இனவாத கருத்துக்களுக்கு துணைபோகும் அமைச்சர் சம்பிக்கவை அரசாங்கம் விலக்க வேண்டும் என கூறும் முஸ்லிம் காங்கிரசின் பிரதி தலைவரும் கிழக்கு முதலமைச்சருமான ஹாபிஸ் நசீர் அஹமத் முதலில் இனவாத அர்சுக்கு தாம் துணை போகாமல் தமது அமைச்சுப்பதவிகளை துறக்க முடியுமா என உலமா கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.
கல்முனையில் நடைபெற்ற கட்சி ஆதரவாளர்களுடனான கூட்டத்தில் உரையாற்றிய உலமா கட்சித்தலைவர் முபாறக் அப்துல் மஜீத் இது பற்றி தெரிவித்ததாவது
இந்த அரசில் இனவாத கருத்துக்களுக்கு துணை போகும் அமைச்சர் சம்பிக்கவே கடந்த அரசிலும் இனவாதத்தை உருவாக்கினார் என முஸ்லிம் காங்கிரஸ் இப்போது ஏற்றுக்கொள்வது காலம் கடந்த ஞானமாகும்.
அமைச்சர் சம்பிக்க முணைப்புடன் கொண்டு வரும் ஐ. தே. க தலைமையிலான நல்லாட்சி மஹிந்த ஆட்சியை விட மோசமாக இருக்கும் என்றும் சம்பிக்க இல்லாத மஹிந்தவை முஸ்லிம்கள் ஆதரிக்க வேண்டும் என பகிரங்கமாக, முழு சமூகத்தையும் எதிர்த்து உண்மை பேசிய ஒரே கட்சி உலமா கட்சியாகும். ஆனால் பணத்துக்கும் பதவிக்கும் ஆசைப்பட்டு சமூகத்தை விற்ற முஸ்லிம் காங்கிரஸ் இப்போது அமைச்சர் சம்பிக்கவை அரசை விட்டு தூக்க வேண்டும் என கூறுவது சாத்தியமற்ற மற்றும் முஸ்லிம்களை ஏமாற்ற சொல்லும் வார்த்தையாகும்.
கடந்த அரசில் அமைச்சர் சம்பிக்கவே இனவாதத்தை தூண்டுகிறார் என்று தெரிந்தும் இறுதி வரை அமைச்சு பதவிகளுக்காக ஒட்டியிருந்த முஸ்லிம் காங்கிரஸ் இந்த ஆட்சியிலும் சம்பிக்கவே இனவாத கருத்துக்களுக்கு ஒத்துழைக்கிறார் என தெரிந்தும் இந்த அரசிலும் சுயநலனுக்காகவே ஒட்டியுள்ளனர்.
உண்மையில் இனவாதத்துக்கு துணை போகும் அமைச்சர் சம்பிக்க்வை அரசிலிருந்து தூக்க வேண்டும் என்ற கோமாளித்தனமான பேச்சுக்களை விடுத்து இத்தகைய இனவாத அரசில் நாம் விலகுகிறோம் என சொல்லும் முதுகெலும்பு முஸ்லிம் காங்கிரசினருக்கு இல்லை. இது பற்றி முதலமைச்சருக்கு அக்கறை இருக்குமாயின் அவர் தனது அரச ஒத்துழைப்புடன் பெற்ற முதலமைச்சர் பதவியை வீச முன்வருவாரா என கேட்கிறோம்.
2015ம் ஆண்டைய தேர்தலின் போது முஸ்லிம் மக்கள் முடிவெடுத்ததன் காரணமாகவே நாமும் நல்லாட்சிக்கு தாவினோம் என மு. கா சொல்வது கோழைத்தனமாகும். மக்கள் அரசியல் தெளிவுள்ளவர்கள் அல்ல. அரசியல் தலைவர்களே மக்களை அரசியல் ரீதியாக வழி காட்ட வேண்டுமே தவிர மக்கள் ஓடும் பக்கம் அரசியல் வாதிகள் ஓடுவது முட்டாள்தனமானதாகும்.
இதன் காரணமாகவே முழு முஸ்லிம் சமூகமும் ஒரு பக்கம் நின்ற போதும் உலமாக்கள் தலைமையிலான உலமா கட்சி மிக தெளிவான அரசியலை மக்களுக்கு சொல்லியது. இத்தகைய வழிகாட்டலைத்தான் முஹம்மது நபியவர்கள் ஹுதைபிய்யாவில் செய்து காட்டினார்கள். மக்கள் விருப்பத்துக்கு மாற்றமாக இருந்தாலும் உண்மையின் பக்கம் நிற்க வேண்டும் என காட்டினார்கள்.
ஆகவே அமைச்சர் சம்பிக்க இனவாத கருத்துக்களுக்கு துணை போகிறார் என்ற முதலமைச்சரின் கருத்தில் உண்மை உள்ளதாயின் முதலமைச்சரும் முஸ்லிம் காங்கிரசினரும் முதலில் தமது பதவிகளில் இருந்து விலகி தாங்கள் உண்மையானவர்கள் என்பதை காட்ட வேண்டும் என உலமா கட்சி கோரிக்கை விடுக்கிறது.
