலுள்ள ஏனைய வைத்தியசாலைகளை விட அதி விஷேட கவனமெடுத்து இந்த வைத்தியசாலையினை நாங்கள் அபிவிருத்தி செய்து வருகின்றோம். அந்த வகையில் இன்று தொடர்ச்சியாக இந்த வைத்தியசாலையில் புதிய புதிய பிரிவுகளை ஆரம்பித்து வருகின்றோம். மேலும் கௌரவ கிழக்கு மாகாண முதலமைச்சர் அவர்களின் பணிப்புரைக்கமைவாக இந்த வைத்தியசாலைக்கு மத்திய அரசினூடாக 85 மில்லியன் ரூபா நிதி எதிர்வரும் ஆண்டில் செலவு செய்வதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

எனவே எமது அதிகாரங்களைப் பயன்படுத்தி எதிர்வரும் காலங்களிலும் எம்மால் முடியுமான அனைத்துவிதமான அபிவிருத்தி வேலைத்திட்டங்களையும் தொடர்ச்சியாக முன்னெடுக்கவுள்ளோம் என தனது உரையில் தெரிவித்தார். இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாண முதலமைச்சர் கௌரவ Z. நசீர் அஹமட் அவர்களும், கௌரவ அதிதிகளாக கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் கௌரவ A.L.M. நசீர் மற்றும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் ஆகியோரும், விஷேட அதிதிகளாக சுகாதார அமைச்சின் செயலாளர் K. கருணாகரன் மற்றும் கிழக்கு மாகாண சுகாதாரத் திணைக்களப் பணிப்பாளர் K. முருகானந்தன், மட்டக்களப்பு பிராந்திய சுகாதாரப் பணிப்பாளர் திருமதி L.M. நவரட்னராஜா மற்றும் வைத்தியசாலை அபிவிருத்திக் குழுவினர், வைத்தியசாலை உத்தியோகத்தர்கள், பிரதேச பிரமுகர்கள் ஆகியோரும் கலந்து கொண்டனர்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -